முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

உனக்கு கல்வி.. எனக்குத் தொழில்!

அனுபவம்.... வியாபாரத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் வெற்றி பெறுவதற்குத் தேவையான முதல் மூலதனம். திறமை, அதிர்ஷ்டம் ஆகியவற்றோடு அனுபவம் சேரும் போது வெற்றி நிச்சயமாகிறது. பெண்களால் எல்லாத் துறைகளிலும் சாத

Updated On : 27 டிசம்பர், 2023 at 3:38 PM
பகிர்:

அனுபவம்....

வியாபாரத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் வெற்றி பெறுவதற்குத் தேவையான முதல் மூலதனம். திறமை, அதிர்ஷ்டம் ஆகியவற்றோடு அனுபவம் சேரும் போது வெற்றி நிச்சயமாகிறது. பெண்களால் எல்லாத் துறைகளிலும் சாதித்துக் காட்ட முடியும் என்ற நம்பிக்கை வளர்ந்து வருகிறது. அப்படி சாதிக்க வேண்டும் என்றால் சரியான ஊக்குவிப்புத் திறன் வேண்டும்.

அப்படி அமையும்போது ஆணுக்கு நிகராக, சிறந்த தொழிலதிபர்களாக பெண்கள் உருவாக முடியும். சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் ஊறுகாய் தயாரித்தல், பாய்முடைதல், கயிறு தயாரித்தல் போன்ற பணிகளை மட்டுமே செய்து கொண்டிருக்காமல் வித்தியாசமான பொருட்களைத் தயாரிக்க வேண்டும்.

Advertisement

அப்போதுதான் தனித்த இடத்தைப் பிடிக்க முடியும் எனத் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் கொடுத்த ஊக்கத்தைத் தொடர்ந்து மகளிர் சுய உதவிக் குழுவினரிடையே புதுமையான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.  மாவட்ட ஆட்சியர் மா.வள்ளலாரிடம் இது குறித்த நமது கேள்விகளுக்கு அவர் தரும் பதில்கள்.

ஜி2கே திட்டம் என்றால் என்ன?

ஜி2கே என்பது "கார்டனில் இருந்து கிச்சனை நோக்கி", அதாவது தோட்டத்தில் இருக்கும் காய்கறிகளை நேரடியாக சமையல் அறைக்கு கொண்டு வருவது.  மலைப் பிரதேசங்களில் விளையும் பொருட்களை மகளிர் சுய உதவிக் குழுவினர் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து இடைத்தரகர்கள் யாரும் இன்றி வீடுகளுக்கு நேரடியாக விற்பனை செய்வது.

இதனால் தரமான பொருட்களை, நியாயமான விலைக்கு நுகர்வோருக்கு வழங்கிட முடியும். அத்துடன் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சிறு தொழில் முனைவோர் என்ற அந்தஸ்தும் கிடைக்கிறது.  இத் திட்டத்தினைக் கொடைக்கானல் டி.எம்.ஐ. தொண்டு நிறுவனம் மூலம் செயல்படும் அன்னை மகளிர் சுய உதவிக் குழுவினர் செயல்படுத்தி வருகின்றனர்.

மாணவர்களுக்குக் கல்வி, மகளிர் சுய உதவிக் குழுவினருக்குத் தொழில் நுட்பம்.. இது என்ன திட்டம்?

சிறு தொழில் முனைவோர் என்ற அந்தஸ்து மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த 6 மாத காலமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு தமிழகத்திலேயே முதல் முறையாக மேலாண்மை கல்வி கற்கும் (எம்.பி.ஏ) மாணவர்களைக் கொண்டு மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்தும் தொழில் நுட்பம், விற்பனைத் திறனாய்வு செய்யும் வகையில் காந்திகிராம கிராமியப் பல்கலைக் கழகம், திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரி, பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 239 மாணவர்கள், 185 சுய உதவிக் குழு பெண்களுடன் விற்பனைத் திறன் குறித்த கலந்தாய்வு மேற்கொண்டனர்.

இந்த முயற்சியின் மூலம் மேலாண்மைத் துறையில் பயிலும் காலத்தில் தங்களது கல்வியுடன் சுய உதவிக் குழு உற்பத்தி பொருட்களில் தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தும் சந்தைப்படுத்தி விற்பனையை அதிகரிப்பதற்கான தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொடுத்துள்ளனர்.

வருங்காலத்தில் மாணவர்கள் அரசு வேலையையோ, பெரிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பையோ எதிர்பார்த்துக் காத்திராமல் படித்து முடித்தவுடன் சுய தொழில் தொடங்கிட அவர்களுக்கு ஆர்வத்தையும் ஊட்டி வருகிறோம். மேலும் மகளிர் சுய உதவிக் குழுவினரின் பொருளாதாரமும் இதன் மூலம் உயர்ந்து சிறு தொழில் அதிபராகவும் உருவாகும் நிலை உள்ளது. மாணவருக்குக் கல்வி, சுய உதவிக் குழுவினருக்குத் தொழில் நுட்பம் என்பது இத்திட்டத்தின் நோக்கம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சுய உதவிக்குழுவில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்? அவர்களின் சேமிப்பு நிலவரம் பற்றி?

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 12,972 மகளிர் சுய உதவிக் குழுக்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுக்களின் மொத்த சேமிப்புத் தொகை ரூ.59.69 கோடியாக உள்ளது.

இக் குழுவினருக்குச் சுய நிதிக்கடன், பொருளாதாரக் கடன், நேரடிக் கடன் என 292 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் மலர் கண்காட்சி விழா, வடமதுரை சௌந்தரராஜப் பெருமாள் கோவிலில் ஆடிப் பெருக்கு விழா மற்றும் பழனி தை பூச திருவிழா காலங்களில் மகளிர் சுய உதவிக் குழுவினர் தாமாகவே நடத்திய விருப்ப கண்காட்சிகளின் மூலம் ரூ.35.19 லட்சத்திற்குப் பொருள்களை விற்பனை செய்துள்ளனர். கண்காட்சிக்கான செலவு ரூ.4.27 லட்சம்

மட்டுமே.

திண்டுக்கல்லில் நடைபெற்ற நவராத்திரி விழா, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவில் நடைபெற்ற கட்டாய கண்காட்சியின் மூலம் ரூ.77.96 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர்.  இதைத் தவிர தொண்டு நிறுவனங்கள் மூலம் நடைபெற்ற இரு கண்காட்சிகளில் ரூ.6 லட்சத்திற்கு விற்பனை நடந்துள்ளது.

மாணவர்களின் பங்களிப்புக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றம் குறித்து?

எம்.பி.ஏ.படிக்கும் மாணவர்களும் மகளிர் சுய உதவிக் குழுவினரும் இணைந்து செயல்படும் போது வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகையில் அந்த நம்பிக்கை துளிர்விட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments