முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கடற்பசு

கடல் வாழ் பாலூட்டி வகைகளில் மிகவும் சாதுவானதாகவும் கடற் புற்களை உண்டும் வாழும் ஓர் அரிய வகை கடல்வாழ் உயிரினமே கடற்பசு. நகங்கள் இல்லாத வகையில் உடலின் முன்புறம் இரு பக்கவாட்டு துடுப்புகள் இருக்கின்றன. ஆ

Updated On : 20 செப்டம்பர், 2012 at 1:10 PM
பகிர்:

கடல் வாழ் பாலூட்டி வகைகளில் மிகவும் சாதுவானதாகவும் கடற் புற்களை உண்டும் வாழும் ஓர் அரிய வகை கடல்வாழ் உயிரினமே கடற்பசு. நகங்கள் இல்லாத வகையில் உடலின் முன்புறம் இரு பக்கவாட்டு துடுப்புகள் இருக்கின்றன. ஆனால் பின்புறத்தில் துடுப்புகள் இல்லை. தோல்கள் சுருக்கத்துடன் கடினமானதாகவும் உடல் உருண்டையாகவும் இருக்கும். தலையின் மேல்புறத்தில் இரு நாசித்துவாரங்கள் இருந்தாலும் இவற்றிற்கு செவிமடல் இல்லை. உடலில் ஆங்காங்கே சிறிது முடி காணப்படுகிறது. வால் தட்டையானதாகவும் துடுப்பு போன்றும் காணப்படுகிறது.

உதடுகள் கடினமானதாகவும்,மனிதர்களுக்கு இருப்பதைப் போல பற்களும், இமைகள் இல்லாத கண்களும் இருக்கின்றன. பிறந்த கடற்பசு குட்டியானது 20 கிலோ எடையும் நன்கு வளர்ந்த கடற்பசுவாக இருந்தால் 40 கிலோ எடையும் சுமார் 3.3மீ. வரை நீளம் உடையதாகவும் இருக்கும்.

துடுப்பு போன்ற வாலை மேலும் கீழும் அசைத்துத்தான் கடலில் நீந்துகின்றன. பக்கவாட்டு துடுப்புகள் மூலமாக திசையை மாற்றிக்கொண்டு நீந்துகின்றன. நுரையீரல் மூலமாக வளிமண்டல பிராணவாயுவைச் சுவாசிப்பதால் அவ்வப்பொழுது கடலின் மேல்புறத்திற்கு வரும். நாசித்துவாரத்தைக் கடலின் மேற்பகுதியில் கொண்டு வந்து காற்றை இழுத்து பின் நீரில் மூழ்கிக்கொள்ளும் தன்மையுடைய உயிரினம்.

Advertisement

பசுமையான கடற்தாவரங்களைப் பெரிதும் விரும்பி உண்ணும் இக்கடற்பசுக்களின் மேல்உதடுகள் பெரிதாக வளர்ந்து தாவரங்களை உண்பதற்கு வசதியாக இருக்கின்றது. ஆண்,பெண் இவை இரண்டுக்கும் இடையே பெரும்பாலும் வித்தியாசம் காணமுடியாது.

வருடம் முழுவதும் இனப்பெருக்கம் செய்யும் திறன் இருந்தாலும் எப்பொழுதாவது மட்டுமே இரண்டு கன்றுகளை ஈனும். பிறந்த குட்டியானது தாயிடமிருந்து பால் குடிக்கும்.

இதன் இறைச்சி மிகவும் ருசியாக இருப்பதாலும் இவற்றின் தோல் மற்றும் கொழுப்பு பொருட்களுக்காகவும் இதனை வேட்டையாடுகின்றனர். கடல் மாசுபடுவதாலும்,கடற் தாவரங்களை அழிப்பதாலும் இந்த உயிரினங்களும் அழிந்து

வருகின்றன.

மீன் பிடி வலைகளில் சிக்குவதாலும், மீன்பிடி படகுகளில் மோதுவதாலும் இவற்றின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. வன உயிரின பாதுகாப்புச் சட்டப்படி இதனைப் பிடிப்பதும், பயன்படுத்துவதும் மிகப்பெரிய குற்றம். இந்தக் குற்றத்துக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகிறது.

இந்தியாவிலேயே ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்பகுதிகளில் தான் இந்த உயிரினம் அதிகமாக காணப்படுகின்றது. அமைதியான, சாதுவான, தாவர உண்ணியாகவும் அதே நேரத்தில் அசைவம் சாப்பிடாமலும் உள்ள இந்த அரியவகை கடல்வாழ் உயிரினத்தைக் காப்பது நமது முக்கிய பணிகளில் ஒன்றாக நினைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.