முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கைகளே கண்களாய்...

உச்சந் தலையில் ஊசியைச் சொருகியது போன்று உச்சி வெயிலின் அகோரத் தாக்குதல் மண்டையைத் துளைத்தெடுக்கும் அந்த மதிய வேளையில், சாலையோர இளநீர் கடைநோக்கி வேகமாக விரைகின்றனர் வழிப்போக்கர்கள் சிலர். தென்னை ஓலையால

Updated On : 27 டிசம்பர், 2023 at 3:44 PM
பகிர்:

உச்சந் தலையில் ஊசியைச் சொருகியது போன்று உச்சி வெயிலின் அகோரத் தாக்குதல் மண்டையைத் துளைத்தெடுக்கும் அந்த மதிய வேளையில், சாலையோர இளநீர் கடைநோக்கி வேகமாக விரைகின்றனர் வழிப்போக்கர்கள் சிலர்.

தென்னை ஓலையால் வேயப்பட்ட அந்தக் குடிசையில் இளநீர் குவியல்கள் ஓரமாக அமர்ந்துகொண்டு பதமான காயைத் தேடிப் பிடித்து லாகவமாக சீவிக் கொடுக்கிறார்

அந்தக் கடைக்காரர். வந்தவர்களும் தாகம் தணிக்க இளநீரை வேகமாக "ஸ்ட்ரா' பயன்படுத்தாமலேயே உறிஞ்சுகின்றனர். சுவையான குளிர்ந்த நீர் தொண்டைக்குள் இதமாக இறங்கவும் "ஆகா' என்ற ஏகாந்த சுகத்துடன் சட்டைப் பையில் இருந்து ரூபாய் நோட்டை எடுத்து கடைக்காரரிடம் நீட்டினால் அதை வாங்க நீள்கிறது அருகிலிருந்த சிறுவனின் கரங்கள். ஆம், இளநீரை அழகாக, பக்குவமாகச் சீவிக்கொடுக்கும் அந்த நபர் பார்வையில்லாதவர் என்பது அப்புறம்தான் தெரிகிறது அங்கு வந்தவர்களுக்கு...

மதுரையில் உள்ள பார்ச்சூன் பாண்டியன் ஹோட்டல் பின்புறம் மதுரை} நத்தம் சாலையோரம் இளநீர்க் கடை நடத்தி வருபவர்தான் அந்தத் தன்னம்பிக்கை மனிதர் ராஜா. கண்களை உருட்டி, உருட்டி பார்த்துக்கொண்டு விறகையோ, மரத்தையோ வெட்டினால்கூட அரிவாள் சில சமயம் நமது கையை பதம் பார்த்துவிடுவதுண்டு. ஆனால், இந்த மாற்றுத் திறனாளி தன்னம்பிக்"கை'யுடன் கொஞ்சமும் சளைக்காமல் இளநீர்க் காய்களை அசத்தலாக சீவித் தருகிறார். இது காண்போரின் கண்களை ஆச்சரியத்தில் விரிய வைக்கிறது.

இதுகுறித்து இளநீர் வியாபாரி ராஜாவிடம் பேசினோம்.

""மதுரை ஊமச்சிகுளம் வீரபாண்டி ரோடு அப்பளக்காடு பகுதியில் வசித்து வருகிறேன். 9}ம் வகுப்பு வரை படித்துள்ளேன்.

கடந்த 34 ஆண்டுகளாக இப்பகுதியில் இளநீர்க் கடை வைத்துள்ளேன். எனக்கு மனைவியும் மகனும், மகளும் உள்ளனர்.

குடும்பச் சூழல் காரணமாகக் குழந்தைகளைப் படிக்க வைக்க முடியவில்லை. இதனால், தூத்துக்குடியில் உள்ள எனது மனைவியின் தங்கை வீட்டில் குழந்தைகள்  இருவரையும் விட்டுள்ளேன்.

எனக்குப் பிறவியிலேயே மாலைக்கண் நோய் இருந்தது. மாலைநேரங்களில் பார்வை மங்கலாகத் தெரியும். இதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. முறையான சிகிச்சையும் பெறவில்லை.

இதன் விளைவாக, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எனது இரு கண்களும் பார்வையை இழந்துவிட்டன. இதனால், நான் நிலைகுலைந்து போனேன். ஆனால், தெரிந்த தொழிலை விட்டுவிட்டு அடுத்தவரை அண்டி வாழப் பிடிக்கவில்லை. தொடர்ந்து இளநீர்க் கடையையே நடத்துவது என்று முடிவெடுத்தேன்.

இதற்கு எனது மனைவியும் ஊக்கம் கொடுத்தார்.

பார்வையிழந்தாலும் எனக்கிருந்த அனுபவத்தைக் கொண்டு இளநீர்க் காய்களைச் சீவித் தருகிறேன். அதற்கு எனது கைகள்தான் கண்களாக உதவுகின்றன. இதுவரை எனது கையில் காயம் எதுவும் ஏற்பட்டது இல்லை.

காசு வாங்கி கல்லாவில் போடுவதற்கு அவ்வப்போது எனது மனைவி உதவிடுவார். பள்ளி விடுமுறையின்போது எனது அண்ணன் மகன் கூடவந்து இருப்பான். மற்றபடி கடையிலேயே இரவில் தங்கிக் கொள்வேன். காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இளநீர்க் கடைதான் எனது உலகம்.

தினமும் ரூ.100 வருவாய் கிடைக்கும். காய்களை நாகர்கோவில், வருஷநாடு பகுதியில் இருந்து ஏஜென்டுகள் போட்டுவிட்டுச் செல்வார்கள்.

மழைக்காலங்களில் தொழில் அவ்வளவாக நடக்காது என்பதால் இரு மாதங்கள் வீட்டிலேயே தங்கிவிடுவேன். எனக்கு 100 சதம் பார்வையில்லை என்று, அரசு மருத்துவமனையில் சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனால், மாற்றுத் திறனாளிக்கான உதவித் தொகை ரூ.400 கிடைத்து வருகிறது.

ஆனால், அதை வைத்துக்கொண்டு ஜீவிதம் நடத்த முடியவில்லை. உழைக்காமல் என்னால் சும்மாவும் இருக்க முடியவில்லை. அதனால்தான் தொடர்ந்து இளநீர்க் கடை நடத்தி வருகிறேன். போலீஸôர் அவ்வப்போது வந்து நடைபாதையில் கடை விரித்திருப்பதாக கூறி மிரட்டிவிட்டுச் செல்வதுண்டு.

இதனால், நிரந்தரமாக கடை வைக்க அரசு கடன் கொடுத்து உதவினால் நன்றாக இருக்கும். மேலும், நான் கடந்த பல ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வருகிறேன்.

ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை தரும் அரசு, மாற்றுத் திறனாளிக்கு உதவிடும் வகையில் நான் வசிக்கும் இடத்திற்குப் பட்டா கொடுத்தால் மகிழ்வேன்.

எனது கண்களுக்கு வேண்டுமானால் பார்வை இல்லாமல் போயிருக்கலாம், ஆனால், நம்பிக்கை என்ற பார்வையைக் கொண்டு என்னால் செயல்பட முடியும். அது என்னை ஒருபோதும் கைவிடாது'' என்று நம்பிக்கையாகக் கூறுகிறார் ராஜா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.