எழுத்தை நம்பி வாழ முடியும்!
காற்றைப் போல எல்லா இடத்திலும் பரவியிருப்பது எது? என்று யாராவது கேட்டால் தயக்கமின்றிச் சொல்லிவிடலாம் விளம்பரம் என்று. ரேடியோவில், டிவியில், இதழ்களில், தெருவில் நடக்கும்போது கண்ணில்படும் பெரிய பெரிய விள
காற்றைப் போல எல்லா இடத்திலும் பரவியிருப்பது எது? என்று யாராவது கேட்டால் தயக்கமின்றிச் சொல்லிவிடலாம் விளம்பரம் என்று.
ரேடியோவில், டிவியில், இதழ்களில், தெருவில் நடக்கும்போது கண்ணில்படும் பெரிய பெரிய விளம்பரப் போர்டுகளில் எல்லாம் விளம்பரம்... விளம்பரம்... விளம்பரம்...
நீங்கள் பார்க்கும், கேட்கும் இந்த விளம்பரங்களில் பெரும்பாலானவை சென்னையில் உள்ள ஒரு கவிஞரின் சொல் வண்ணத்தில் உருபெற்றவை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
துணிக்கடை விளம்பரம் முதல் கார் விளம்பரம் வரை எல்லா விளம்பரங்களையும் எழுதித் தரும் முன்னணி கிரியேட்டிவ் ரைட்டராக இருப்பவர் கவிஞர் தியாரூ.
நெல்லை மண்ணில் பிறந்த தியாரூ, ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். நான்கு கவிதைத் தொகுப்புகளுக்கும், ஆறு மொழியாக்க நூல்களுக்கும் சொந்தக்காரர்.
கவிஞர் தியாரூவை சென்னை வேளச்சேரியில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.
""நான் இந்தத் துறையில் 14 ஆண்டுகளாக இருக்கிறேன். நான் வீட்டிலிருக்கும் போது என்னால் எழுதப்பட்ட விளம்பரங்களை டிவியில் பார்க்கிறேன். ரேடியோவில் கேட்கிறேன். வீட்டைவிட்டு வெளியே வந்தாலோ அங்கங்கே தென்படுகிற ஹோர்டிங்குகளில் என் விளம்பர வாசகங்களைப் பார்க்கிறேன். என் விளம்பர வாசகங்கள் தினம்தோறும் லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைகிறது என்பதை நினைக்கும்போது எனக்கு ரொம்பப் பெருமையாக இருக்கிறது.
நான் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பயின்றாலும் தமிழார்வம் என் கூடப் பிறந்த ஒன்று. கவிதை அதுவும் மரபுக் கவிதைகளை எளிமையாக எழுதுவதில் சின்ன வயதில் இருந்தே ஆர்வம்.
விளம்பர வாசகங்கள் எழுதுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. முந்நூறு பக்கத்தில் சொல்ல வேண்டிய செய்திகளை ஒரு வரியில் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லும் சொற்கள் மக்களின் மனதைக் கவ்விப் பிடிக்க வேண்டும்.
உதாரணமாக, நான் சென்னையில் உள்ள பிரபல துணிக்கடைகளுக்கு எழுதிய விளம்பர வாசகங்கள் ரொம்பப் பிரபலமானவை.
ஒரு துணிக்கடைக்கு நான் எழுதிய "திரும்பி வருவீங்க... விரும்பி வருவீங்க' என்ற விளம்பர வாசகங்கள் அனைவரையும் கவர்ந்தவை.
இளைஞர்களைக் கவர்ந்த விளம்பர வாசகம் என்றால், "எல்லாமே இருக்கு... நல்லாவே இருக்கு'.
இப்படி மக்களைக் கவரும்விதமாக விளம்பர வாசகங்களை எழுதும் கிரியேட்டிவ் ரைட்டர் வரிசையில் தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் நான் முன்னணியில் இருப்பதற்குக் காரணம், நான் ஒரு படைப்பாளியாகவும் இருப்பதுதான்.
கவிதை எழுதும்போது என்ன உணர்வோடு, என்ன ஈடுபாட்டோடு எழுதுகிறேனோ அதே ஈடுபாட்டுடன்தான் விளம்பரங்களையும் நான் எழுதுகிறேன்.
மக்களின் மனதை விளம்பரங்கள் தொடும்விதமாக
விளம்பர வாசகங்களை எழுதுவதற்கு முதலில் மக்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்க வேண்டும். மக்களைப் படிக்க வேண்டும். வாழ்க்கையைப் படிக்க வேண்டும். அப்போதுதான் மக்களின் மொழி தெரியும்.
