முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

மணிக் கணக்கு முக்கியமில்லை; மனசு ஒன்றுவதுதான் முக்கியம்!

மேற்கத்திய இசை அதிகம் அறியாதவர்கள்கூட பிரம்மாண்டமாகத் தோன்றும் இந்த இசைக்கருவியைப் பார்க்காமல் இருந்திருக்க முடியாது.   நம் தமிழ் கதாநாயகர்கள் பலர் தங்கள் கவலையைப் பாடி தெரிவிக்கும்போது இந்தப் பெரிய வ

Updated On : 25 டிசம்பர், 2023 at 3:18 PM
பகிர்:

மேற்கத்திய இசை அதிகம் அறியாதவர்கள்கூட பிரம்மாண்டமாகத் தோன்றும் இந்த இசைக்கருவியைப் பார்க்காமல் இருந்திருக்க முடியாது.

நம் தமிழ் கதாநாயகர்கள் பலர் தங்கள் கவலையைப் பாடி தெரிவிக்கும்போது இந்தப் பெரிய வாத்தியத்தை வாசிப்பதைப் பார்த்திருப்பீர்கள். அந்த வாத்தியம் பியானோ. சந்தியா குமார் இந்த வாத்தியத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல வகுப்பினர்களுக்குக் கற்றுக் கொடுத்து வருகிறார். பியானோ மட்டுமின்றி கிடார், சிதார் போன்ற வாத்தியங்களையும் வாசிக்கிறார் சந்தியா.

அவருடன் உரையாடியதிலிருந்து சில பகுதிகள்:

""மிசோராமில் எனது தகப்பனார் ஒரு கமாண்டராக இருந்தார். அம்மா ஒரு மருத்துவர். அங்கே இரண்டாயிரம் ஜவான்களுக்கு மத்தியில் எங்களது வாழ்க்கை. அந்த பாண்ட் இசைதான் நான் பெரும்பாலும் கேட்ட இசை. நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற பொழுதுதான் முதன்முதலில் பியானோவையே பார்த்தேன். அந்த நிமிஷமே அதன் மீது அபார ஆர்வம் ஏற்பட, பியானோ கற்பதென்று என்னுள் முடிவாயிற்று. புணேயில் ஓர் இசைப் பள்ளியில் பயின்றேன். இசையானது பூர்வீக சொத்தாகவோ, ஒருவித பரம்பரைத் தன்மையுடனோ என்னை வந்தடையவில்லை. எங்கள் குடும்பத்தில் நான்தான் முதல் முதலில் முழுமையாக இசையில் என்னை ஈடுபடுத்திக் கொண்டவளாகிறேன்.

பெரியவர்கள் பார்த்துச் செய்த கல்யாணம் என்றாலும், என் கணவர் வசந்த் குமார் ஒரு கிடாரிஸ்ட். ஒரு இசை வல்லுனராக அமைந்தது என் பாக்கியம். திரை இசைத்துறையில் அவரைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. இளையராஜா, எம்.பி.சீனிவாசன், சலீல் சௌத்ரி மற்றும் ஷியாம் ஜோசப் ஆகியோருக்கு பேஸ் கிடாரிஸ்டாகவும், ரிதம் கிடாரிஸ்டாகவும் இருந்திருக்கிறார். ஆனால், நான் பியானோவில் வாசிப்பதைப் பார்த்து, என்னை அதிலேயே முனையச் சொன்னார்.

ம்யூஸி மியூசிக்கல்ஸ் நிறுவனத்துக்குச் சென்று அங்கு பியானோ முழுமையாகக் கற்றேன். மாஸ்டர் ஜேகப் ஜானிடம் நன்றாகத் தேர்ச்சி பெற்றேன். ரஹ்மானுக்கும் இவர்தான் குரு. என்னை ஓர் இசை ஆசிரியராகக் கண்டது, உருவாக்கியது, மாஸ்டரின் எண்ணம்தான். வித்யோதயா பள்ளியில் ஆசிரியையாகச் சேர்ந்தேன். ஜிம் -நாங்கள் மாஸ்டரை உரிமையுடன் இவ்வாறு அழைப்போம் } அவர்களுடன் இப்பொழுதும் இணைந்து இசைச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறேன். என்னிடம் பயின்றவர்கள் ம்யூஸி மியூசிக்கல்ஸில் ஆசிரியர்களாக இருக்கிறார்கள்.

