டென்மார்க்கில் தமிழ்க் கலாசாரம்!
தற்போது வரும் பல தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்தால் அது தமிழ்ப் படமா? அல்லது ஹாலிவுட் படங்களை மொழிமாற்றம் செய்துவிட்டார்களா? என்று எண்ணத் தோன்றும். அந்த அளவுக்கு மேற்கத்தியமயமாகிவிட்டது தமிழ்ச் சினிமா
த ற்போது வரும் பல தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்தால் அது தமிழ்ப் படமா? அல்லது ஹாலிவுட் படங்களை மொழிமாற்றம் செய்துவிட்டார்களா? என்று எண்ணத் தோன்றும். அந்த அளவுக்கு மேற்கத்தியமயமாகிவிட்டது தமிழ்ச் சினிமா. இதைப் பற்றி எந்த உறுத்தலுமில்லாமல் அவற்றை நாம் ரசிக்க ஆரம்பித்துவிட்டோம். ஆனால் மேற்கத்திய கலாசாரத்தில் நமது இளந்தலைமுறை மாட்டிக் கொள்ளக் கூடாதே என்று கவலைப்படுகிறார்கள் டென்மார்க்கில் வாழும் தமிழர்கள்.
அதற்காக தமது பிள்ளைகளுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுக்கிறார்கள். பரதநாட்டியத்தைக் கற்றுக் கொள்வதோடு தமிழ் வரலாற்றை, கலாசாரத்தை, பழக்க, வழக்கங்களையும் கற்றுக் கொள்கிறார்கள். டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகன் உட்பட 7 நகரங்களில் பரதநாட்டியத்தையும், தமிழ்க் கலாசாரத்தையும் கற்றுத் தருகிறார் கெüரி வசந்தி. சமீபத்தில் ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்காக சென்னைக்கு வந்திருந்த அவரைச் சந்தித்துப் பேசினோம்.
நான் சென்னையில்தான் முறைப்படி பரதநாட்டியம் கற்றுக் கொண்டேன். திருமணமானவுடன் டென்மார்க்கிற்குப் போய்விட்டேன். தமிழ்க் கலாசாரத்தில் ஆழ்ந்த பிடிப்பு எனக்கிருந்தது. எனவே அங்குள்ள தமிழ்ப் பிள்ளைகளுக்கு பரதநாட்டியத்தையும், தமிழ் கலாசார அறிவையும் கற்றுக் கொடுக்கலாம் என்று நினைத்தேன். டென்மார்க்கில் ஏழு நகரங்களில் சுமார் 80 பிள்ளைகளுக்கும் மேலாக இப்போது என்னிடம் பரதநாட்டியம் கற்றுக் கொள்கிறார்கள்.
பரதநாட்டியம் உடலுக்குச் சிறந்த பயிற்சி. உணர்வுகளை முக பாவனைகளில் கொண்டு வருவது பரதநாட்டியத்தில் இருப்பதால் மனதிற்கும் நல்ல பயிற்சி. மனதை ஒருமுகப்படுத்தவும் உதவுகிறது.
டென்மார்க்கின் வாழ்க்கை இங்கே உள்ளதற்கு நேர்மாறானது. இங்கே வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பின்பு வெளியே ஜாலியாகக் கிளம்பிவிட முடியும். ஆனால் டென்மார்க்கில் குளிர் வாட்டியெடுத்துவிடும். அதனால் வேலை முடிந்து வீட்டுக்கு வருபவர்கள் வெளியே போகவேமாட்டார்கள்.
இதனால் அக்கம்பக்கம் உள்ளவர்களுடன் உறவு, நண்பர்களுடன் தொடர்பு போன்றவை அங்கே மிகவும் குறைவு. அதுவும் டென்மார்க்கில் வாழும் தமிழ் மக்களுக்கு பிற தமிழர்களுடன் உறவைப் பேணுவது மிகவும் சிரமம்.
பள்ளியில் ஒரு வகுப்பில் இரண்டு தமிழ்ப் பிள்ளைகளே இருப்பார்கள். எனவே தமிழ்க் குழந்தைகளின் நட்பு வட்டம் மிகக் குறுகியது.
