பாய்மரப் பாவை!
சர்வதேச பாய்மரப்படகு ஓட்டும் (செய்லிங்) போட்டிகளில் பங்கேற்று சாதனைகள் பல புரிந்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த வீராங்கனை மிருணாளினி சந்தானம். இருபது வயதிலேயே தேசிய போட்டிகள், சர்வதேச போட்டிகள் எனப் ப
ஞாயிறு கொண்டாட்டம்பாய்மரப் பாவை!
சர்வதேச பாய்மரப்படகு ஓட்டும் (செய்லிங்) போட்டிகளில் பங்கேற்று சாதனைகள் பல புரிந்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த வீராங்கனை மிருணாளினி சந்தானம். இருபது வயதிலேயே தேசிய போட்டிகள், சர்வதேச போட்டிகள் எனப் ப
சர்வதேச பாய்மரப்படகு ஓட்டும் (செய்லிங்) போட்டிகளில் பங்கேற்று சாதனைகள் பல புரிந்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த வீராங்கனை மிருணாளினி சந்தானம். இருபது வயதிலேயே தேசிய போட்டிகள், சர்வதேச போட்டிகள் எனப் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளார்.
"பாய்மரப்படகு ஓட்டும் போட்டிகளில் பங்குபெறுவது திரில்லான அனுபவம். ஆனால் பாய்மரப்படகுகளைச் செலுத்துவது என்பது அவ்வளவு சுலபமல்ல' என்கின்ற இவரை, சென்னை துறைமுகப் பகுதியில் ஒரு காலைப் பொழுதில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது சந்தித்தோம்.
பெண்களுக்கான எத்தனையோ விளையாட்டுகள் இருக்க... பாய்மரப் படகு விளையாட்டைத் தேர்ந்தெடுத்தது ஏன்?
என் தந்தை சந்தானத்துக்குப் பாய்மரப் படகுப் போட்டிகள் என்றால் மிகவும் பிரியம். சிறுவயதில் இதற்கான பயிற்சிகளை எடுத்துள்ளார். உடல் ஆரோக்கியத்திற்காக அவர் செய்லிங் செய்யச் செல்வார். அவ்வாறு செல்லும்போது நானும் அவருடன் போவேன். நாளடைவில் இந்தப் பழக்கம் ஆர்வமாக மாறியது. இப்படித்தான் என் தந்தையின் பாய்மர படகோட்டும் ஆசை, எனக்கும் தொற்றிக் கொண்டது.
ஒரு நாளில் எத்தனை மணி நேரம் பயிற்சி செய்து வருகின்றீர்கள்?....
கல்லூரி நேரம் போக பெரும்பாலான நேரங்களில் செய்லிங் பயிற்சியில் ஈடுபடுவேன். காலையில் 3 மணி நேரம், மாலையில் 3 மணி நேரம் எனப் பயிற்சிகள் செய்து வருகின்றேன். போட்டி நெருங்குகின்ற வேளைகளில், பயிற்சியாளர் பயிற்சி நேரத்தை அதிகரித்து விடுவார்.
தற்போது யாரிடம் பயிற்சி பெற்று வருகின்றீர்கள்?
பிரபல பயிற்சியாளர்கள் ஜமால், பெட் காம்வே ஆகியோரிடம்தான் தற்போது பயிற்சி பெற்று வருகிறேன்.
இது கடினமான விளையாட்டு அல்லவா? மற்ற படகோட்டும் முறைகளில் இருந்து இது எவ்வாறு மாறுபடுகிறது?
நிச்சயமாக...இது கடினமான விளையாட்டுதான். மற்ற படகோட்டும் முறைகளிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது. மற்ற படகுகளைச் செலுத்துவதற்குத் துடுப்பு போடவேண்டும். ஆனால் இது அப்படியல்ல. பாய்மரப் படகில் நின்றுகொண்டு பயணிக்கவேண்டும். காற்று வீசும் திசை, அதன் வேகம்,ஆகியவற்றிற்கேற்ப படகை நாம் செலுத்தவேண்டும். இதற்கு விடாத பயிற்சி, அசாத்திய தைரியம், கடல் மற்றும் ஏரியில் படகைச் செலுத்தும் திறமை ஆகியவை இருக்கவேண்டும்.
பாய்மரப் படகைச் செலுத்தும்போது பேலன்ஸ் செய்வது எப்படி?
பாய்மரப் படகைச் செலுத்தும்போது, நமது உடல் எடையை படகில் நிறுத்தி பேலன்ஸ் செய்யவேண்டும். நமது உடலைப் பக்கவாட்டிலும், முன்பக்கமும், பின்பக்கமும் சாய்ப்பதன் மூலம், பாய்மரப் படகைத் திருப்ப வேண்டிய திசையில் திருப்பலாம். காற்றின் போக்குக்கு ஏற்ப பேலன்ஸ் செய்து படகைச் செலுத்துவது மிகவும் சவாலான விஷயம்.
பங்கேற்ற போட்டிகள், வெற்றிகள் குறித்து சொல்லுங்கள்?
2005-ம் ஆண்டு முதல் செய்லிங் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். இதுவரை மாநிலப் போட்டிகள், தேசிய போட்டிகள், சர்வதேசப் போட்டிகள் எனப் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளேன்.
2005-ல் ஹைதராபாதில் நடந்த கடற்கரையோர தேசிய பாய்மரப் படகு போட்டியில் வெண்கலம் வென்றேன். 2006-ல் நடந்த கடலோர தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றேன். அதே ஆண்டில் தேசிய இன்லாண்ட் பாய்மரப் படகுப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினேன். 2007-ல் நடைபெற்ற இளைஞர் பாய்மரப் படகுப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றேன்.
2009-ல் பஹ்ரைனில் நடைபெற்ற அல்-பஹாரே சர்வதேச விளையாட்டுப் போட்டிதான் என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத போட்டி. இந்த சர்வதேசப் போட்டியில் முதலிடம் பிடித்து கோப்பையைக் கைப்பற்றினேன்.
உங்களுடைய முன்மாதிரி யார்?
பிரிட்டனைச் சேர்ந்த வீராங்கனை பெனின் அய்ன்ஸ்லி எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை முன்மாதிரியாகக் கொண்டு நான் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகிறேன்.
உங்களுக்கு உற்சாகம் தருவது எது?
போட்டிகளில் வெற்றி பெறும்போது உற்சாகம் தானாகவே வந்துவிடும். மேலும் பெற்றோர் ரவி சந்தானம், நந்தினி, நான் படித்து வரும் சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவ கல்லூரி முதல்வர் நிர்மலா பிரசாத், கல்லூரி விளையாட்டுத் துறையைச் சேர்ந்த ரமேஷ், அமுதா உள்ளிட்டோரும் என்னை அடிக்கடி பாராட்டுவார்கள். இவர்களின் பாராட்டும், ஊக்கமும்தான் எனக்கு உற்சாகம் தருகின்றது.
பாய்மரப் படகுப் போட்டியில் நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன?
பாய்மரப் படகுப் போட்டிகளில் அதிக அளவு வெற்றிகளைக் குவிக்கவேண்டும். குறிப்பாக, நான் அதிகம் சாதிக்கவேண்டும். 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் பெறவேண்டும். மேலும், பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்று பல பதக்கங்கள் வெல்ல வேண்டும். இவற்றைத் தவிர, சிறந்த பயிற்சியாளராகத் திகழ வேண்டும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.