தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை -ஒரத்தநாடு பைபாஸ் சாலையில் வரும் புலவன்காடு பஸ் நிறுத்தத்தில் இருந்து மேற்கே செல்லும் செம்மண் சாலையில் நான்கு கிலோ மீட்டர் நடந்து சென்றால் வரும் "பொய்வுண்டார் குடிக்காடு' என்ற அழகிய சின்ன கிராமம்தான் என் ஊர்.
புலவன் காட்டிலிருந்து என் கிராமத்திற்கு நடந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இன்றைய நாகரீக மோகம் வீட்டுக்கு ஒரு இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருக்கிறது.
இரு சக்கர வாகனங்களில் அந்த மனிதர்களின் பயணங்கள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், ஆயிரம் ஒற்றையடி பாதைகளின் ரகசியத்தைக் காத்து கொண்டு என் கிராமம் எந்த ஆரவாரமுமின்றி அமைதியாகத்தான் இருக்கிறது.
அப்போதிருந்த ஒற்றையடி பாதைகள் இப்போது தார் சாலைகளாகவும், செம்மண் சாலைகள் சிமெண்ட் சாலைகளாகவும் உருவ மாற்றம் பெற்றிருக்கிறது.
ஒரு தஞ்சை உழவனை விவசாயம் நிம்மதியாக அப்போதும் வைக்கவில்லை; இப்போதும் வைக்கவில்லை என்பதுதான் உண்மை.
அதிகாலையில் மேகங்களைக் கிழித்து கொண்டு தன் கதிர் வீச்சுகளால் பூமியை முத்தமிடும் சூரியன் உதிப்பதற்குள் எழுந்து, பழைய சோற்றைப் பானைகளில் எடுத்துக் கொண்டு வயல் காட்டுக்குச் செல்லும் என் மக்கள் என்னை பிரமிக்க வைத்தார்கள்.
தீபாவளி, பொங்கலிலும் உழைப்பவர்கள் என் ஊரில் இருந்தார்கள். அவர்களுக்கு இந்திய கலாசாரத்தின் விழாக்கள் எல்லாம் பெயருக்குதான். ஆனால், இன்று கிராமத்தில் உழைப்பவர்கள் குறைந்து விட்டார்கள். விவசாயத்தின் மீது அவர்களுக்கு ஈடுபாடு இல்லை என்று சொல்வதா? இல்லை அதில் ஈடுபடுபவர்களுக்கு விவசாயம் எதையும் தரவில்லை என விவசாயத்தை குறை கூறுவதா?
சூரியன் உதிக்க ஆரம்பித்த நேரத்திலிருந்து அடங்கும் நேரம் வரை உழைத்து விட்டு வரும் அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் இன்றைய நிலையில் நூறு மட்டும்தான். அந்தச் சம்பளம் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. இளம் தலைமுறைகள் வெளியூர்களில் போய் சம்பாதிக்கத் தொடங்கி விட்டார்கள். விதைத்த நெல்லை அறுக்க அங்கே ஆள் இல்லை.
ஒரு வரப்பை எதிர் எதிர் திசையில் நின்று வெட்டி விட்டு நேர்த்தியைப் பார்க்கும் அந்த விவசாயிகளிடம் இருந்து நான் நிறையக் கற்றிருக்கிறேன்.
விவசாயத்தில் எனக்குப் பெரிய ஈடுபாடு இருந்தது. அண்டை வெட்டுவேன், களை எடுப்பேன். தாரகை முளைக்கும் வரை ஏர் ஓட்டுவேன். 60 கிலோ உர மூட்டையைத் தலையில் சுமந்து கொண்டு 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வயலுக்குச் செல்வேன். அப்போது உடலில் தெம்பும், மனதில் தைரியமும் இருந்தது. இப்போது?
உழைக்கும் போது வேட்டியை முண்டாசாகவும், உழைத்து முடித்த பிறகு முண்டாசை வேஷ்டியாகவும் உடுத்தி கொள்ளும் அந்த விவசாயி ஊருக்கே சோறு போட்டு விட்டு வறுமையோடு வாழ்கிறான் என்பது மட்டும்தான் உண்மை.
