முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

வளம் கொடுக்கும் வாழைமட்டை!

எவரெஸ்ட் சிகரத்தைத் தொடுவது மட்டும்தான் சாதனை அல்ல; தான் வாழும் பகுதியில் பொருளாதார நிலையில் பின்தங்கிய 10 பேருக்காவது வேலைவாய்ப்பு அளித்து, அதன் மூலம் அவர்களது வீட்டில் அடுப்பு எரிவதற்கு உதவினாலும் அ

Updated On : 25 டிசம்பர், 2023 at 4:09 PM
பகிர்:

எவரெஸ்ட் சிகரத்தைத் தொடுவது மட்டும்தான் சாதனை அல்ல; தான் வாழும் பகுதியில் பொருளாதார நிலையில் பின்தங்கிய 10 பேருக்காவது வேலைவாய்ப்பு அளித்து, அதன் மூலம் அவர்களது வீட்டில் அடுப்பு எரிவதற்கு உதவினாலும் அதுவும்கூட ஒரு சாதனைதான்!

அப்படிப்பட்ட ஒரு சாதனையைத்தான் செய்து வருகிறார் மதுரை மாவட்டம், திருவேடகம் கிராமத்தைச் சேர்ந்த 33 வயதான இளைஞர் ராஜா."பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது போல' என்று பூவுக்குத் தரும் மரியாதையை, அதைச் சுமக்கும் நாருக்கு நாம் தருவதில்லை. ஆனால், அந்த வாழை நாரைக் கொண்டே

வருமானம் ஈட்டலாம் என்பதை நிரூபித்தும் வரும் இளைஞர் ராஜா நம்மிடம் பேசியது:

""எனது பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு, கிராமத்தில் தந்தை நடத்தி வரும் பலசரக்குக் கடையில் 10 ஆண்டுகள் வேலை செய்தேன். பின்னர், கறவை மாடு வளர்த்து நானே பால் கறந்து விற்றேன்.ஏதாவது தொழில் செய்து சாதிக்க வேண்டும் என்ற

எனது ஆசைக்கு வடிகாலாக அமைந்தது ஒரு பத்திரிகையில் வெளிவந்த செய்தி. அதாவது, "வாழை நார் மூலம் பொருள்கள் தயாரித்து ஏற்றுமதி செய்யலாம்' என்பதே அது.

கோவையில் உள்ள "எகோ கிரீன்' நிறுவனத்தை அணுகினேன். அங்கு நார் மூலம் கைப்பை, மேட், கூடை, பர்ஸ், மேஜை விரிப்பு, டீப்பாய் உள்ளிட்ட பல பொருள்களைத் தயாரிக்கும் பயிற்சி அளித்தனர். 10 நாள்கள் மட்டுமே பயிற்சி பெற்றேன்.

அதன் பிறகு எனது கிராமத்திலேயே கடந்தாண்டு "ஜோதி பனானா ட்ரீ ஃபைபர்' தொழிலகத்தைத் தொடங்கினேன்.

இத்தொழிலுக்கு வாழை மட்டைதான் அடிப்படைத் தேவை. நான் தொழில் செய்யும் பகுதியானது அடிப்படையிலேயே கிராமம்  என்பதனால் வாழை மரங்களை எளிதாக வாங்க முடிந்தது.

வாழை மட்டையில் இருந்து வாழை நாரைப் பிரித்து எடுப்பதற்காகத் தனியாக இயந்திரம் உள்ளது. அதன்பிறகு, எல்லாமே கைவேலைப்பாடுதான். வாழை மட்டையின் இருபுறமும் மடல்கள் இருக்கும். அதை நீக்கிவிட்டால் நமக்கு வாழை நார் கிடைக்கும். நார் போக எஞ்சிய பகுதியான அகினி, பூ கட்டுவதற்குப் பயன்படுகிறது.

