எதிரணிக்கு இவர் ஏவுகணை!
ஹாக்கி, கிரிக்கெட், டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளுக்கு அடுத்தபடியான இடத்தைப் பிடித்திருப்பது வாலிபால். இவ்விளையாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனையான மோனிஷா தேசிய அளவில் முத்திரை பதித்து வருகிறார். அச
ஞாயிறு கொண்டாட்டம்எதிரணிக்கு இவர் ஏவுகணை!
ஹாக்கி, கிரிக்கெட், டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளுக்கு அடுத்தபடியான இடத்தைப் பிடித்திருப்பது வாலிபால். இவ்விளையாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனையான மோனிஷா தேசிய அளவில் முத்திரை பதித்து வருகிறார். அச
ஹாக்கி, கிரிக்கெட், டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளுக்கு அடுத்தபடியான இடத்தைப் பிடித்திருப்பது வாலிபால். இவ்விளையாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனையான மோனிஷா தேசிய அளவில் முத்திரை பதித்து வருகிறார். அசாத்தியமான உயரம். (1.77 மீட்டர்) அடிக்கும் ஒவ்வொரு ஷாட்டும் பிருத்வி ஏவுகணை போல எதிரணி களத்துக்குள் சென்று விழுகிறது.
இவரது அட்டாக்கிங் ஆட்டத்துக்கு இவரது உயரமும் ஒரு பிளஸ் பாயிண்ட். அகில இந்திய போட்டிகளில் முதலிடம், அகில இந்திய கல்லூரிகள் அளவிலான வாலிபால் போட்டிகளில் தொடர்ந்து 3 வருடங்கள் சாம்பியன் பட்டம் எனப் பல வெற்றி முத்திரைகளைப் பதித்து வந்துள்ளார்.
சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரைச் சந்தித்தபோது....
வாலிபால் விளையாட்டு வீராங்கனையாக உருவாகவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது எப்படி?
அப்பா ஜான்சன் ஹாக்கி வீரர். அம்மா எல்சம்மா ஜோசப் தடகள வீராங்கனை. எனவே எனக்குப் பிறப்பிலேயே விளையாட்டு வீராங்கனை ரத்தம் ஊறிவிட்டது. அம்மா, அப்பா தொடர்ந்து பயிற்சி, போட்டிகளில் பங்கேற்பதைப் பார்த்து எனக்கும் விளையாட்டு மீது ஆர்வம் வந்தது.
முதலில் தடகள விளையாட்டுகளில்தான் பங்கேற்று வந்தேன். அதன்பின்னர் வாலிபால் மீது மெல்ல ஆர்வம் ஏற்பட்டு, எனக்கான விளையாட்டு அது என்பதைப் புரிந்துகொண்டேன். தொடர்ந்து அதன் மீது நாட்டம் செலுத்தி வருகின்றேன். இப்போது வாலிபால் இல்லையென்றால் நான் இல்லை என்ற அளவுக்கு வந்துவிட்டது.
தொடர்ந்து ஏராளமான தேசிய, மாநில அளவிலான வாலிபால் போட்டிகளில் விளையாடி வருகிறீர்களே...இதற்கான பயிற்சிகள்?
தொடர்ந்து இடைவிடாத பயிற்சி. தினந்தோறும் காலை மூன்று மணி நேரம், மாலை மூன்று மணி நேரம் எனப் பயிற்சி மேற்கொள்கிறேன். விளையாட்டு மைதானத்தில் பயிற்சி, சுவற்றில் பந்தை அடித்து பயிற்சி செய்தல், எனப் பல பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். காலையிலும் மாலையிலும் பயிற்சியை நிறுத்துவதில்லை.
விளையாடி வரும் அணிகள்...?
தமிழக அணிக்காக பல்வேறு தேசிய போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். அதுமட்டுமல்லாமல் கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் எத்திராஜ் கல்லூரிக்காகவும், அகில இந்திய போட்டிகளுக்காக தமிழக அணிக்காகவும் விளையாடி வருகிறேன்.
