முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பெண்ணுக்குத் தேவை அன்பு!

எப்படி இருக்கிறது திருமண வாழ்க்கை? என்று யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நூறு பேரில் இருவர் கூட சொல்லமாட்டார்கள்.  பெற்றோர் பார்த்து முடித்து வைத்த திருமணங்களானால

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:38 PM
பகிர்:

எப்படி இருக்கிறது திருமண வாழ்க்கை? என்று யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நூறு பேரில் இருவர் கூட சொல்லமாட்டார்கள்.

 பெற்றோர் பார்த்து முடித்து வைத்த திருமணங்களானாலும், கண்ணோடு கண்ணினை நோக்கி, வாய்ச் சொல்லை "செல்' லில் பேசி முடித்த காதல் திருமணங்களானாலும் இதே நிலைதான்.

 ஆணையும் பெண்ணையும் விருப்பத்துக்கு மாறாக அடைத்துப் போட்ட கூண்டாக இருக்கிறது இல்லற வாழ்க்கை. ஏன் இப்படி ஆகிவிட்டது? விவாகரத்து கேட்டு நீதிமன்ற வாசல்களில் நிற்பவர்கள் அதிகரிக்க என்ன காரணம்? கணவனும் மனைவியும் இன்பமாக வாழ எது தடையாக இருக்கிறது? என்பனவற்றைப் பற்றி சென்னை மயிலாப்பூரில் "மைன்ட் அன்ட் சோல் கேர் கிளினிக்' என்ற பெயரில் மனநல மையம் நடத்தி வரும் மனநல நிபுணர் பி.என்.பிரபாகரனிடம் கேட்டோம்:

 ""இன்று திருமணமானவர்களில் 98 சதவீதம் பேர் மகிழ்ச்சியாக இல்லை. 2 சதவீதம் பேர்தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? எல்லாருக்கும் ஏன் பிரச்னைகள் வருகின்றன? என்று பார்த்தால், "கமிட்மென்ட் ஃபோபியா' என்ற மனப் பிரச்னை இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

 என்னடா வாழ்க்கை இது? இவளைப் போய் கல்யாணம் பண்ணிக் கொண்டோமே என்று ஆண்களும் இவரைப் போய் கட்டி வைத்துவிட்டார்களே என்று பெண்களும் புலம்புவார்கள். வீட்டுக்கு வந்தால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று சொல்வார்கள். அப்பா, அம்மா கட்டி வைத்துவிட்டார்கள், அவர்களுக்காகப் பார்க்கிறேன். இல்லையென்றால் பிரிந்துவிடுவேன் என்பார்கள். குழந்தைகளுக்காகச் சேர்ந்து வாழ்கிறேன் என்பார்கள். இவையெல்லாம் இந்த "கமிட்மென்ட் ஃபோபியா'வின் அறிகுறிகள்.

 திருமணமான புதிதில் கணவனுக்காக மனைவியும், மனைவிக்காக கணவனும் உயிரைக் கூட விடத் தயாராக இருப்பார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்கள்தாம் இப்படி மாறிவிட்டார்கள். இதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன.

 கணவனும், மனைவியும் திருமணம் ஆவதற்கு முன்பு, பிறந்து வளர்ந்து வாழ்ந்த சூழ்நிலைகள் வெவ்வேறாக இருக்கும். கணவன், மனைவி இருவருக்கும் வெவ்வேறான தேவைகள் இருக்கும். ஆனால் என் ஆசைக்கும், தேவைக்கும் ஏற்ற மாதிரி நீ மாற வேண்டும் என்று கணவனோ, மனைவியோ ஒருவரையொருவர் எதிர்பார்ப்பார்கள்; கட்டாயப்படுத்துவார்கள். தன்னுடைய ஆசைகளை, தேவைகளைப் பிறர் மீது திணிப்பார்கள்.

 ஒருவருடைய மனதுக்குப் பிடித்த ஒரு விஷயம், உலகத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் முட்டாள்தனமாகத் தெரியலாம். ஆனால் அவருக்கு அது பெரிது. இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒருவருக்குப் பிடித்த ஒரு விஷயத்தை இகழக் கூடாது.

 கணவன், மனைவியின் ஆசைகளை, தேவைகளைப் புரிந்து கொள்ளமாட்டார். அதுபோல மனைவி, கணவனுடைய ஆசைகளைத் தேவைகளைப் புரிந்து கொள்ள மாட்டார். இதனால் குடும்பத்தில் நிறையப் பிரச்னைகள் வருகின்றன.