பச்சை வாழை மட்டையை இயந்திரத்தில் புகுத்தினால் நாரும், சக்கையும் கிடைக்கும். நாரை மட்டும் நிழலில் உலர்த்திப் பதப்படுத்த வேண்டும். அது நன்கு உலர்ந்த பின்னர் கயிறாகத் திரிக்கப்படும். அதைக் கொண்டு கூடை, தரை விரிப்பு போன்ற பொருள்களைத் தயாரிக்கலாம். இந்த நார் மூலம் கைப்பைகள், மிதியடிகள், தரை விரிப்புகள், பைகள் என பலதரப்பட்ட பொருள்களைத் தயாரித்து விற்கிறோம். வாழை மட்டையில் இருந்து கிடைக்கும் சாறு கொண்டே நாங்கள் தயாரிக்கும் நார் பொருள்களுக்கு சாயமேற்றப்படுகிறது. டிûஸன், பூ வேலைப்பாடுடன் கூடிய நார் பொருள்களைத் தயாரிக்கிறோம். அதற்கேற்ப விலையும் கூடும்.

வாழையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருள்களும் வீணாவதில்லை. இது கற்பக விருட்சமாகத்தான் உள்ளது.

அகினி எனப்படும் நாரானது பூ கட்டப் பயன்படுவதால் அதை பலரும் விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். வாழைத் தண்டு உணவுக்குப் பயன்படுகிறது.

வாழை மட்டையின் சக்கை நல்ல உரமாகப் பயன்படுகிறது, ஈரப் பதத்தை நீண்ட நேரம் தக்க வைக்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. இதனால், விவசாய நிலங்களுக்கு அதை உரமிட வாங்கிச் செல்கின்றனர். இந்த கழிவைப் பயன்படுத்தி மண்புழு உரம் தயாரித்து விற்கவும் திட்டமிட்டுள்ளேன். எங்கள் தொழிலகத்தில் நாளொன்றுக்கு 20 பைகள் தயாரிக்கிறோம். ஒரு பை ரூ.200 முதல் ரூ.400 வரை விலை போகும். எகோ கிரீன் நிறுவனமே எங்களிடம் மொத்தமாக வாங்கிக் கொள்கிறது. அதிக பொருள்களை மொத்தமாக விற்கும்போது ஓர் ஆண்டு உத்தரவாதமும் தருகிறோம். இந்த நார் பொருள்களுக்கு தாய்லாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது. மேலும், அங்கெல்லாம் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டுக்கு அவ்வ ளவாக முக்கியத்துவம் தருவதில்லை.

இந்த வகை பொருள்கள் எளிதில் மண்ணில் மட்கி விடுவதாலும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பதாலும் இதை வெளி

நாட்டினர் விரும்பி பயன்படுத்துகின்றனர்.

தற்போது எனது தொழிலுக்கு முதலீடாக இயந்திரத்திற்கு மட்டும் ரூ.60 ஆயிரம் செலவழித்துள்ளேன். இடம் உள்ளிட்ட பிற செலவுகளுக்காக என மொத்தம் ரூ.3 லட்சம் வரை முதலீடு போட்டுள்ளேன். என்னிடம் 20 பெண்கள் வரை வேலை செய்கின்றனர். அவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.80 வரை ஊதியமாகத் தருகிறேன். என்னைப் பொறுத்தவரை எனது கிராமத்தைச் சேர்ந்த 100 பேருக்காவது வேலை அளிக்க வேண்டும் என்பதுதான் லட்சியமாகும். இதற்கு இன்னும் ரூ.5 லட்சம் முதலீடு தேவைப்படுகிறது.

நார் திரிக்கவும், வாழை மட்டையில் இருந்து நாரைப் பிரிக்கவும் தனித்தனியாக இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. இவை வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். அதற்கான வாய்ப்புதான் இன்னும் கிடைக்கவில்லை. வங்கிக் கடனுக்காக முயற்சி செய்யலாம் என  நினைத்தேன். கடந்த காலத்தில் வங்கிக் கடனுக்காக நான் அலைந்து நொந்த அனுபவம் என்னை அங்கு போகத் தடுக்கிறது.

நகர்ப்புறத்திற்குச் சென்று வேலை செய்யாமல் கிராமப்புறங்களிலேயே வேலை செய்யவும், பிறருக்கு வேலை தரவும் தேவையான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், என்னைப் போன்ற இளைஞர்கள் பலருக்கும் ஊக்குவிக்கத் தான் ஆட்கள் இல்லை.

எனது ஆசையெல்லாம் கிராமப்புற பெண்கள் பலருக்கும் வேலை அளிக்க வேண்டும். அதற்காகத்  தொடர்ந்து உழைப்பேன்'' என்கிறார் நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்தபடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.