திறமையின் மேல் நம்பிக்கை வையுங்கள்!
சுறுசுறுப்பு, வேகம், கம்பீரம், அழகு, மினுமினுப்பு எனப் பல சிறப்புகளைப் பெற்ற விலங்கு, குதிரை. அசுர வேகத்தில் தாவி ஓடும் குதிரையைப் பார்த்து மகிழ்வோர் ஒரு ரகம் என்றால் அதன் மீது ஏறி சவாரி செய்ய விரும்ப
சுறுசுறுப்பு, வேகம், கம்பீரம், அழகு, மினுமினுப்பு எனப் பல சிறப்புகளைப் பெற்ற விலங்கு, குதிரை. அசுர வேகத்தில் தாவி ஓடும் குதிரையைப் பார்த்து மகிழ்வோர் ஒரு ரகம் என்றால் அதன் மீது ஏறி சவாரி செய்ய விரும்புவோர் மற்றொரு ரகம். ஆனால், அந்த வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிடைக்கும்? அப்படியே வாய்ப்புக் கிடைத்தாலும் சவாரியுடன் நின்றுவிடாமல் சாதிப்பவர்கள் எத்தனை பேர்? குதிரைச் சவாரியில் சாதிக்கவும் செய்கிறார் தில்லியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியான சி. தாரிணி.
பள்ளிப் படிப்புடன், குதிரை சவாரிப் பயிற்சியிலும் ஈடுபட்டு குதிரைச் சவாரி விளையாட்டுகளில் பல பதக்கங்களையும் வென்றிருக்கும் தாரிணி, சமீபத்தில் தில்லி கன்டோன்ட்மெண்டில், பிரதமர் முன்னிலையில் நடைபெற்ற என்.சி.சி. குடியரசு தின அணிவகுப்பு முகாமின்போது குதிரைப் படைப் பிரிவில் கொடி ஏந்திச் சென்றார்.
குதிரைச் சவாரி விளையாட்டில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகப் பிரகாசிக்கும் தாரிணியை, தில்லி, "ஈஸ்ட் ஆப் கைலாஷ்' காலனியிலிருக்கும் அவரின் இல்லத்தில் சந்தித்தோம். இனி அவரின் துள்ளல் பேச்சிலிருந்து...
""எனது தந்தை சந்திரசேகர் சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்தவர். தில்லியில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். குழந்தைப் பருவம் முதலே குதிரைகள் மீதும், குதிரைச் சவாரி மீதும் எனக்கு அதீத ஆர்வம் இருந்தது.
ராணுவத்தில் எனது சித்தப்பாக்கள் ஹரிஹரன், ரகுராம் நாயுடு ஆகியோர் கர்னல், லெப்டினன்ட் கர்னலாகப் பணியாற்றுகின்றனர். பள்ளி விடுமுறையில் அவர்களது வீட்டுக்குச் செல்லும்போது குதிரைச் சவாரி செய்யும் வாய்ப்புக் கிடைத்தது.
சிறுமியாக இருந்தாலும் எனக்கிருந்த ஆர்வத்தைக் கண்டு தொடர்ந்து பயிற்சி பெற ஊக்கமூட்டினர். எனது தந்தை சந்திரசேகரும், தாய் அனுவும் எனக்கு குதிரைச் சவாரி பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தனர்.
வாரம்தோறும் இரு நாள்கள் காலையில் ஒன்றரை மணிநேரம் குதிரைச் சவாரி பயிற்சியில் ஈடுபடுவேன். பயிற்சியை முடித்துவிட்டு பள்ளிக்குச் சென்றுவிடுவேன். இப்பயிற்சிக்காக தனது பணிச் சுமையையும் பாராமல் எனது தந்தை என்னை அழைத்துச் சென்று ஊக்கப்படுத்துவார்.
நான் குதிரைச் சவாரியில் காட்டும் ஆர்வத்தைக் கண்டு, நான் பயிற்சி செய்வதற்காக சொந்தமாகவே குதிரையை வாங்கி பரிசாகக் கொடுத்தார் என் தந்தை. தவிர, என்னுடைய பள்ளி ஆசிரியை ரேணுகா கௌசிக்கும் குதிரைச் சவாரியில் எனக்கிருந்த ஆர்வத்தை வளர்த்தார். அது இப்போதும் தொடர்கிறது.
குதிரையை நடக்கப் பழக்குவது, தாவித் தாவி குதிக்கச் செய்வது, தரையில் வைக்கப்பட்டிருக்கும் தடுப்புகளைத் தாண்டுவது என டிரஸ்சாஜ், ஷோ ஜம்பிங், போல்பெண்டிங், ஹேக் எனப் பல பயிற்சிகளைப் பெற்றேன். மூன்றரை ஆண்டுகள் பயிற்சிக்குப் பிறகு குதிரைச் சவாரி விளையாட்டுகளில் பங்கேற்கத் தொடங்கினேன்.
இந்த விளையாட்டானது குழந்தைகள் பிரிவு, ஜூனியர் பிரிவு, சீனியர் பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. 13 வயது வரை உள்ளவர்களுக்கு குழந்தைகள் பிரிவு போட்டியிலும், 18 வயது வரை உள்ளவர்கள் ஜூனியர் பிரிவிலும், 21 வயதுக்கு மேல் உள்ளவர்கள் சீனியர் பிரிவிலும் பங்கேற்கலாம்.
2009-ம் ஆண்டு நடைபெற்ற தில்லி குதிரைச் சவாரி விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கமும், வெண்கலப் பதக்கமும் பெற்றேன். 2010-ம் ஆண்டில் நடைபெற்ற குதிரைச் சவாரி போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றேன்.
இந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற அகில இந்திய என்.சி.சி. குதிரைச் சவாரிப் போட்டியில் தங்கப் பதக்கமும், வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளேன். அகில உலக அளவிலான குதிரைச் சவாரி போட்டியில் நமது நாட்டிலிருந்து பங்கேற்பவர்கள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சிறப்பாக இல்லை. தற்போது வரை குதிரைச் சவாரி போட்டிகளில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என்ற அளவில்தான் நாம் உள்ளோம். எனது ஆசையெல்லாம் குதிரைச் சவாரி விளையாட்டில் ஒலிம்பிக்ஸ் அளவில் நம் நாடு பங்கேற்க வேண்டும் என்பதுதான். எனது லட்சியமும் அதுதான்.
அதற்கான தீவிரப் பயிற்சியில் ஈடுபட உள்ளேன். நம்மிடம் திறமை இருக்கிறது. ஆனால், அதன் மீது நாம்தான் நம்பிக்கை வைப்பதில்லை. எனது தன்னம்பிக்கையான அணுகுமுறை மூலம் அந்த லட்சியத்தை அடைவேன் என்று நம்புகிறேன்.
குதிரைச் சவாரி விளையாட்டில் ஈடுபட தொடர் பயிற்சி, விடாமுயற்சி அவசியம். இப்பயிற்சியில் ஈடுபடுவதால் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. சுறுசுறுப்பு, ஒருமுகச் சிந்தனை, உடல் ஆரோக்கியம் கிடைக்கிறது.
விளையாட்டுகளில் ஈடுபட்டால் மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டமாட்டார்கள் என்று கூறுவது தவறு. நான் விளையாட்டில் மட்டுமல்ல எனது வகுப்பிலும் நன்றாகப் படிக்கும் மாணவிதான்'' என்கிறார் "பளிச்' புன்னகையுடன் தாரிணி.