முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

யார் வேண்டுமானாலும் நாவல் எழதலாம்!

யார் எழுத்தாளர் ஆகலாம்? என்று கேட்டுப் பாருங்கள். எல்லாரும் ஆகலாம் என்பதே பதிலாக இருக்கும்.  ஆனால் எல்லாருமா எழுத்தாளர் ஆகிறார்கள்? எழுத்தாளர் ஆவதற்கான ஆர்வம், தகுதி, திறமைகள் இருந்தும் பலர் எழுத்துக்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:39 AM
பகிர்:

யார் எழுத்தாளர் ஆகலாம்? என்று கேட்டுப் பாருங்கள். எல்லாரும் ஆகலாம் என்பதே பதிலாக இருக்கும்.

 ஆனால் எல்லாருமா எழுத்தாளர் ஆகிறார்கள்? எழுத்தாளர் ஆவதற்கான ஆர்வம், தகுதி, திறமைகள் இருந்தும் பலர் எழுத்துக்குத் தொடர்பில்லாத ஏதோ தொழில்கள் செய்து வாழ்கிறார்கள்.

 இதற்குக் காரணம், ஒருவருடைய இளம் பருவத்தில் அவருக்குள்ள எழுத்தார்வத்தைக் கண்டறிந்து, அவருக்கு உற்சாகமூட்டி, அவருக்கு உரியமுறையில் வழிகாட்டி, தட்டிக் கொடுத்து வளர்க்க யாரும் இல்லாததே.

Advertisement

 தட்டிக் கொடுத்து வளர்க்க முன்வந்திருக்கிறது அமெரிக்காவில் உள்ள ஓர் நிறுவனம், "நானோரிமோ' "National Novel Writing month' என்கிற பெயரில். 1999 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் இளம் படைப்பாளிகளை நாவல் எழுத வாய்ப்பளிக்கிறது. அதுமட்டுமல்ல, எழுதப்பட்ட சில நாவல்களைத் தேர்ந்து எடுத்துப் புத்தகமாக வெளியிடுகிறது. இணையதளத்தில் புத்தகத்தை வாசிக்க வசதியாக இ புக்- ஆகவும் வெளியிடுகிறது.

 இப்படி ஒரு நாவல் "pass the ketchup, dude'  என்ற பெயரில் எழுதியவர் கார்த்திக் நாராயண். ஆடிட்டரான அவருக்கு எழுத்தில் ஆர்வம் அதிகம். அவரிடம் பேசியதிலிருந்து....

 நாவல் எழுத யார் வாய்ப்பளிக்கிறார்கள்? எந்த வயதினர் நாவல் எழுத முடியும்? எத்தனை பக்கங்கள் எழுத வேண்டும்?

 அமெரிக்காவில் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் 12 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக நாவல் எழுத ஊக்குவிக்கும் இந்த முயற்சி தொடங்கப்பட்டது. இணைய தளம் மூலம் ஒவ்வோராண்டும் நவம்பர் முதல்நாள் முதல், குழந்தைகளும், டீன் ஏஜில் உள்ளவர்களும் பங்கேற்கலாம். இந்த நிறுவனத்தில் முதலில் பதிவு செய்து கொண்டு நாவல் எழுத ஆரம்பிக்க வேண்டும். நவம்பர் 30 ஆம் தேதிக்குள் எழுதி முடிக்க வேண்டும். இப்படி உலகம் முழுவதும் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் நாவல் எழுதுகிறார்கள்.

 நாவல் குறைந்தபட்சம் 50 ஆயிரம் சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். அதற்கும் மேல் எவ்வளவு பெரிதாக வேண்டுமானாலும் எழுதலாம்.

 உலகம் முழுவதும் எழுதப்பட்ட இந்த நாவல்களை 6 மாதத்துக்குள் படித்து முடித்து, பரிசீலனை செய்து சில நாவல்களை மட்டும் வெளியிடுவதற்காகத் தேர்ந்து எடுக்கிறார்கள். அதைப் பற்றிய அறிவிப்பை வெளியிடுகிறார்கள்.

 நாவலை எந்த மொழியில் எழுத வேண்டும்?

 நாவலை ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும் என்ற அவசியமில்லை. உலகில் உள்ள எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம். தமிழிலும் எழுதலாம். இது ஆங்கிலத்தில் புலமையில்லாதவர்களுக்கு இனிக்கும் செய்தி.

 வெளியிடுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாவலை, ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிடுவார்கள். புத்தகமாக வெளியிடுவது மட்டுமல்ல, இணையதளத்திலும் இ-புக் ஆகவும் வெளியிடுவார்கள்.

 அப்படி வெளியிட்ட புத்தகத்தை எழுதியவர்களுக்கு அனுப்பியும் வைப்பார்கள். நான் எழுதிய நாவலை அவர்கள் புத்தகமாக வெளியிட்டு எனக்கு அனுப்பி வைத்தார்கள். இதற்காக அவர்கள் எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை. லாப நோக்கமில்லாமல் இந்தச் சேவையை உலக அளவில் செய்து வருகிறார்கள்.

 இந்தியாவில் எவ்வளவு பேர் ஒவ்வோராண்டும் கலந்து கொள்கிறார்கள்?

 இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 2 ஆயிரம் பேர் நாவல் எழுதினார்கள். அவர்களில் மூவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

 நீங்கள் எழுதிய நாவலைப் பற்றி....

 நான் எழுதிய "pass the ketchup, dude' , நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்ட நாவலாகும்.

 இவர்கள் இந்த வாய்ப்பை ஏற்படுத்தியிருக்காவிட்டால், நான் இந்த நாவலை எழுதியிருப்பேனா என்பது சந்தேகமே.

 நாவல் எழுத இப்படியொரு வாய்ப்பு இருப்பது எல்லாருக்கும் எப்படித் தெரியும்?

 சென்னை போன்ற முக்கியமான நகரங்களில் இதுபற்றிய விளக்கக் கூட்டங்களை நடத்துகிறார்கள். இம்மாதம் 30 ஆம் தேதி (இன்று) சென்னையில் இதுபற்றிய விளக்கக் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் இணையதளத்தில் ஒருவர் தன்னை எப்படிப் பதிந்து கொள்ள வேண்டும்? எப்படி நாவல் எழுத வேண்டும்? என்பது போன்ற ஐயங்களுக்கு விடையளிக்கிறார்கள். சென்னையில் இந்த நிகழ்ச்சியை நடத்தும் ஒருங்கிணைப்பாளராக நான் இருக்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.