ஞாயிறு கொண்டாட்டம்

நாய்களுக்கு மரியாதை....!

நாய் பொழப்பு சார்'- இது நாம் கேட்கும் வழக்கமான புலம்பல். "பொறந்தா இந்த மாதிரி நாயா பொறக்கணும்பா'- இது உதகையில் கடந்த வாரத்தில் நடைபெற்ற நாய் கண்காட்சியை பார்த்துவிட்டு வெளியே வந்தவர்களின் கருத்து. இரண

ஏ. பேட்ரிக்

நாய் பொழப்பு சார்'- இது நாம் கேட்கும் வழக்கமான புலம்பல். "பொறந்தா இந்த மாதிரி நாயா பொறக்கணும்பா'- இது உதகையில் கடந்த வாரத்தில் நடைபெற்ற நாய் கண்காட்சியை பார்த்துவிட்டு வெளியே வந்தவர்களின் கருத்து.

இரண்டுக்குமே வித்தியாசம் இருந்தாலும் தென்னிந்திய கெனல் கிளப்பின் சார்பில் உதகையில் கடந்த வாரத்தில் நடைபெற்ற நாய் கண்காட்சியில் பங்கேற்று அணிவகுத்து வந்த பிரம்மாண்ட நாய்கள் கண்களுக்கு பிரமிப்பையே அளித்தன.

""கடைசி வரை நமக்கு துணையாக இருப்பது நாய்கள் மட்டுமே என்பதால் நான் எனது மனைவிக்கு அளிக்கும் மரியாதையைவிட, நான் வளர்க்கும் நாய்க்கு முக்கியத்துவம் தருகிறேன். எந்த எதிர்பார்ப்புமில்லாத எனது நாய்கள், நான் பழைய சோற்றையே போடுபவனாக இருந்தாலும் அதற்காக எனக்கு வாலாட்டாமல் இருப்பதில்லை'' என்கிறார் நாய் பிரியரான கோபாலகிருஷ்ணன்.

இந்த கூற்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தாலும், இதுதான் உண்மையென நினைப்பவர்களும் உள்ளனர். இது உள்ளூரில் மட்டுமல்ல, உலகம் முழுதுமே ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்தாகவே உள்ளது. அந்த அளவுக்கு நாய் வளர்ப்பில் விருப்பம் காட்டுகின்றனர். நாய் வளர்ப்பில் மட்டுமல்லாமல் பெட் அனிமல் எனப்படும் வீட்டு விலங்குகளை வளர்ப்பதால் மன அழுத்தம் குறைவதாக ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாய்களின் கண்காட்சி உதகையில் கோடை சீசனையொட்டி நடத்தப்பட்டது. இதில் உலகிலுள்ள 7 இன நாய்களும் பங்கேற்றன. உலகில் உள்ள நாய்களை பணிபுரிதல் (வொர்க்கிங்), மேய்ச்சலுக்கு உதவுதல் (பாஸ்டிரல்), டாய் (பொம்மை), ஹவுண்டு (கூட்டமாக சிந்தித்துத் செயல்படுதல்), கன் டாக் (வேட்டையாடுதல்) மற்றும் யூடிலிட்டி (பாதுகாப்பு) என 7 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் வொர்க்கிங் பிரிவில் டோபர்மேன், புல்மெஸ்டிக்,, கிரேட்டன் ஆகிய வகைகளும், பாஸ்டிரல் பிரிவில் ஜெர்மன் ஷெப்பர்டு, பார்டர் கூலி, சைபீரியன் ஹஸ்கி ஆகியவையும், டாய் பிரிவில் பொமரேனியன், மினியேச்சர் பிஞ்சர் ஆகிய வகைகளும் உள்ளன. ஹவுண்டு பிரிவில் டேஸ்ஹவுண்டு, பீகிள் வகைகளும், யூடிலிட்டி பிரிவில் டால்மேசன் வகைகளும், கன் டாக் பிரிவில் லேப்ரடார், கோல்டன் ரிட்ரீவர் போன்ற ரக நாய்களும் உள்ளன.

நாய்களின் உணர்வுகள் மற்றும் அவற்றின் பணிகள் ஆகியவற்றைப் பொறுத்து 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தாலும் அன்புக்கு அடிமை, எஜமான் கட்டளையை நிறைவேற்றுதல், எஜமானனை பாதுகாத்தல் போன்ற பணிகளில் இவை அனைத்துமே ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல.

உலகளவில் இத்தனை வகைகளில் நாய்கள் இருந்தாலும், இந்திய வகைகளான தென் தமிழகத்தைச் சேர்ந்த ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி வகை நாய்கள் உலகளவில் பிரசித்தி பெற்றவையாகும்.

""உலகிலுள்ள நாய்களில் சுமார் 35 சதத்தை ஜெர்மன் ஷெப்பர்டு எனப்படும் அல்சேசன் வகை நாய்களே பிடித்துள்ளன. அதேபோல, உலகிலேயே அதி புத்திசாலி நாய் இனமாக பார்டர் கூலி எனப்படும் இனம் கருதப்படுகிறது. உலகிலேயே மிகப் பொடியான நாய் மெக்சிகோ நாட்டை சேர்ந்த பிக்கிவாவா என்ற இனமாகும். 3 தீப்பெட்டிகளின் அளவே இதன் உருவமாகும். அதேபோல, மாஸ்டிவ் என்ற வகை நாய் 200 கிலோ எடை வரையும், ஐரிஷ் உல்ப் ஹவுண்டு இனம் 42 இன்ச் உயரம் வரையும் வளரக்கூடியது'' என்கிறார் உதகையை சேர்ந்த நாய் வளர்ப்பு ஆலோசகர் மாதேஷ்.

விருப்பமான விலங்குகளின் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ள நாய்கள் மனிதனுக்கு மிக பிரியமான வகையிலும் நடந்து கொள்கின்றன என்பதற்கு அவை தங்கள் எஜமானரின் குழந்தைகளோடு பழகுவதே சாட்சியாகும். இந்த நாய்களுக்கு உணவு மற்றும் மருந்துக்காக ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரம் வரை செலவழிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பழஞ்சோற்றை தின்றுவிட்டு, திருடவரும்  முரடனை விடாமல் துரத்தும் நமது நாய்களும் சாமார்த்தியசாலிகளே. அதனால், எல்லா வகை நாய்களுக்கும் புத்திசாலித்தனம் இருந்தாலும், சிலவகை நாய்கள் அவற்றில் சிறப்பிடத்திலுள்ளன.

நன்றியுள்ள ஜீவனான நாய்கள் கடைசி வரை நம்மோடு இருக்கும். அதே நேரத்தில் உலகிலேயே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மனிதனோடு பழகும் ஓர் அன்பு ஜீவன் நாய் மட்டுமே என்பது இந்த நாய் கண்காட்சியை பார்த்த அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒரு கருத்தாகும். இது போன்ற கண்காட்சிகளை அதிகளவில் நடத்துவதன் மூலம் வளர்ப்பு விலங்குகளின் மீதான ஆர்வமும் அதிகரிப்பதோடு, அவற்றிற்கான முக்கியத்துவமும் குழந்தைகளுக்கு தெரியவரும்.

தொலைக்காட்சி பெட்டி, கணிப்பொறி முன்னால் அமர்ந்து மூளையை கசக்கிக் கொண்டிருக்கும் போது, அந்த மன உளைச்சலை குறைப்பதற்காகவாவது இத்தகைய வளர்ப்பு விலங்குகளின் மீது அன்பு காட்டுவதும் அவசியமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT