முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

"ஜில்'லுன்னு ஒரு மருத்துவம்!

ஆர்க்டிக், அன்டார்டிக் துருவப் பகுதிகளுக்குப் போயிருக்கிறீர்களா? என்று யாராவது கேட்டால், என்ன  சொல்வீர்கள்?  என்ன கேள்வியிது? இங்குள்ள மார்கழி மாதக் குளிரையே தாங்கமாட்டாமல் கம்பளியைத் தலை முதல் கால்வர

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

ஆர்க்டிக், அன்டார்டிக் துருவப் பகுதிகளுக்குப் போயிருக்கிறீர்களா? என்று யாராவது கேட்டால், என்ன

 சொல்வீர்கள்?

 என்ன கேள்வியிது? இங்குள்ள மார்கழி மாதக் குளிரையே தாங்கமாட்டாமல் கம்பளியைத் தலை முதல் கால்வரை போர்த்திக் கொண்டு திரிகிறோம். நாங்கள் ஆர்க்டிக், அன்டார்டிக் போக வேண்டுமா? நல்ல கதையாக இருக்கிறதே? ஏன் மனிதன் நல்லாயிருப்பது பிடிக்கவில்லையா? குளிரில் விரைத்துச் சாக வேண்டுமா? என்றெல்லாம் படபடப்பீர்கள்.

 ஆனால் ஆர்க்டிக், அன்டார்டிக் பகுதிகளைவிட மிகக் குறைந்த வெப்பநிலை உள்ள ஓர் இடம் சென்னை அண்ணா நகரில் இருக்கிறது. அது செüந்தரபாண்டியன் எலும்பு மற்றும் இணைப்பு மருத்துவமனை.

 ஆர்க்டிக் பகுதியில் மிகக் குறைந்த வெப்பநிலை மைனஸ் 40 டிகிரி சென்டிகிரேடு. அன்டார்டிக் பகுதியில் மிகக் குறைந்த வெப்பநிலை மைனஸ் 89 டிகிரி சென்டிகிரேடு. ஆனால் இந்த மருத்துவமனையில் உள்ள ஹோல் பாடி க்ரியோ தெரபி சேம்பரில் மைனஸ் 110 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலை உள்ளது. எதற்காக இந்தக் குளிர்ப் பேச்சு என்கிறீர்களா?

 இந்த மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ரவி சுப்பிரமணியத்திடம் கேட்டோம்: ""க்ரியோ தெரபி எனப்படும் முழு உடலுக்கான குளிர் மருத்துவத்தைச் சென்னையில் நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இந்தக் குளிர் மருத்துவத்துக்குத் தேவை மைனஸ் 110டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலை. இதற்காக 3 கோடி ரூபாய் மதிப்புள்ள க்ரியோ தெரபி சேம்பரை உருவாக்கியிருக்கிறோம்.

 இந்த மைனஸ் 110 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையில் 3 நிமிடங்கள் இருந்தால் மனித உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. குறிப்பாக மூட்டுவாதம் அல்லது வாத மூட்டழற்சி உள்ளவர்களுக்கு மூட்டுப் பகுதியில் வீக்கம் இருக்கும். மூட்டுக்குள் இருக்க வேண்டிய வழுவழுப்புத்தன்மை இல்லாமல் போய்விடும். இதனால் கடுமையான வலி இருக்கும். கால்களை நீட்டி மடக்க முடியாது. இந்த மூட்டுவாதத்தைக் குணமாக்கவும் முடியாது. இது ஏன் வருகிறது? எப்படி வருகிறது? என்றும் தெரியாது. இதற்கு மருத்துவர்கள் நிறைய மருந்து,மாத்திரைகள் கொடுத்து வலி தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள். இந்த மருந்து, மாத்திரைகளை நீண்டகாலம் பயன்படுத்தினால் சிறுநீரகம் போன்ற உறுப்புகளுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

 மூட்டு வாதம் உள்ளவர்களுக்குக் குளிர் மருத்துவம் செய்தால், மருந்து, மாத்திரைகளால் ஏற்படும் இப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும். எல்லாரையும் போல அவர்கள் சிரமமின்றி நடமாட முடியும்.

 இது எப்படி நடக்கிறது? அதிகப்படியான குளிரில் மனித உடல் இருக்கும்போது அதில் ஏற்படும் மாற்றங்களே இந்த நோய்களின் கடுமை குறையக் காரணம்.

 மனித உடலில் வெப்ப சென்சார்கள், குளிர் சென்சார்கள் உள்ளன. தோலில் அவை செயல்படுகின்றன. சாதாரணமாக, இந்த சென்சார்கள் வினாடிக்கு 15 முறை, உடல் குளிராக இருப்பதையோ, வெப்பமாக இருப்பதையோ மூளைக்கு அனுப்பி வைக்கின்றன.

