நீச்சல்... பாய்ச்சல்!
சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடிய வளாகத்தில் அமைந்துள்ள டிஎன்சிஏ நீச்சல் குளத்தில் உற்சாகமாகத் தண்ணீரில் பாய்ந்து கொண்டிருந்தார்கள் சிறுவர்கள். தரைக்கும் தண்ணீருக்கும் மாறி மாறித் தாவ
ஞாயிறு கொண்டாட்டம்நீச்சல்... பாய்ச்சல்!
சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடிய வளாகத்தில் அமைந்துள்ள டிஎன்சிஏ நீச்சல் குளத்தில் உற்சாகமாகத் தண்ணீரில் பாய்ந்து கொண்டிருந்தார்கள் சிறுவர்கள். தரைக்கும் தண்ணீருக்கும் மாறி மாறித் தாவ
சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடிய வளாகத்தில் அமைந்துள்ள டிஎன்சிஏ நீச்சல் குளத்தில் உற்சாகமாகத் தண்ணீரில் பாய்ந்து கொண்டிருந்தார்கள் சிறுவர்கள். தரைக்கும் தண்ணீருக்கும் மாறி மாறித் தாவிக் கொண்டிருந்த சிறார்களைப் பார்க்கும்போது பயிற்சி நிறுவனத்துக்கு டர்ட்டில்ஸ் என்று பொருத்தமாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்தது.
ஆரம்பித்த 5 வருடங்களில் ஏராளமான தேசிய நீச்சல் வீரர்களை உருவாக்கி வீறுநடை போட்டு வருகிறது டர்ட்டில்ஸ் ஸ்விம் ஸ்கூல். அதன் தலைமை நீச்சல் பயிற்சியாளர் கிரிஷ் நம்மிடையே பேசினார்.
டர்ட்டில்ஸ் பள்ளி உருவானது எப்படி..?
டர்ட்டில்ஸ் பள்ளியைத் தேசிய நீச்சல் சம்மேளனத்தின் உதவித் துணைத் தலைவராக உள்ள ஆர்.என். ஜெயப்பிரகாஷ்தான் உருவாக்கினார். 2006-ம் ஆண்டில் பள்ளி துவங்கப்பட்டது. சென்னை வீரர், வீராங்கனைகளுக்கும் தரமான நீச்சல் பயிற்சி கிடைக்கவேண்டும் என்ற நோக்கில்தான் இந்தப் பள்ளி துவங்கப்பட்டது. தரமான தேசிய, சர்வதேச வீரர், வீராங்கனைகளை உருவாக்குவதற்காக தொடங்கப்பட்ட லாப நோக்கற்ற பள்ளிதான் இது. இளமையிலேயே வீரர்களைத் தேர்வு செய்து அவர்களுக்குப் போதிய பயிற்சியை அளித்து அவர்களைத் தேசிய அளவில் பதக்கம் வெல்பவராக உருமாற்றி வருகிறோம்.
இதற்காக அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் செய்து தருகிறோம். நீச்சலுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், உடைகள், உணவு அளித்து வருகிறோம். சிலருக்குப் பள்ளிக் கட்டண உதவியைக் கூட ஜெயப்பிரகாஷ் செய்து வருகிறார்.
இங்கு எத்தனை பயிற்சியாளர்கள் உள்ளனர்..?
நான் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறேன். உதவிப் பயிற்சியாளர்களாக 6 பேர் உள்ளனர். உடற்பயிற்சி நிபுணர் ஒருவரும், உணவுக் கட்டுப்பாட்டு நிபுணர் ஒருவரும் வீரர்களுக்குத் தேவையான டிப்ஸ்களை வழங்கி வருகின்றனர். நிரந்தர உணவுக் கட்டுப்பாட்டு நிபுணர் உள்ள ஒரே பள்ளி டர்ட்டில்ஸ் நீச்சல் பள்ளி மட்டுமே.
பயிற்சி அளிக்கப்படும் நேரம்... இடங்கள்?
காலையில் 5.30 மணி முதல் 9 மணி வரையிலும், மாலையில் 5 மணி முதல் 7.30 மணி வரையிலும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. டிஎன்சிஏ வளாகத்தில் அமைந்துள்ள 25 மீட்டர் நீளமுள்ள நீச்சல் குளத்திலும், அண்ணா நீச்சல் குளத்திலும் வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறோம்.
