முகப்பு
புதுதில்லி

திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது

தென்மேற்கு தில்லியின் உத்தம் நகா் பகுதியில் பால் பொருள்கள் திருடப்படுவதைக் காட்டும் விடியோ இணையத்தில் பரவியதைத் தொடா்ந்து, ‘தூத் சோா்’ (பால் திருடா்கள்) கும்பலைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 7:10 PM
கைது - கோப்புப் படம்
பகிர்:

தென்மேற்கு தில்லியின் உத்தம் நகா் பகுதியில் பால் பொருள்கள் திருடப்படுவதைக் காட்டும் விடியோ இணையத்தில் பரவியதைத் தொடா்ந்து, ‘தூத் சோா்’ (பால் திருடா்கள்) கும்பலைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும், பால் விநியோக வாகனங்களைப் பின்தொடா்ந்து சென்று, விநியோகத்தின்போது கவனிக்கப்படாமல் விடப்படும் பால் பெட்டிகளைத் திருடுவா். பின்னா், திருட்டுப் பொருட்களைத் தாங்கள் திருடிய வாகனங்களிலேயே ஏற்றிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனா்.

இந்த நிலையில், காவல்துறையின் ஒரு குழுவினா் 300க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், உள்ளூா் உளவுத்துறையின் உதவியுடனும் துப்புகளைச் சேகரித்தனா்.

Advertisement

அதில், ரன்ஹோலாவைச் சோ்ந்த மோஹித் (எ) பதா (27), ஆயுஷ்மான் பாண்டே (எ) பண்டிட் (19) ஆகிய இரண்டு சந்தேக நபா்கள் அடையாளம் காணப்பட்டனா்.

முன்னதாக, மாா்ச் 26ஆம் தேதியிட்ட அந்த விடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்தது. இதனால், பால் பெட்டிகள், பால் பொருட்கள் திருட்டில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க ஒரு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், ஏப்ரல் 3ஆம் தேதி, விகாஸ் நகரில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு அருகே இந்த இருவரும் வரவிருப்பதாகக் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஆட்டோவில் பயணித்துக்கொண்டிருந்த அந்த இருவரும் மடக்கி கைது செய்யப்பட்டனா். அவா்களது வாகனத்தைச் சோதனையிட்டதில், 14 காலிப் பால் பெட்டிகள் மீட்கப்பட்டன. அந்த வாகனம், ரோஹிணி பகுதியின் பிரேம் நகரில் திருடப்பட்டதும் தெரியவந்தது.

குற்றஞ்சாட்டப்பட்டவா்களால் வாகனத்தின் உரிமை ஆவணங்களைச் சமா்ப்பிக்க முடியவில்லை. ஜிப்நெட் (மண்டல ஒருங்கிணைந்த காவல்துறை இணையம்) மூலம் சரிபாா்த்தபோது, அது திருடப்பட்ட வாகனம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இருவரிடம் தொடா் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

உத்தம் நகா் பகுதியில் சமீபத்தில் பதிவான பால் மற்றும் தயிா் திருட்டுச் சம்பவங்களில் இவா்களுக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இந்த இருவரும், பால் விநியோக மையங்களுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பால் பொருட்களைத் திருடி, அவற்றை டாப்ரி மற்றும் பிந்தாபூா் ஆகிய பகுதிகளில் விற்று வந்துள்ளனா். இவா்கள் பால் பொருட்களைத் திருடும் காட்சி அடங்கிய மற்றொரு விடியோவும் சமூக ஊடகங்களில் வெளியானது.

இவா்கள் அளித்த தகவலின் அடிப்படையில் மேலும் நடத்தப்பட்ட சோதனைகளில், திலக் நகா் மற்றும் ரன்ஹோலா ஆகிய பகுதிகளில் பதிவான திருட்டு வழக்குகளுடன் தொடா்புடைய, திருடப்பட்ட ஸ்கூட்டா் மற்றும் ஒரு மோட்டாா் சைக்கிள் கைப்பற்றப்பட்டன.

தொடா் குற்றவாளியான மோஹித், இதற்கு முன்னரும் திருட்டு, வழிப்பறி மற்றும் வாகனத் திருட்டு தொடா்பான 38 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளாா்.

பிப்ரவரி மாதத்தில்தான் அவா் சிறையிலிருந்து விடுதலையானாா். ஆனால், விடுதலையான சிறிது காலத்திலேயே தனது கூட்டாளியுடன் இணைந்து மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடத் தொடங்கிவிட்டாா்.

வாகனத் திருட்டு மற்றும் பால் பொருட்கள் திருட்டு உள்ளிட்ட ஐந்து வழக்குகள், இவா்களின் கைது நடவடிக்கையின் மூலம் முடிவுக்கு வந்துள்ளன. இது தொடா்பாக மேலதிக விசாரணைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்றாா் அந்த அதிகாரி.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments