பவவளப்பாறைகளில் வசிக்கும் பல வகையான அலங்கார மீன் இனங்களில் தேவதை மீன்களும் ஒன்று. பாறைகள் மற்றும் பவளப்பாறைகள் அதிகம் உள்ள பகுதிகளில் கூட்டம், கூட்டமாகக் காணப்படுகின்றன. இவற்றின் இனப்பெருக்கம், வளரும் விதம் மற்றும் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது..
""தேவதை மீன்களின் விலங்கியல் பெயர் போமோ கேந்தஸ். வடிவத்தில் வண்ணத்துப் பூச்சி மீன்களைவிட மிக அழகாகவும் பல வண்ணங்களிலும் இருப்பதால் இதனை தேவதை மீன்கள் என்கிறார்கள். கடலில் ஒரு அடி முதல் 70 அடி வரையுள்ள ஆழமான கடல் பகுதியில் வாழும் இச்சிற்றினங்களில் 86 வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
பவளப்பாறைகளை உருவாக்கும் பாலிப்புகள் என்ற பூச்சிகள்,கடல் பஞ்சுகள் ஆகியவையே இவற்றின் விருப்ப உணவு. இவற்றைக் கடித்துத் தின்பதற்கு ஏற்றவாறு இதன் வாயும், தாடையும் உறுதியான பிரஷ் போல அமைந்திருக்கின்றன. ஆண் மீன் பெண் மீனைவிட பெரிதாக இருப்பதுடன் ஒரே சமயத்தில் 2 அல்லது 3 பெண் மீன்களையும் துணைக்கு வைத்துக் கொள்கின்றது. இனப்பெருக்க காலத்தில் ஆணும், பெண்ணும் அடிக்கடி நிறத்தை மாற்றிக் கொள்ளும்.
பெண் மீன் கருவுற்று முட்டையிட்டவுடன் அவை வாழும் இடங்களிலிருந்து சற்று தூரத்தில் சென்று எதிரி மீன்கள் இல்லாத இடத்தில் பாதுகாப்பாக முட்டைகளை வைத்து விட்டு மீண்டும் அந்த இடத்துக்கே வந்துவிடும். இதனால் இதன் முட்டைகளை மற்ற மீன்கள் தின்பது தவிர்க்கப்படுகிறது. முட்டைகளிலிருந்து பொறிந்து வெளிவரும் குஞ்சுகள் நிறத்தில் தாய் மீன்களிடமிருந்து முழுவதுமாக நிறத்தில் வேறுபட்டு கருநீல நிற பின்னணியில் வெள்ளை மற்றும் நீல நிறம் உள்ள அழகுமிகு வளையங்கள் போல தோற்றம் தரும். சுமார் 12.செ.மீ. அளவு வளரும் வரை நிறம் மாறாமல் இருக்கும் இவ்வகை மீன்களின் வால்பகுதியில் உள்ள வெள்ளை வளையங்கள் கண் போல தோற்றமளித்து எதிரிகளிடமிருந்து தன்னை
பாதுகாத்துக் கொள்கின்றன. இந்த வளையம் தோற்றத்தில் முகமூடி அணிந்திருப்பது போல இருப்பதால் இதனருகே வரும் எதிரிகள் குழம்பிப் போவதும் உண்டு. அதையும் மீறி எதிரிகள் அருகே வந்துவிட்டால் படக்கென்று தப்பி பவளப்பாறைகளின் அடியில் ஒளிந்து கொண்டு பதுங்கிக் கொள்ளும். கடல் வாழ் உயிரினங்களின் ஆராய்ச்சிக்காகக் கடலுக்கடியில் நீந்தும் ஸ்கூபா வீரர்களிடம் கொஞ்சம்கூட பயமின்றி சகஜமாகப் பழகக்கூடிய குணம் உடையவை.
இம்மீன்களின் அற்புத அழகே இவற்றைப் பிடிக்க காரணமாகி வண்ண மீன் வளர்ப்புக்காக இவை அதிக அளவில் பிடிக்கப்படுவதாலும் பவளப்பாறைகளின் அழிவுகளாலும் அழிந்து கொண்டே வரும் இந்த தேவதைகளைப் பாதுகாக்க வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறோம்'' என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.