 மைனஸ் 110 டிகிரி சென்டிகிரேடு உள்ள மிகக் குளிரான பகுதிக்குச் சென்றவுடன், இந்த சென்சார்கள் வினாடிக்கு 140 முதல் 150 தடவை உடலின் வெப்பநிலை குறைந்து போய்விட்டதை மூளைக்கு அறிவிக்கத் தொடங்குகின்றன. இதனால் மூட்டுவலியை மூளைக்கு அறிவிக்கும் வலி சென்சார்களின் வேகம் தானாகவே குறைந்துவிடுகிறது. இதனால் மூட்டுவலி குறைந்துவிடுகிறது. மூட்டுவாதத்தால் கால்களை நீட்டி மடக்க முடியாதவர்களால் வலியின்றி நடக்க முடிகிறது. இந்தக் குளிர் மருத்துவத்தை ஆண்டுக்கு 20 - 30 தடவை நோயாளிகளின் உடல்நிலைக்கேற்ப செய்ய வேண்டும். இந்த மருத்துவத்தால் மனித உடலில் உள்ள நோய்த் தடுப்பாற்றல் அதிகரித்து

 விடுகிறது.

 மூட்டுவலி, மூட்டு வாதம் போல வாதம் தொடர்பான இன்னொரு நோய் சோரியாசிஸ். இந்தக் குளிர் மருத்துவத்தின் மூலம் சோரியாசிஸ் பிணியாளர்களுக்குத் தோலில் ஏற்படும் அரிப்பு, படை எல்லாம் போய்விடுகின்றது.

 முதுகு எலும்பு அழற்சி, தண்டுவட எலும்பு அழற்சி உள்ளவர்களுக்கு ( Ankylosis spondylitis )  முதுகு எலும்பு, தண்டுவட எலும்பு ஆகியவற்றில் உள்ள இணைப்புகள் இறுகிப் போகும். முதுகு அப்படியே கூனிக் கொண்டே போகும். நடக்க முடியாது. உட்கார முடியாது. நிமிர முடியாது. அப்படியே படுக்கையில் கிடக்க வேண்டியதுதான். இந்த நோய்க்குத் தீர்வு இல்லை. மருந்து, மாத்திரைகள் இந்நோயாளிகளுக்கு வேலை செய்யாது. வலி மருந்து மட்டும் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு குளிர் மருத்துவம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

 விளையாட்டு வீரர்கள் இந்தக் குளிர் மருத்துவத்தைச் செய்து கொண்டால் இப்போதுள்ளதைவிட பல மடங்கு ஆற்றலுடன் விளையாட முடியும். குளிர் மருத்துவம் அவர்களுடைய தசைகளின் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. இதனால் அவர்கள் அதிகத் திறனுடன் விளையாட முடியும்.

 நாள் முழுக்க விளையாடும் அவர்கள், மாலையானால் சோர்ந்து போவார்கள். தசை இறுகிப் போய்விடும். மறுநாள் தசைகளைத் தளர்த்தும் பயிற்சிகளைச் செய்த பிறகே வழக்கமான விளையாட்டுகளில் ஈடுபட முடியும். குளிர் மருத்துவம் இப்பிரச்னைகளைப் போக்கிவிடுகிறது. அவர்களுக்கு அடிபட்டால் மிக விரைவில் குணமாகிவிடும். ஏனென்றால் குளிர் மருத்துவம் செய்து கொண்டதால், அதிகப்படியான ரத்த ஓட்டம் அவர்களுக்கு

 இருக்கும். இங்கே இந்த குளிர் மருத்துவச் சிகிச்சை இப்போதுதான் வந்திருக்கிறது என்றாலும், இந்த மருத்துவத்தில் ஜெர்மனியில் சிறப்பாகச் செய்துவரும் டாக்டர் ரெனார்ட் ஃபிரிக் என்பவரிடம் இதற்கான பயிற்சியை எடுத்துக் கொண்டேன். அவருடைய ஆலோசனையின்படி குளிர் மருத்துவத்துக்கான சேம்பர்களையும் அமைத்திருக்கிறோம்.

 குளிர் மருத்துவத்துக்கு வருகிற நோயாளிகளை வந்த உடனேயே மைனஸ் 110 டிகிரி உள்ள சேம்பருக்குள் அனுப்பிவிட மாட்டோம். தலை, கை,கால் விரல்கள், காது, மூக்கு, வாய் போன்றவற்றை மறைத்துவிடுவோம். நீச்சல் உடை போன்ற உடை ஒன்றை அணியச் செய்வோம். முதலில் மைனஸ் 50 டிகிரி வெப்பநிலை உள்ள சேம்பரில் சில நிமிடங்கள் இருக்கச் செய்து, அதன் பின்பு மைனஸ் 110 டிகிரி வெப்பநிலை உள்ள சேம்பருக்குள் அனுப்புவோம். அவர்கள் அங்கே 2- 3 நிமிடங்கள் மெதுவாக நடந்து கொண்டிருக்க வேண்டும்'' என்றார்.

 அவ்வளவு குளிருள்ள அந்த இடத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தைச் சொன்னதும், அழைத்துப் போனார்.

 மைனஸ் 50 டிகிரி வெப்பநிலை உள்ள அந்தச் சேம்பரின் கதவை லேசாகத் திறந்து... பார்த்தால், முகத்தில் அடித்த குளிர்மையில் ஒருகணம் உறைந்து நின்றோம். இதற்குள் போக வேண்டுமா? அதிர்ச்சியுடன் கேட்ட நம்மிடம், ""இதுதான் குளிர் மருத்துவம்'' என்கிறார் சிரித்துக் கொண்டே டாக்டர்  ரவி சுப்ரமணியம்.

முழு கட்டுரையைப் படிக்க →