பட்டறிவும் கொடுக்குது நூலகம்
ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு' என்றார் முகமெல்லாம் பூரிக்க அந்த மாணவி. பொது நூலகத் துறை சார்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் மாநில அளவில் இரண்டாவது இடத்தைப் பெற்று, அகில இந்திய சுற்றுலா சென்று வந்த மீன
ஞாயிறு கொண்டாட்டம்பட்டறிவும் கொடுக்குது நூலகம்
ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு' என்றார் முகமெல்லாம் பூரிக்க அந்த மாணவி. பொது நூலகத் துறை சார்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் மாநில அளவில் இரண்டாவது இடத்தைப் பெற்று, அகில இந்திய சுற்றுலா சென்று வந்த மீன
ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு' என்றார் முகமெல்லாம் பூரிக்க அந்த மாணவி.
பொது நூலகத் துறை சார்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் மாநில அளவில் இரண்டாவது இடத்தைப் பெற்று, அகில இந்திய சுற்றுலா சென்று வந்த மீனாட்சியிடம் முதல் விமானப் பயணம் எப்படி இருந்தது என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில்தான் இது...
2009-10 ஆம் கல்வியாண்டில் தமிழக அரசின் பொது நூலகத் துறை "நமது உலகம் நூலகம்' என்ற புதிய திட்டத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, வாசகப் போட்டி என 3 விதமான போட்டிகள் கல்வி மாவட்ட அளவிலும் மாவட்ட அளவிலும் பிறகு மாநில அளவிலும் நடத்தப்பட்டன.
இதில் மாநில அளவில் முதலிடம் பெறுவோர் சிங்கப்பூருக்கும், 2-வது இடம் பெறுவோர் அகில இந்திய அளவிலும், மூன்றாம் இடம் பெறுவோர் தமிழக அளவிலும் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தப் போட்டிகளில் பங்கேற்று தமிழக அளவில் 2-வது இடம் பெற்றவர்தான் எஸ். மீனாட்சி. திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள அமலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் இவர் படிப்பிலும் சுட்டி.
இவரிடம் அகில இந்திய சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைத்தது குறித்து கேட்டோம்.
சந்தோஷ விழிகள் விரிய அவர் கொட்டியது;
""நான் முசிறி கிளை நூலகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உறுப்பினராகச் சேர்ந்தேன். எம்சிஏ முடித்துள்ள எனது சகோதரி அபிநயா நான் நூலகத்தில் உறுப்பினராகச் சேர ஆர்வமூட்டினார். வங்கியில் காசாளராகப் பணியாற்றும் அப்பா சிவானந்தம், வீட்டிலிருந்து எங்களை கவனித்துக்கொள்ளும் அம்மா கலைச்செல்வி இதற்கு தடையேதும் போடவில்லை.
இந்த நிலையில், பொது நூலகத் துறை சார்பில் போட்டி அறிவிக்கப்பட்டதை அறிந்து, முசிறி கிளை நூலகர் தனபதியிடம் போட்டியில் பங்கேற்கும் என் ஆர்வத்தை தெரிவித்தேன்.
அவரும் உடனடியாக நான் போட்டியில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். என்னுடைய பள்ளி ஆசிரியர்கள் எனக்கு பயிற்சி அளித்து ஊக்கப்படுத்தினர். குறிப்பாக, நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போதே, எனக்கு ஆசிரியராய் இருந்த சோபியா என்னிடம் பேச்சுத் திறமை இருந்ததைக் கண்டு, அதை மேலும் வளர்த்துவிட்டு இந்த நிலைக்கு ஆளாக்கினார்.
சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நான் இரண்டாவது இடத்தைப் பிடித்தேன். இதன்மூலம் அகில இந்திய சுற்றுலா செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது'' என்றார் மீனாட்சி.
பேசும்போதே விமான வேகத்தில் பறந்த அவரது எண்ணங்கள், சுற்றுலா சென்ற இடங்களில் மிதந்து லயித்தது தெரிந்தது.
எந்தெந்தப் பகுதிகளுக்கு சுற்றுலா சென்றீர்கள் என்றதுதான் தாமதம், மனதில் பொங்கிய ஊற்று, வார்த்தை அருவியாகக் கொட்டியது.
""நாங்கள் கடந்த மே மாதம் 13-ம் தேதி சென்னையிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் தில்லிக்குச் சென்றோம். முதல் விமானப் பயணம் என்பதால் மிகவும் சந்தோஷமாக இருந்தது. தில்லியில் உட்லேண்ட் ஹோட்டலில் தங்கினோம். அன்று மாலை "அவுட் சீயிங்' என தில்லி நகரையும், இரவில் அதன் வண்ண ஒளி அலங்காரத்தையும் சுற்றுலா வாகனத்தில் சென்று ரசித்தோம்.
அடுத்த நாள் பெட்ரோல் நிலையங்கள் வேலைநிறுத்தம் செய்ததால் வெளியே சுற்றிப் பார்க்க செல்ல முடியவில்லை. எங்களுடைய ஏற்பாட்டின்படி சென்றிருந்தால் அக்ஷர்தம் கோயில், தமிழ்ச் சங்கம் ஆகியவற்றைப் பார்த்திருக்க முடியும். தொடர்ந்து, 15-ம் தேதி ஆக்ராவில் தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்தோம். வரலாற்றுப் பாடத்தில் படித்ததையும், திரைப்படங்களில் பார்த்ததையும் நேரில் பார்த்த போது கிடைத்த சந்தோஷம் அளவிட முடியாதது.
16-ம் தேதி ஹிமாயூன், அக்பர் சமாதி, செங்கோட்டை ஆகியவற்றையும், 17-ம் தேதி குதுப்மினார், லட்சுமிநாராயணன் கோயில், காந்தி சமாதி ஆகியவற்றையும் சுற்றிப் பார்த்தோம்.
நம் நாட்டு தலைவர்களின் சிலைகளுக்கும், நினைவிடங்களுக்கும் வெளிநாட்டு
சுற்றுலாப் பயணிகள் அளித்த மரியாதை என்னை மிகுந்த ஆச்சரியப்படவைத்தது.
மேலும், அவர்கள் இந்தியாவைப் பற்றியும், தமிழகத்தைப் பற்றியும் பெருமையாகப் பேசிய போது, நான் தமிழ்ப் பெண்ணாகப் பிறந்தது குறித்து பெருமை கொண்டேன்.
18-ம் தேதி காலை தில்லியில் இருந்து சென்னைக்கு திரும்பினோம்'' என்றார் மீனாட்சி.