விளம்பர நிறுவனங்கள் ஒரு விளம்பரத்தை என்னிடம் எழுதக் கொடுக்கும்போது அது "பி' பிரிவு மக்களுக்கா, "சி' பிரிவு மக்களுக்கா அல்லது "ஏ' பிரிவு எலைட் மக்களுக்கா என்பதைச் சொல்லிவிடுவார்கள். அதற்கு ஏற்ற மாதிரி நான் விளம்பர வாசகங்களை எழுதித் தருவேன்.
எந்தப் பொருளுக்கு விளம்பரம் தருகிறார்களோ அந்தப் பொருளைப் பற்றி, அதனுடைய போட்டி பொருளைப் பற்றியெல்லாம் மிக நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். விஷய ஞானம் இல்லாவிட்டால் விளம்பரத்துறையில் வெல்வது அரிது.
திரைப்படப் பாடல் எழுதும்போது மெட்டுக்குக் கட்டுப்பட்டு எழுதுவதைப் போல விளம்பரத்துறைக்கும் நிறைய வரையறைகள் உள்ளன. ஆனால் அதனால் எல்லாம் எனக்கு எந்தச் சிரமமும் இல்லை.
என்னுடைய விளம்பர வாசகங்களைக் கேட்ட மாத்திரத்திலேயே முழு விளம்பரமும் மக்களுக்கு நினைவுக்கு வர வேண்டும்.
விளம்பரம் எழுதும்போது வார்த்தைக்குப் பஞ்சம் வரக் கூடாது. புதுப்புது வார்த்தைகளில் புதுப் புது சிந்தனைகளைச் சொல்ல வேண்டும். எல்லாவற்றையும்விட முக்கியமானது விளம்பர வாசகங்களில் தேவைக்கு மேல் ஒரு வார்த்தைகூட இருக்காது. சொற்களை வைத்து விளம்பர வாசகங்களைச் செதுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் எல்லா விளம்பர நிறுவனங்களோடும் தொடர்பு வைத்திருக்கும் ஒரே கிரியேட்டிவ் ரைட்டர் அனேகமாக நான் ஒருவனாகத்தான் இருப்பேன்.
விளம்பரத்துறை என்னை வாழ வைத்திருக்கிறது. அதோடு திருப்தியடையாமல் நான் கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறேன். அவை விற்றுத் தீர்ந்து மறுபதிப்புகள் கண்டுவிட்டன.
நான் முதன்முதலில் சினிமாவுக்குப் பாடல் எழுதிய படம் "காதலே சுவாசம்'. டி.இமான் இசையில் உருவான அந்தப் படத்தில் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக அந்தப் படம் வெளிவரவில்லை. அதற்குப் பின்பு ஜானகி விஸ்வநாதன் இயக்கிய "கனவு மெய்ப்பட வேண்டும்' படத்துக்காக 3 பாடல்கள் எழுதினேன். அவருடைய புதிய படம் ஒன்றுக்கும் பாடல் எழுதியிருக்கிறேன். அவருடைய வீடியோ படம் ஒன்றுக்கும் எழுதினேன். விளம்பரங்களில் இடம் பெறும் பாடல்களும் என் கைவண்ணத்தில் உருவானவைதான். விஜய் ஆன்டனி, மணி சர்மா, பரத்வாஜ், டி.இமான், சுந்தர்பாபு, சுரேஷ் பீட்டர், பால்ஜேக்கப் ஆகிய இசையமைப்பாளர்கள் எனக்கு என்றும் நிழலாக இருப்பவர்கள்.
தொலைக்காட்சித் தொடர்களுக்கான டைட்டில் சாங் நிறைய எழுதியிருக்கிறேன்.
தமிழ்நாட்டில் எழுத்தை நம்பி பிழைக்க முடியாது என்று சொல்வார்கள். என்னைப் பொறுத்தளவில் தமிழ் என்னை வாழ வைத்திருக்கிறது. எனக்கு வாழ்க்கையில் கிடைத்த சகல செüகரியங்களும் தமிழால் எனக்குக் கிடைத்தவை. தமிழ் என்னை சக்ரவர்த்தி போல வாழ வைத்திருக்கிறது. கம்பனுக்குச் சடையப்ப வள்ளல் போல எனக்கு விளம்பரத்துறை வாய்த்திருக்கிறது'' என்றார் பெருமையாக.