தமிழகத்தைப் பொறுத்தவரையில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் முதலிடம் பெறும் மாணவ, மாணவியருக்குக் கிடைக்கும் மரியாதையோ, ஊடகங்களிலும் செய்தித்தாள்களிலும் கிடைக்கும் முக்கியத்துவமோ மாநில அளவில் பாலிடெக்னிக் படிப்புகளில் சாதிக்கும் மாணவ, மாணவியருக்குக் கிடைப்பதில்லை.
அப்படி விளம்பர வெளிச்சம் இல்லாமல் நான்கு ஆண்டுகளாக பொள்ளாச்சியில் செயல்பட்டுவருவது "பி.ஏ. பாலிடெக்னிக் கல்லூரி'. இந்தக் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 11 பேர் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சியடைந்துள்ளனர். இவர்கள் 11 பேருமே பி.இ. இரண்டாம் ஆண்டில் தமிழகத்தின் தலைசிறந்த கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இவர்கள் அனைவருமே மிக, மிக சாதாரணக் குடும்பப் பின்னணியைக்
கொண்டவர்கள்!
பொள்ளாச்சி, பி.ஏ. பாலிடெக்னிக்கில் படித்த பரமேஸ்வரி என்பவர் பத்தாம் வகுப்பில் நெகமம் அரசுப் பள்ளியில் படித்து 460 மதிப்பெண் பெற்றார். அவருடைய தந்தை சுப்பிரமணியம் காய்கறி விற்பவர். பாலிடெக்னிக்கில் கம்ப்யூட்டர் என்ஜினியரிங்கில் 99.75 சதவிகிதம் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார். அரசு உதவி பெறும் கல்லூரியான கோவை சி.ஐ.டி.யில் இரண்டாம் ஆண்டு சேர்ந்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பப் பாடப் பிரிவில் மாநிலத்தில் மூன்றாமிடம் பெற்ற கே.சுகன்யா பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் 412. பாலிடெக்னிக்கில் 99.67 சதவிகிதம். அப்பா குப்புசாமி கூலித் தொழிலாளி.
""அப்பா பட்ட கஷ்டம் கண்கூடாகத் தெரிந்தது. அதை நினைத்துப் படித்ததால் மாநில அளவில் ரேங்க் பெற முடிந்தது. என்னுடைய தம்பியை நன்றாகப் படிக்கவைப்பதுதான் என் கனவு'' என்கிறார் சுகன்யா.
தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் மாநிலத்தில் ஐந்தாமிடம் பெற்ற எம்.கோமதி பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் 359. "கூலி வேலை செய்யும் அப்பா முத்துசாமியின் கஷ்டத்தைப் போக்க வேண்டும்' என்பதுதான் தனது கனவென்கிறார் இச்சாதனைப் பெண்.
இவர்கள் தவிர கே.கெüதமி, எஸ்.சர்பினா, எம்.தேன்மொழி, பி.நிவேதா, டி.அன்னத்தாய் தேவபிரபா ஆகியோர் தகவல் தொழில்நுட்பப் பாடத்திலும், என்.மோகனப் பிரியா, எஸ்.சோபியா, என்.அருள்பிரசாத், கே.ரமேஷ்குமார் ஆகியோர் கம்ப்யூட்டர் என்ஜினியரிங் பாடத்திலும் மாநில அளவில் சாதித்துள்ளனர்.
இம் மாணவர்கள் அனைவரின் பெற்றோர்களும் நகரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. வசதிகள் குறைந்த கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். சாதாரணக் கூலித் தொழிலாளி, மளிகைக் கடைத் தொழிலாளி, பனியன் கம்பெனித் தொழிலாளி, காய்கறி விற்பவர் ஆகியோர்தான் மேற்கண்ட சாதனையாளர்களின் பெற்றோர்.
""தமிழக வரலாற்றில் எந்தப் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்தும் 12 பேர் மாநில அளவில் சிறப்பிடம் பெற்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு நேரடியாகச் சேர்ந்தது இல்லை. இது மிகப் பெரிய சாதனை'' என்கிறார் அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்கக உயர் அதிகாரிகளில் ஒருவர்.
இது தொடர்பாக பொள்ளாச்சி பி.ஏ. கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.அப்புக்குட்டி, முதல்வர் எஸ். கோபால்சாமி ஆகியோர் கூறியது:
""பொள்ளாச்சியில் பி.ஏ. பாலிடெக்னிக் துவங்கி 4 ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு பருவத்திலும் தேர்ச்சி விகிதத்தில் எங்கள் கல்லூரி மாணவ, மாணவியர் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுகின்றனர்.
பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள கிராமப்புற மாணவ, மாணவியர் எங்கள் கல்லூரியில் சேர்கின்றனர். மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களையும் சேர்த்துக் கொண்டு சிறந்த முறையில் படிக்க வைக்கிறோம்.
புதிய கல்லூரி என்றாலும் எங்கள் மீது நம்பிக்கை வைத்துச் சேரும் மாணவ, மாணவியருக்குச் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கல்லூரியின் இலக்கு. அதற்கேற்ப மாணவ, மாணவியரை உருவாக்குகிறோம்.
பொதுவாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் மாணவ, மாணவியருக்குக் கிடைக்கும் மரியாதை பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியருக்குக் கிடைப்பது இல்லை.
பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து மாநில அளவில் சிறப்பிடம் பெறும் மாணவர்களின் சாதனைகளையும் தொழில் நுட்பக் கல்லூரி இயக்ககம் வெளியிட வேண்டும். அப்போதுதான் இவர்களைப் பற்றியும் நாளைய வரலாறு பேசும்'' என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.