மணிரத்னத்தின் "அஞ்சலி' படத்தில் மழலைக் குரலில் பாடிய ஸ்வேதா பண்டிட் இப்போது பாலிவுட்டின் பிரபலமான பாடகியாகிவிட்டார். நீங்கள் எனக்காகப் பாடும் படங்களில் உங்கள் குரல் மிகவும் பொருத்தமாக இருக்கிறது. இனி என் அனைத்துப் படங்களிலும் நீங்கள்தான் எனக்குக் குரல் கொடுக்க வேண்டும் என அன்புக் கட்டளையிட்டிருக்கிறார் நடிகை சமீரா ரெட்டி. இன்னொரு விஷயம்... ஸ்வேதா பண்டிட்டும் விரைவில் இந்திப் படம் ஒன்றின் மூலம் நடிகையாக அறிமுகமாகவுள்ளார்.
தமிழ் சினிமாவில் எப்படியாவது முன்னணி இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் ஹன்சிகா மோத்வானி. ஆனால் அவருடைய நல விரும்பிகள் பலரும் உடல் எடையைக் குறைத்தால்தான் இது சாத்தியப்படும் என்று கூறவே இதுவரை தான் விரும்பி உண்டு வந்த அசைவ உணவைத் தியாகம் செய்துவிட்டு சைவத்துக்கு மாறிவிட்டதோடு தீவிர உடற்பயிற்சியும் செய்து வருகிறார் ஹன்சிகா.
ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்த "தம்மு' படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பில் கண்ணீருடன் விடைபெற்றிருக்கிறார் த்ரிஷா. அதற்குக் காரணம் அதுவே அவரது கடைசி தெலுங்குப் படமாக இருக்கக்கூடும் என்பதுதான். ஜாதகப்படி இன்னும் ஒரு வருடத்துக்குள் த்ரிஷாவுக்குத் திருமணம் நடக்க வேண்டும். இல்லாவிட்டால் திருமண யோகம் அமைவதற்கு மேலும் ஏழு ஆண்டுகள் ஆகிவிடும் என ஜோதிட சிகாமணிகள் கூறியிருக்கிறார்களாம். அதனால் கமிட் ஆகியுள்ள படங்களையெல்லாம் விரைவில் முடித்து விட்டு மணக்கோலம் காண வேண்டும் என உத்தரவிட்டுள்ளாராம் த்ரிஷாவின் அம்மா.
மும்பை நிழல் உலக தாதா அபுசலீமின் காதலியான மோனிகா பேடி வெடிகுண்டு வழக்கில் சிக்கி சிறை வாசமெல்லாம் அனுபவித்தார். இந்தச் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு அபுசலீம்-மோனிகா பேடி விஷயங்களைப் பற்றி 'தேஷ் துரோகி' என்ற பெயரில் ஒரு இந்திப் படம் தயாராகிறது. இதில் மோனிகா பேடி கதாபாத்திரத்தில் நடிக்க பிரியாமணியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால் என் இமேஜ் பாதிக்கப்படும் என தெரிவித்து அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் பிரியாமணி.
சரணின் "ஜே ஜே' படத்தின் மூலம் அறிமுகமான அமோகா, பிறகு தன்னுடைய பெயரை பிரியங்கா கோத்தாரி என மாற்றிக்கொண்டு இந்தியிலும் தெலுங்கிலும் நடித்து வந்தார். அண்மையில் சென்னைக்கு வந்திருந்தவரிடம் தமிழ்ப் படங்களில் நடிப்பது குறித்தும் திருமணம் குறித்தும் கேட்டபோது... தமிழ்ப் படங்களில் நடிக்க எனக்கு அழைப்பு வரவில்லை அதனால் நடிக்கவில்லை. திருமணம் என்பது பெண்களை அடிமைப்படுத்தும் ஒரு நிகழ்வு. அதனால் நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்றார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்தில் இருந்து இன்னொருவரும் திரைத்திறைக்கு வருகிறார். அவர் மு.க.ஸ்டாலினின் மருமகள் கிருத்திகா. ஏற்கெனவே சில குறும்படங்களையும் ஆவணப்படங்களையும் இயக்கி கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கியப் பிரபலங்களின் பாராட்டுகளைப் பெற்ற கிருத்திகா இயக்கும் புதிய படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் ஆரம்பத்தில் தன் கணவர் உதயநிதியைத்தான் ஹீரோவாக நடிக்க வைக்க முடிவெடுத்திருந்தார் கிருத்திகா. ஆனால் உதயநிதி மறுத்துவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.