மரங்களின் வரங்கள்!: தோல் நோய்களின் எதிரி - சல்மூக்ரா மரம்
குழந்தைகளே நலமா, நான் தான் சல்மூக்ரா மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் ஹைட்ரோ கார்பஸ் லவுரி ஃபாலியா என்பதாகும்.
குழந்தைகளே நலமா, நான் தான் சல்மூக்ரா மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் ஹைட்ரோ கார்பஸ் லவுரி ஃபாலியா என்பதாகும். நான் அச்சாரியேசி குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் ஒரு பசுமை மாறா மரமாவேன். நான் கொங்கனில் தெற்கு பகுதிகளிலும், நைஜீரியா மற்றும் உகாண்டாவில் பொதுவா காணப்படறேன். இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளிலும், வெப்ப மண்டல காடுகளில் நான் அதிகமா காணப்படறேன்.
குறிப்பா, மஹாராஷ்டிரா, கேரளா, அஸ்ஸாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பெரும்பாலும் மலைப்பகுதிகளில், சாலை ஓரங்களில் என்னை நட்டு வளர்க்கிறார்கள். நான் ஒரு இலையுதிர் மரமாவேன். நான் 30 அடி முதல் 49 அடி வரை கூட வளருவேன்.
எனக்கு டையேஷியஸ் மரம் என்ற வேறு பெயரும் இருக்கு. என்னை சமஸ்கிருதத்தில் துவ்ரக் என அன்பா சொல்வாங்க. என் மரத்தின் விதைகள் மிகுந்த மருத்துவ குணம் கொண்டவை. பாராம்பரியமிக்க இந்திய மருத்துவத்திலிருந்தும், சீன மருத்துவத்திலிருந்தும் என்னை பிரிக்க முடியாது.
Advertisement
என் இலைகள் நீள் வட்டமாகவும், முனை நீளமாகவும், ஜோடிகளாக இருக்கும். என் பூக்கள் பச்சை நிற வெள்ளை இதழ்களைக் கொண்டிருக்கும். இவை ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை மட்டுமே பூக்கும். என் காய்கள் கருப்பாக இருக்கும், ஆனால் பழுக்க பழுக்க பழுப்பு நிறமாக மாறும். அவற்றில் ஏராளமான விதைகள் உள்ளன. என் விதை எடையிலிருந்து 60 முதல் 70 சதவீதம் எண்ணெய் வெளிர் மஞ்சள் நிறத்தில் எடுக்கப்படுகின்றன.
மேற்கத்திய நாடுகளில் 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தோல் நோய்கள் மற்றும் தொழுநோய்களுக்கான சிகிச்சைகள் என் விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யிலிருந்து தான் மேற்கொள்ளப்பட்டு பலர் குணமாயினர் என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
என் விதையில் ஹிட்னோகார்ப்பிக் மற்றும் சால்மூக்ரிக், கோர்லிக், ஒலியிக் மற்றும் பால்மிட்டிக் அமிலங்கள், இவற்றோடு க்ரைசோக்ரைசால், ஐசோஹிட்னோ கார்ப்பின் ஆகிய ரசாயனங்கள் நிறைய இருக்கு.
உங்களுக்கு தெரியுமா குழந்தைகளே, என் விதைகளிலிருக்கும் டேனின்களுக்கு காய்ச்சலை குணப்படுத்தும் தன்மை இருக்குன்னு. ஆங்கில மருத்துவத்தில் என் எண்ணெய், களிம்புக்கு மிகவும் மவுசு அதிகம். ஏன்னா, என் எண்ணெய்யிலிருந்து தான் தொழு நோய்க்கு மருந்து தயாரிக்கிறாங்க. அது மட்டுமில்லை குழந்தைகளே, தோல் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் என் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் தான் அருமருந்து.
ஆழமான வெட்டுக் காயம், தோல் நோயினால் ஏற்பட்ட தழுப்புகளின் அடையாளம் ஆகியவற்றினை நீக்கி உங்கள் தோலினை பழைய நிலைக்கு கொண்டு வரும் மகத்தான சக்தி என் எண்ணெய் கொண்டிருக்கிறது.
குழந்தை பிறப்பிற்குப் பின் தாய்மார்களின் வயிற்றுப் பகுதி சுருங்கி தழும்பு ஏற்பட்டிருந்தால் அவற்றை நீக்கி பழைய நிலைக்கு கொண்டு வர என் எண்ணெய்யை பயன்படுத்துங்க. நாள் பட்ட காயங்கள், கட்டிகள், புண்கள், சொறிகள் ஆகியவற்றின் மீது சல்மூக்ரா களிம்பு மேல்பூச்சாக பயன்படுத்தினால் அவை இருந்த இடம் தெரியாமல் ஓடிடுமாம் குழந்தைகளே.
குழந்தைகளே, மரங்கள் நச்சு வாயுக்களை உள்வாங்கி நீங்கள் சுவாசிக்க சுத்தமாக பிராண வாயுவை தருகின்றன. நம் முன்னோர்கள் மரங்களின் அருமையைக் கருதியே எங்களை தெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர். மரங்கள் சுற்றுச்சூழலைக் காப்பதுடன், நீங்கள் இளைப்பாற நிழலையும் தருகின்றன. நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
(வளருவேன்)