எந்த வயதில் வாலிபால் விளையாடத் துவங்கினீர்கள்?
எனக்கு 12 வயதாக இருக்கும்போதே வாலிபால் விளையாடத் துவங்கிவிட்டேன். இப்போது 6-வது ஆண்டாக வாலிபால் தொடர்கிறது.
இதுவரை பங்கேற்ற போட்டிகள்...வெற்றிகள்?
ஏராளமான மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். கல்லூரிகளுக்கு இடையிலான அகில இந்திய அளவிலான போட்டியில், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய சப்-ஜூனியர் போட்டிகளில் முதலிடம் பிடித்தேன்.
இதைத் தொடர்ந்து நடந்த அகில இந்திய அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகளில் தொடர்ந்து 3 ஆண்டுகள் முதலிடம் பிடித்தேன்.
மாநில அளவிலான பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகளில் 2 ஆண்டுகள் முதலிடம் பிடித்தோம். மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து 2 ஆண்டுகள் 2-ம் இடம் பிடித்தோம். தேசிய சப்-ஜூனியர் போட்டிகளில் 4-வது இடம், நாகபுரியில் நடந்த தேசிய
ஜூனியர் போட்டிகளில் 3-வது இடம், 2011 ஜனவரி முதல் வாரத்தில் நடந்த சீனியர் தேசிய வாலிபால் போட்டியில் கால் இறுதி வரை முன்னேறினோம்.
சென்னையில் நடந்த லீக் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் இடம் வென்றோம்.ஆந்திரத்தில் நடந்த அகில இந்திய கிளப் போட்டியில் 2-வது இடத்தைக் கைப்பற்றினோம்.
உங்களது பயிற்சியாளர்கள்?
என்.எல்.சி. பள்ளியில் படித்தபோது முருகானந்தம் என்பவரிடம் பயிற்சி பெற்றேன். தற்போது கேசவனிடம் பயிற்சி பெற்று வருகிறேன். மேலும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர் தங்கநாயகியிடமும் வாலிபால் நுணுக்கங்களைக் கற்று வருகிறேன்.
உங்களது படிப்பு மற்றும் விளையாட்டிற்கு உதவுபவர்கள் யார்யார்?
மாநில வாலிபால் சங்க நிர்வாகிகள் தேவாரம், சித்திரைப்பாண்டியன் ஆகியோர் என் படிப்பு மற்றும் விளையாட்டிற்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றனர்.
வாலிபாலில் உங்களுடைய பொசிஷன் என்ன?
வாலிபாலில் நான் அட்டாக்கர் பொசிஷனில் விளையாடுவேன். சகவீராங்கனைகள் எடுத்துத் தரும் பந்தை எகிறி அடித்து புள்ளிகளைப் பெறுவதுதான் அட்டாக்கரின் வேலை. அதை சிறப்பாக செய்ய எனது உயரம் உதவுகிறது.
வாலிபாலில் உங்களுடைய ரோல் மாடல் யார்?
ஏராளமான சர்வதேச வாலிபால் வீராங்கனைகள் இருந்தபோதிலும் எனக்கு நமது நாட்டு அணியின் பிரியங்கா போரா (ரயில்வேயில் பணிபுரிபவர்) முன்மாதிரியாக இருக்கிறார். அவரைப் போலவே தேசிய அணியில் இடம்பிடித்து வெற்றிகளைக் குவிக்க ஆசை. சர்வதேச போட்டிகளில் வெற்றி வலம் வந்து சர்வதேச வீராங்கனையாக ஜொலிக்க ஆசை.
அவரது எண்ணம் பலிக்கவேண்டும். தேசிய அணியில் அவர் இடம்பெற்று ஜொலிக்கவேண்டும் என்பதே வாலிபால் ஆர்வலர்களின் எண்ணமும் கூட.