டர்ட்டில்ஸ் நீச்சல் பள்ளியில் பயிற்சி பெற்றசாதனை வீரர், வீராங்கனைகள்?
ஏராளமான வீரர், வீராங்கனைகளைப் பள்ளி உருவாக்கியுள்ளது. சர்வதேச அளவில் போட்டியில் பங்கேற்ற ஜே. அக்னீஷ்வர், ஜெயவந்த் விஜயகுமார், எம். ராகவி, ஜெயாவீணா உட்பட பலர் உருவாகியுள்ளனர்.
இதில் அக்னீஷ்வர் காமன்வெல்த் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஜெயவந்த் விஜயகுமார் ஏஷியன் ஏஜ் குரூப் போட்டியில் பதக்கம் வென்றார்.
ஜப்பானின் டோக்கியோ நகரில் 2009-ல் இப்போட்டி நடைபெற்றது. உலகப் பள்ளிகள் நீச்சல் போட்டியில் ராகவி பங்கேற்று பதக்கம் வென்றார். சீனியர் தேசிய நீச்சல் போட்டியில் கடந்த 2 ஆண்டாக அவர் தங்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் போட்டியிலும் பங்கேற்றார்.
ஜெயாவீணா, ராஞ்சியில் நடைபெற்ற தேசிய நீச்சல் போட்டியின் 6 பிரிவுகளில் பங்கேற்று 6 பதக்கங்களைக் கைப்பற்றினார். மேலும் அவர் தேசிய நீச்சல் போட்டியில் பங்கேற்ற இளம் வயது வீராங்கனை என்ற பெருமையையும் தட்டிச் சென்றார்.
2006-ம் ஆண்டில் டர்ட்டில்ஸ் பள்ளி வீரர்கள், தென் மண்டல நீச்சல் போட்டியில் 8 பதக்கம் வென்றனர்.
2007-08-ம் ஆண்டில் மாநில அளவிலான போட்டிகளில் 133 பதக்கங்களைக் கைப்பற்றினர். தென் மண்டல போட்டியில் 18 பதக்கங்களையும், தனிநபர் சாம்பியன் பட்டத்தையும் வென்றனர். தேசிய போட்டிகளில் 8 பதக்கங்களைக் கைப்பற்றினர். 2008-09-ல் மாநில போட்டிகளில் 434 பதக்கங்களை வென்றனர்.
இதில் ஏராளமான தனிநபர் சாம்பியன் பட்டங்களையும், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டங்களையும் வீரர்கள் கைப்பற்றினர். மேலும் ஏராளமான சாதனைகளையும் படைத்தனர். இதில் தங்கப் பதக்கத்தின் எண்ணிக்கை மட்டும் 268 என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
தேசிய போட்டிகளில் 51 பதக்கங்களைக் கைப்பற்றினர். 2009-10-ல் மாநிலப் போட்டிகளில் 539 பதக்கங்கள், தேசியப் போட்டிகளில் 88 பதக்கங்களையும் அவர்கள் வென்றனர். 2010-11-ல் மாநிலப் போட்டிகளில் 443 பதக்கங்களையும், தேசியப் போட்டிகளில் 117 பதக்கங்களையும் குவித்துள்ளனர். எங்களது சாதனை சரித்திரம்
தொடர்கிறது.
இதுவரை பயிற்சி பெற்ற வீரர்களின் எண்ணிக்கை?
சுமார் 700-ஐத் தாண்டும். ஒவ்வொரு வருடமும் வீரர்களைத் தேர்வு செய்து அவர்களை 5 முதல் 6 பிரிவுகளாகப் பிரித்துவிடுவோம். தொடர்ந்து அவர்களுக்குப் பயிற்சி அளித்துப் போட்டிகளுக்குத் தயார் செய்வோம்.
நீச்சல் பயிற்சி பெற சரியான வயது எது?
6 வயது சரியான வயதாக இருக்கும். அப்போதுதான் குழந்தைகள் உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும் தயாராகி வருகின்றனர். நீச்சல் கற்பதால் உடலும், மனமும் உறுதியடைகிறது. எனவே குழந்தைகள் அனைவரும் நீச்சல் கற்றுக்கொள்வது அவசியம்.
டர்ட்டில்ஸ் பள்ளியின் எதிர்காலத் திட்டம்?
திறமையான வீரர்களை உருவாக்கி, சர்வதேச அளவில் பதக்கம் பெறச் செய்வதே பள்ளியின் ஒரே லட்சியம். அதை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.