எனக்கு மூன்று பெண்கள். மூவருமே இசையில் வல்லவர்கள். முதல் பெண் கிடார் மற்றும் பியானோ நன்றாக வாசிப்பார். வயலின் கலைஞர் எல்.சுப்ரமணியம் நடத்திய இசை நிகழ்ச்சிகளில் வாசித்துப் பெயர் பெற்றுள்ளார். எமிரேட்ஸின் அஜ்மானில் இசை ஆசிரியராக இருந்திருக்கிறார். இரண்டாவது மகள் ஹாலந்தில் வசிக்கிறாள். அவளும் இசையார்வம் உடையவள். இது போலவே, மூன்றாவது மகளும்... ஆனால் அவர் பதினேழாவது வயதில் இயற்கை எய்திவிட்டார்.

என் பங்காக, நான் பலதரப்பட்ட வயதினருக்கு மேற்கத்திய இசை கற்பிப்பதோடன்றி அவர்களை லண்டனில் உள்ள டிரினிடி இசைக் கல்லூரியின் (2006 முதல் இது டிரினி கில்ட்ஹால் என்று வழங்கப்படும்) தேர்வுகளுக்குத் தயார் செய்துள்ளேன். இதில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு உலகின் எந்த மூலையிலும் அங்கீகாரம் உண்டு. வேலைவாய்ப்பும் உண்டு. பியானோ மட்டுமன்றி கிடார், கீபோர்ட், இசைக் கோட்பாடுகள், வாய்ப்பாட்டு முறைகள் ஆகியவற்றிலும் மாணாக்கர்களை வெற்றிகரமாக அனுப்பியுள்ளேன்.

பியானோ வாத்தியத்தைப் பொறுத்தமட்டில் இரண்டு வகை உண்டு. கிராண்ட் மற்றும் அப்ரைட். முதலாவது கொஞ்சம் விலை உயர்ந்தது. அதை வைக்க  அதிக இடமும் தேவை. பெரும்பாலான இடங்களில் இரண்டாவது வகை உபயோகத்தில் உள்ளது. விலையும் சற்றுக் குறைவு, கச்சிதமாகவும் இருக்கும். சென்னையில் சீதோஷ்ண நிலையில் மிகுதியான மாறுபாடுகள் இல்லாததால் பராமரிப்பு சுலபமாகப் போய் விடுகிறது. இருப்பினும், டியூனிங், ஸ்ருதி கூட்டுதல், மிகமிக நுணுக்கப்பூர்வமாகச் சரியாக இருக்க வேண்டும். ராவ் இதில் கைத் தேர்ந்தவர். என் வாத்தியத்தின் உடல் நிலையைக் கவனிப்பவர் அவரே. காலால் பெடல் செய்யும் உபயோகத் தேர்ச்சியும் அவசியம். இது நாதத்தை அழுத்தியோ, மிருதுவாகவோ, சன்னமாகவோ அல்லது தேவைக்கேற்ப நீட்டியோ கொடுக்க வல்லது.

1989-ல் எனது கணவர் இறந்து போனார். நான் கற்ற இசை ஏற்படுத்திக் கொடுத்த ஓர் ஆழமான அஸ்திவாரம் என்னுள்ளே ஒரு சக்தியைத் தந்திருக்கிறது. என் தனிமையை அது வென்றிருக்கிறது.

எங்களுடைய இந்த "மார்க்ஸ் இசைப் பள்ளி' கடைப்பிடிப்பது, மணிக்கணக்கில் பயிற்சி செய்வதில் அர்த்தம் இல்லை. பத்து நிமிடம் முழு கவனத்துடன் செய்யும் பயிற்சியே முக்கியமானதாகும்'' என்கிறார் சந்தியா.

""அனைவருக்கும் இசை விற்பன்னராக ஆசைதான். இவர்களைக் கண்டெடுப்பதே என் நோக்கமாகும். "ஐ மேக் மியூசிஷியன்ஸ், நாட் மியூசிக்' (ஐ ம்ஹந்ங் ம்ன்ள்ண்ஸ்ரீண்ஹய்ள், ய்ர்ற் ம்ன்ள்ண்ஸ்ரீ)'' என்று முத்தாய்ப்பாகக் கூறுகிறார். அது ஒரு மிகக் கௌரவமான தன்னறிக்கையாக மட்டுமின்றி இசையினால் அவருக்கு உண்டான ஒருவிதத் தன்னிறைவாகவும் வெளிப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.