ஞாயிறு கொண்டாட்டம்

மகளிர் மட்டும்!

சாகசப் பயணங்களை ஆண்கள் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்ற காலம் எப்போதோ மலையேறி விட்டது. அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக சாதித்து வரும் பெண்கள், மலையேற்றம், காட்டாறுகளைக் கடப்பது, கிளைடரில் பறப்ப

சு. வெங்கடேஸ்வரன்

சாகசப் பயணங்களை ஆண்கள் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்ற காலம் எப்போதோ மலையேறி விட்டது. அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக சாதித்து வரும் பெண்கள், மலையேற்றம், காட்டாறுகளைக் கடப்பது, கிளைடரில் பறப்பது, அடர்ந்த காடுகளில் பயணிப்பது என 'அட்வென்ச்சர்களிலும்' அசத்துகின்றனர். இத்தகைய சாகசப் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் இருந்தும், அதனை நிறைவேற்றிக் கொள்ள வழிதெரியாமல் தவிக்கும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவர்களது கனவை நனவாக்கும் வகையில் சாகசப் பயணங்களை 'டூர் பேக்கேஜாக' அளிக்கும் அமைப்புகள் பல இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. அதிலும் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பங்கேற்கும் சிறப்பு சாகசப் பயணத்தை அளித்து வருகிறது 'விமன் ஆன் கிளவுட்ஸ்' அமைப்பு.

நாள்தோறும் சமையலறையில் போராடி 'போர்' அடித்துக் கிடக்கும் குடும்பத் தலைவிகளுக்கும், அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் இடையே மட்டுமே ஓடி ரன் எடுக்கும் இளம் பெண்கள், புதிய இடங்களைக் காண விரும்பும் இளம் மாணவிகளுக்கும் வித்தியாசமான அனுபவத்தை அளிப்பதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கம்.

இயற்கையோடு இணைந்த இந்தப் பயணத்தில் தங்கள் தோழிகள், சகோதரிகள், தாய் என அனைவரையும் அழைத்துச் செல்ல முடியும். உங்களுடன் யாரும் வராவிட்டாலும், இந்த குழுவில் உள்ள புதுத் தோழிகளுடன் பயணத்தைத் தொடரலாம்.

பெண்கள் மட்டுமே பயணிப்பதால் பாதுகாப்புப் பிரச்னை குறித்து சிலருக்கு கவலை ஏற்படலாம். ஆனால் அந்தக் கேள்வியே எழாத வகையில் பயணம் சென்று சேரும் இடத்தில் முன்னதாகவே தங்குமிடம், உணவு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு விடுகின்றனர் பயண ஏற்பாட்டாளர்கள்.

பயணம் மேற்கொள்பவர்களின் வயது, எந்தப் பகுதியைச் சேர்ந்தவர், எதில் ஆர்வம் உடையவர்கள் என்று தெரிந்து, அதற்கு ஏற்றவாறு பயணத்தின் போது உடன் தங்குபவர்களை தேர்வு செய்கிறார்கள். 2004-ம் ஆண்டு முதல் இந்த சாகசப் பயணம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. பயணம் தவிர யோகா, மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சி போன்றவை அளிக்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இதில் கலந்து கொண்டு பாதுகாப்பாக பயணத்தை நிறைவு செய்துள்ளனர்.

பொதுவாக வட இந்தியாவில் இமயமலை அடிவாரப் பகுதியில் மேற்கொள்ளப்படும் பயணங்களே சுவாரசியமானவை. டெராடூனில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள மகேந்திரபுரி கிராமம் பயணத் திட்டத்தில் முக்கியமான இடம். இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1000 மீட்டர் உயரமான பகுதி. 20 ஏக்கரில் பசுமை படர்ந்த வனப்பகுதியும், இதன் அருகிலேயே ஆறு அமைத்திருப்பதும் கூடுதல் சிறப்பு. இங்கு வனப்பகுதிக்குள் நடந்து செல்வது, பனி மலை ஏறுவது, ஆற்றைக் கடப்பது மற்றும் 'அப்ஸ்டகிள் கோர்ஸ்' எனப்படும் தடைகளைத் தாண்டுவது, ஏணி ஏற்றம் போன்ற சாகச விளையாட்டு அனுபவம் பெண்களுக்குக் கிடைக்கிறது.

இந்த இடம் தலைநகர் தில்லியில் இருந்து 6 முதல் 7 மணி நேரப் பயணத்தில் சென்று விடும் தொலைவிலேயே உள்ளது. குறிப்பிட்டகாலம்தான் என்று இல்லாமால் ஆண்டின் பெரும்பாலான நாள்களில் சுற்றுலா உள்ளது. எனவே வசதிக்கு ஏற்றவாறு பயணத்தில் கலந்து கொள்ளலாம்.

இந்தப் பயணத்துக்குப் பின் தங்களுக்கு வயதில் 10 ஆண்டுகள் குறைந்து விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும், இதற்கு முன் எப்போதுமே பெற்றிராத அனுபவத்தையும், சுதந்திரத்தை உணர்ந்ததாகவும் பயணத்தில் கலந்து கொண்ட பெண்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். நகர வாழ்க்கையின் இரைச்சல்களில் இருந்து விலகி, சுத்தமான காற்று, சுகாதாரமான சுற்றுச்சுழலில் சில நாள்களைக் கழிக்க விரும்பும் பெண்கள் நிச்சயமாக இங்கு செல்லலாம்.

இது தொடர்பான மேலும் விவரம் அறிய

 www.womenonclouds.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT