மாலைகளாக உருவாகும் நார்கள்!
வெயிலின் உக்கிரம் இரவு ஆனாலும் குறைவதில்லை. வானம் பார்த்த பூமி. ஆற்று பாசனமெல்லாம் கிடையாது. மழைக்காலங்களில் சரியாக மழை பெய்தாலும் ஆறு மாதத்திற்குத்தான் விவசாய வேலைகள் இருக்கும் என்பதுதான் சிவகங்கை மா
வெயிலின் உக்கிரம் இரவு ஆனாலும் குறைவதில்லை. வானம் பார்த்த பூமி. ஆற்று பாசனமெல்லாம் கிடையாது. மழைக்காலங்களில் சரியாக மழை பெய்தாலும் ஆறு மாதத்திற்குத்தான் விவசாய வேலைகள் இருக்கும் என்பதுதான் சிவகங்கை மாவட்டம்.
இங்குள்ள மக்கள் பெரும்பாலும் பிழைப்புத் தேடி வெளியூருக்குச் செல்கின்றனர். இம் மாவட்டத்தின் பெண்களில் சிலர் வேறு ஊர்களில் வேலை தேடி போய்க் கொண்டிருக்கின்றனர். அப்படி சொந்த ஊரை விட்டுப் பிழைப்புக்காக வேறு ஊருக்குப் போக விரும்பாத சிங்கம்புணரி பெண்கள் சிலர் சிறு தொழில் செய்து வருகின்றனர். கல்லில் நார் உரிக்கிற வேலை என்று அலுத்துக் கொள்வார்கள். ஆனால் இவர்கள் நாரில் இருந்து பல வீட்டு உபயோகப் பொருட்களை உருவாக்குகிறவர்கள்.
இந்தப் பெண்களுக்கு மதுரை களஞ்சியத்தின் தானம் அறக்கட்டளையின் சார்பில் தொழிற் பயிற்சி பெற்று சிறந்த முறையில் சாதித்து வருகிறார்கள். இந்த அறக்கட்டளையின் சிங்கம்புணரியின் ஒருங்கிணைப்பாளரான ப.தெய்வானையை சந்தித்தோம்.
""களஞ்சியம் மற்றும் காயர்போர்டு உதவியால் சிங்கம்புணரியில் ஆர்வம் உள்ள பெண்களுக்கு தேங்காய் நாரில் செய்யப்படும் பொருள்கள் பற்றி இரண்டு மாதங்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டது. இப்போதும் பயிற்சி நடந்துகொண்டு இருக்கிறது. பயிற்சி காலங்களில் உதவித் தொகையாக எழு நூற்றி ஐம்பது ரூபாய் கொடுக்கப்படுகிறது. ஒரு குழுவுக்குப் பத்து நபர்களாகப் பிரித்து இருபத்தி ஐந்து குழுக்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி முடிவில் சான்றிதழும் கொடுக்கப்படுகிறது.
இயல்பாகவே இப்பகுதியில் சிறுசிறு தொழில்களாகவும் பெரும் தொழிற்சாலையாகவும் தேங்காய் நார் உற்பத்தி செய்யப்படுகின்றது. இவை குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இதில் வரும் கழிவு நார்களில் உரம் தயாரிக்கப்படுகிறது.
பயிற்சியை முடித்த பெண்கள் தேங்காய் நாரில் "காயர் மேட்'களைத் தயாரிக்கின்றனர். இந்த மேட்கள் மூன்று வகைகள் தயாரிக்கப்படுகின்றன. இதன் விலை மேட்டின் அளவைப் பொறுத்தது. இங்கு தயாரிக்கப்படும் மேட்கள் முப்பத்தி ஐந்து ரூபாயிலிருந்து நூற்றி இருபத்தி ஐந்துவரை கிடைக்கின்றன.
கைவினைப் பொருட்களில் ஒன்றான பொம்மைகளும் தயார் செய்யப்படுகின்றன. சப்பாத்திக் கள்ளி நார்களை வைத்து "லேடிஸ் பேக்'க்கும் தயாரிக்கப்படுகின்றன. கண்ணைக் கவரும் வண்ணங்களில் இங்கு கிடைக்கின்றன.
இந்த "மேட்'களும், பொம்மைகளும், "லேடீஸ் பேக்'குகளும் தேனி, பெரியகுளம், மதுரை போன்ற இடங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் பயிற்சி முடித்தவர்கள் இந்தப் பொருட்களைத் தயாரித்து, அவர்களுக்குத் தெரிந்த வகையில் செய்து வருகின்றனர்.
பயிற்சி மூலமாகக் கிடைத்த தொழிலின் வழியாக கிடைக்கும் வருமானம் இந்தப் பெண்கள் குடும்பத்திற்கு கூடுதல் வருவாயாக இருக்கிறது. சரியான அறிமுகம் கிடைத்து பெரிய அளவில் ஆர்டர்கள் கிடைத்தால் வேலை தேடி வெளியூர் செல்ல வேண்டியிருக்காது'' என்றார் தெய்வானை.