அங்குள்ள தமிழ்ப் பிள்ளைகள் அதிகமாக டேனிஷ் பிள்ளைகளுடன்தான் நட்புக் கொள்ள முடியும். இதனால் டென்மார்க்கில் வாழும் தமிழர்களின் கலாசாரமே பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் போல பெற்றோர் டென்மார்க்கில் பிள்ளைகளை அடித்துப் பயமுறுத்த முடியாது. அடித்ததை காவல்துறையிடம் சொன்னால் பெற்றோர் கம்பி எண்ண வேண்டியதுதான். எனவே இங்கே போல பிள்ளைகளை அடித்து மிரட்டிப் பணிய வைக்க முடியாது.
பதினெட்டு வயதான பிள்ளைகளுக்கு அங்கே முழு உரிமையும் கொடுக்கிறார்கள். அவர்கள் பெற்றோரை விட்டுப் பிரிந்து தனியாகத் தங்கிக் கொள்ள வசதி ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். அவர்கள் படிக்கவும் அரசு உதவித் தொகை கொடுக்கிறது. எனவே 18 வயதான பிள்ளைகள் தங்கள் விருப்பப்படி வாழ்க்கையை அங்கே அமைத்துக் கொள்ள முடியும்.
டென்மார்க்கில் இப்போது ஆதிக்கம் வகிப்பது மேற்கத்திய கலாசாரம்தான். டேட்டிங் அங்கே சர்வசாதாரணமாகிவிட்டது. கற்புநெறியைப் பேணும் நமது தமிழ்க் கலாசாரத்திலிருந்து அது முற்றிலும் மாறுபட்டது. டென்மார்க்கில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு அந்தக் கலாசாரம் இயல்பாகவே அதிக ஈர்ப்பு உடையதாக இருக்கிறது. எங்கே நமது பிள்ளைகள் நமது கலாசாரத்தை விட்டுவிடுவார்களோ என்ற பயம் அங்குள்ள தமிழ்ப் பெற்றோருக்கு உள்ளது.
மேலும் குடும்ப வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டாலும் கூட டென்மார்க்கில் பெண்களை ஆண்கள் மிகவும் மதிக்கிறார்கள். அலுவலகத்தில் கடுமையாக உழைக்கும் பெண் வீட்டிலும் கடுமையாக வேலை செய்வதைப் பற்றி நமது தமிழ் ஆண்கள் கவலைப்படுவதேயில்லை. டிவி பார்த்துக் கொண்டோ, பேப்பர் படித்துக் கொண்டோ இருப்பார்கள்.
டென்மார்க் ஆண்கள், பெண்களுக்குச் சம உரிமை கொடுக்கிறார்கள். வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். வீட்டு வேலை என்றால் அது பெண்ணுக்கு மட்டுமே உரியது என்ற மனப்பான்மை அங்கில்லை. எனவே தமிழ்ப் பெண் பிள்ளைகள் டென்மார்க் ஆண்களை விரும்புவதில் வியப்பில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் டென்மார்க்கில் வாழும் தமிழர்கள் தமிழ்க் கலாசாரத்தைக் கைவிடாமல் வளர்க்க விரும்புகிறார்கள். அதற்கு எனது பரதநாட்டிய வகுப்புகள் உதவுகின்றன.
நான் பரதநாட்டியம் மட்டுமே சொல்லிக் கொடுப்பதில்லை. தமிழர்களின் கலாசாரத்தையும் வரலாற்றையும் சொல்லிக் கொடுக்கிறேன். நமது மரபையும் வேரையும் பற்றி எடுத்துச் சொல்கிறேன். நாட்டியப் பயிற்சி மட்டுமல்ல, தமிழ் பாடல்களையும் கற்றுத் தருகிறேன். பரதநாட்டியம் பயில வரும் மாணவிகளுக்கு எழுத்துத் தேர்வும் வைக்கிறேன்.
இதனால் பள்ளிகளில் தமிழ் கற்க வாய்ப்பில்லாத தமிழ்ப் பிள்ளைகள் என் வகுப்புகளில் தமிழ் கற்றுக் கொள்கிறார்கள். இங்கு வரும் பிள்ளைகள், பிள்ளைகளின் பெற்றோர் ஒருவரையொருவர் பார்த்துப் பழக நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. தமிழர்கள் தங்களுக்குள் உறவை வளர்த்துக் கொள்ளவும் எனது வகுப்புகள் நடக்குமிடம் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
எந்த மக்களுக்கும் கலாசார அடையாளம் மிக முக்கியமானது. அதிலும் வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கோ மிக மிக முக்கியமானது. இதை டென்மார்க்கில் வாழும் தமிழர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனால் என்னால் முடிந்த கலாசாரப் பணியை நானும் செய்து வருகிறேன்'' என்றார்.