கிராமத்தில் வீட்டுத் தோட்டத்தில் வெவ்வேறு பூச்செடிகள் இருந்தன. குப்பை மேடுகளிலும், காட்டு வயல்களிலும் அலைந்து திரிந்து பூச்செடிகளைத் தேடி எடுத்து வருவது அப்போது என் பொழுதுபோக்காக இருந்தது. ரோஜாச் செடிகள் எல்லாம் அப்போது பணக்காரச் செடிகள். எல்லோர் வீட்டுத் தோட்டத்திலும் செம்பருத்தியும், மல்லிகையும் கட்டாயம் இருக்கும். சூரிய ஒளியிலிருந்து தீ விழுங்கி பூத்த மாதிரி செம்பருத்தி பூக்கள் செவ்விதழில் இன்னிசை வழங்கும். கிராமஃபோன் குழல்கள் போலிருக்கும் அதன் சின்னஞ் சிறு இதழ்களில் காற்று வந்து கச்சேரி செய்யும்.
கிராமத்தில் எல்லோர் வீட்டுத் தோட்டங்களிலும் குப்பை கொட்டி வைக்க இடம் இருக்கும். வருடம் முழுவதும் உயர்ந்து கொண்டேயிருக்கும் அந்தக் குப்பை மேட்டில் தான்தோன்றித் தனமாக பல பூச்செடிகள் முளைத்திருக்கும். பெரும்பாலும் சாமந்தியும், தக்காளியும் அவ்விடத்தில் வளர்வதுண்டு. பார்ப்பதற்கு சாமந்தி செடியும், தக்காளிச் செடியும் ஒரே மாதிரி இருக்கும். விரிந்த உள்ளங்கை விரல்கள் மாதிரி இலையும், ஏதோ ஒரு மாவட்டத்தின் வரைபடம் போல் இருக்கும் இதழ் வடிவமும், இரண்டையும் ஒன்றாகவே காட்டும். இலைகளின் சொரசொரப்புத் தன்மையை வைத்து பார்த்தால் மட்டுமே வேறுபாடு தெரியும். நிறைய தடவை தக்காளிச் செடியை நட்டு சாமந்திப் பூக்களை எதிர்பார்த்து ஏமாந்து இருக்கிறேன்.
மல்லிகை பூக்கள் காற்றில் பரவும் வாசனையுடன் பாம்புகளை அழைத்து வந்து விடும். ஆயினும் பூக்கள் பறிக்கப் போய் பாம்புகள் கடித்து இறந்ததாக கிராமத்தில் எந்த வரலாறும் இல்லை. ஒரு முறை ரோஜாச் செடி வளர்த்தேன்.
செம்மண் பாதுகாப்பில் உடைந்த முட்டை ஓடுகளையே உரமாகக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ஒளிச் சேர்க்கை தொடங்கி யாரும் கவனிக்காத ஒரு நொடியில் கறுத்த மனிதனின் உள்ளங்கை போல் ரோஜா பூத்தது. அதை செல்லப் பிள்ளையாக நான் கொண்டாடினேன்.
ஒரு கட்டத்தில் தினம் தினம் அருகில் வந்து தொட்டு பார்க்கும் என்னுடைய முகம் அதற்கு பரிச்சயமாகி நான் அருகில் சென்றாலே புன்முறுவல் செய்யும். மழை பெய்த நாளொன்றின் அந்தியில் ஏதோவொரு ஆடு கடித்து அந்த ரோஜாச் செடி தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டது இப்போதும் வடுவாக ஞாபகம் இருக்கிறது.
பூச்செடிகளை குழந்தைகள் நேசிப்பதற்கு காரணம் அதன் எட்டிப் பிடிக்கும் உயரம் எனத் தோன்றுகிறது. ஒவ்வொரு மனிதனின் சிறு வயதிலும் பூச்செடிகள் ஆயிரம் புதிர்களைப் போடுகிறது.
மாநகரத்தில் குழந்தைகளை வளர்ப்பதற்கே சிரமமாக இருக்கும் போது பூக்களை வளர்க்க இடமில்லை. மழை வெயிலில் நனைந்து லாரிகளில் மாநகரம் வந்தடையும் பூக்கள் பெரிய பெரிய பொக்கேக்களாக மாற்றப்பட்டு முக்கிய விழாக்களிலும், கொண்டாட்டங்களிலும் பரிமாறப்பட்டு வரவேற்பறையில் வாசனையும், வண்ணமும் இழந்து கருகி உதிர்கின்றன. மாநகரம் தொட்டி தொட்டியாக வீட்டிற்குள் குரோட்டன்ஸ் செடிகளை வளர்க்கிறது.
சந்திப்பு: ஜி.அசோக்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.