 கணவனும், மனைவியும் நேர் எதிரான எண்ணங்கள், பழக்க, வழக்கங்கள் உடையவர்களாக இருப்பார்கள். எடுத்துக்காட்டாக, கணவன் மிகவும் கஞ்சனாக இருப்பார். மனைவி தாராளமாகச் செலவு செய்வார். வீடு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று கணவன் நினைப்பார். மனைவி வீட்டைச் சுத்தம் செய்யமாட்டார். போட்டது போட்டபடியே கிடக்கும். கணவன் குழந்தைகளுக்கு மிகவும் செல்லம் கொடுப்பார். அவர்களை அடிக்கக் கூடாது என்று நினைப்பார். மனைவி குழந்தைகளுக்குச் செல்லம் கொடுக்கமாட்டார். அடித்து, கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்று நினைப்பார். மனைவி எப்போது பார்த்தாலும் கோயில், குளம் என்று வெளியே சுற்றி வருவதில் ஆர்வமுடையவராக இருப்பார். கணவனோ அலுவலகம், வீடு தவிர வேறு எங்கும் போக விரும்பமாட்டார். மாமனார் வீட்டில் தான் விரும்பிய அளவுக்கு மரியாதை தரவில்லை என்று கணவனுக்கு மனக்குறை இருக்கும். அதனால் மனைவியை அவருடைய அம்மா வீட்டுக்குப் போக கணவன் அனுமதிக்க மாட்டார். மனைவிக்கோ தனது அப்பா, அம்மாவைப் பார்க்க அதிக விருப்பம் இருக்கும். இப்படி நேர் எதிரான எண்ணங்கள், பழக்கவழக்கங்கள் பல குடும்பங்களில் இருக்கின்றன.

 இதனால் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்படுகின்றன. பின்னர் அவை வெறுப்பாக வளர்கின்றன. பிரிந்துவிடும் அளவுக்கு இட்டுச் செல்கின்றன.

 சென்னை மந்தைவெளியில் ஒரு தம்பதி 17 வருடமாகப் பேசிக் கொள்ளமாட்டார்கள். பையனுக்காக அவர்கள் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். என்னுடைய மனநல நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் பார்த்த அவர்களுடைய பையன், பெற்றோரை என்னிடம் அழைத்து வந்தான். அவர்களை உளவியல் அடிப்படையில் அணுகிப் பேசினால், பிரச்னை ரொம்பவும் சாதாரணமாக இருந்தது. வெங்காயத்தை உரிக்கும்போது வெங்காயத்தைத் தண்ணீரில் போட்டு அதன் பின் உரி. கண்களில் பாதிப்பு ஏற்படாது என்று கணவர் அக்கறையாகச் சொன்னதை மனைவி பிடிவாதமாகக் கேட்கவில்லை. அது கணவருக்குப் பிடிக்கவில்லை. இதுவே மனதுக்குள் வெறுப்பாக வளர்ந்து, பல மோதல்கள் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை.

 கணவன், மனைவி சண்டை சச்சரவுகளால் இப்போது புதிதாக ஒரு பிரச்னை தோன்றியிருக்கிறது. கணவன், மனைவி பிரச்னையைத் தெரிந்து கொண்ட வெளிநபர், இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த கணவனிடமோ, மனைவியிடமோ பேசி, தகாத உறவு ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் போக்கும் உள்ளது.

 இப்படியெல்லாம் நேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

 முதலில் ஆணின் இயல்பும் பெண்ணின் இயல்பும் வேறு. ஆணுக்கு பெண்ணின் உடல் பெரிதாகத் தோன்றும். பெண்ணுக்கு ஆணின் அன்புதான் பெரிதாகத் தோன்றும். இந்த இயல்பை இருவரும் புரிந்து கொண்டு நடந்தால் நிறையப் பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம்.

 தன் கருத்தைப் பிறர் மீது திணிக்க எப்போதும் முயற்சிக்கக் கூடாது. அடுத்தவரின் தேவையைப் புரிந்து கொள்ள வேண்டும். கணவனும் மனைவியும் அடிக்கடி அன்பாகப் பேசிக் கொள்ள வேண்டும். ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.

 காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் சிலர், ஓரிரு ஆண்டுகளுக்குள்ளேயே மணவிலக்கு கேட்கும் அளவுக்கு வந்துவிடுகிறார்கள். இதற்குக் காரணம், காதலிக்கும்போது ஆண், பெண் இருவருக்கும் ஈர்ப்பும், அன்பும்தான் இருக்கும். புரிதல் இருக்காது. நல்ல திருமண வாழ்க்கைக்குப் புரிதல் அவசியம்.

 இவற்றை இல்வாழ்க்கையில் சிக்கல் உள்ளவர்களிடம் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் தங்களை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். மாற்றிக் கொள்ளவும் அவர்களால் முடியாது. இதற்குக் காரணம், விருப்போ, வெறுப்போ, ஒருவிஷயம் பிடிப்பதோ, பிடிக்காமல் இருப்பதோ இவை எல்லாமும் அவர்களுடைய ஆழ்மனதில் பதிந்து போய் இருக்கும்.

 திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளுக்காக என்னிடம் வருகிறவர்களுக்கு, அவர்களுடைய ஆழ்மனதில் பதிந்து போயிருக்கும் இவை போன்றவற்றை ஹிப்னோ தெரபி அடிப்படையில் நீக்கிவிடுகிறேன். அதற்குப் பிறகு அவர்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும். கணவன் -மனைவி பிரச்னை மட்டுமல்ல, படிப்பில் ஆர்வமற்ற மாணவர்கள் பள்ளியில் முதல் மாணவனாக ஆவதற்காகவும், வாழ்வில் அவநம்பிக்கையுடன் தோல்வியால் துவண்டு கிடப்பவர்கள் வெற்றி பெறவும் கூட இந்த அடிப்படையில் மனநல ஆலோசனைகளும் சிகிச்சையும் அளிக்கிறேன்'' என்கிறார் பி.என். பிரபாகரன்.

முழு கட்டுரையைப் படிக்க →