முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சமூக சேவைக்குக் கல்யாணம் எல்லாம் ஒத்துவராது சார்!

சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம். தமிழ்நாடு அரசு கடற்கரை ஆரம்பப் பள்ளி. ஒருபுறம் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்பு. இன்னொருபுறம் கம்ப்யூட்டரில் டிடிபி பயிற்சி. அங்கிருந்து நடக்கிறோம். அருள்மிகு ஸ்

Updated On : 19 செப்டம்பர், 2012 at 10:44 PM
பகிர்:

சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம். தமிழ்நாடு அரசு கடற்கரை ஆரம்பப் பள்ளி. ஒருபுறம் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்பு. இன்னொருபுறம் கம்ப்யூட்டரில் டிடிபி பயிற்சி. அங்கிருந்து நடக்கிறோம். அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தின் முன்பு பரதநாட்டியப் பயிற்சி. அருகே உள்ள ராமகிருஷ்ணா மடத்தில் யோகாசனப் பயிற்சி. ஸ்லோகப் பயிற்சி. இந்தப் பயிற்சிகள் எல்லாம் நடப்பதற்குக் காரணம், சி.கிருஷ்ணமூர்த்தி. அவர் படித்ததோ வெறும் எட்டாம் வகுப்பு. வியப்பில் மூழ்கிப் போய் சிறிதுநேரம் கழித்து, அதிலிருந்து மீண்டு வந்து அவரிடம் பேசினோம்.

""என் குடும்பத்தினர் எல்லாருக்கும் மீன் பிடிப்பதுதான் தொழில். நானும் சிறுவயதில் கடலுக்குப் போயிருக்கிறேன். என்றாலும் சமூக சேவையில்தான் எனக்கு ஆர்வம் அதிகம். எனக்குப் பத்து வயது இருக்கும்போதே யாராவது சமூக சேவை செய்தால் அவர்களுடன் போய்விடுவேன். தெருக்களைச் சுத்தமாக்குவது, தண்ணீர் பம்ப் போடுவது என்று நானும் அவர்களுடன் சேர்ந்து திரிவேன். என் வயதுள்ள நண்பர்கள் சிலரும் என்னைப் போலவே சமூக சேவையில் ஆர்வமாக இருந்தார்கள்.

சில ஆண்டுகள் கழித்துப் பார்த்தால், என்னுடன் சமூக சேவை செய்த நண்பர்கள் அனைவரும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்விட்டார்கள். நான் மட்டும்தான் மிஞ்சினேன்.

Advertisement

இந்த நேரத்தில்தான் மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தின் தொடர்பு எனக்குக் கிடைத்தது. அவர்கள் நிறைய ட்யூஷன் சென்டர்களை ஏழை மாணவர்களுக்கு நடத்தி வருகிறார்கள். மருத்துவ உதவிகளும் செய்து வருகின்றனர். அங்கு எனக்குக் கிடைத்த பல தொடர்புகள் மூலமாக இந்தப் பகுதியில் வாழும் மீனவ மக்கள் பலருக்கும் பல நிறுவனங்களில் வேலை வாங்கிக் கொடுத்தேன்.

நானே ஒரு லெதர் கம்பெனியை 1992 இல் ஆரம்பித்தேன். நிறையப் பேருக்குத் தொழில் கற்றுக் கொடுத்தேன். என்னிடம் கற்றுக் கொண்டவர்கள் அதற்குப் பிறகு சொந்தமாக லெதர் கம்பெனிகளை வைத்தார்கள். என்னிடம் கற்றுக் கொண்டவர்கள் நடத்தும் 32 லெதர் கம்பெனிகள் இப்போதும் நடக்கின்றன.

இப்படி பலவிதங்களில் நான் என்னுடைய பகுதியில் வாழும் மீனவ மக்களுக்கு உதவிகள் செய்து வந்தாலும், பெரிய அளவுக்கு முன்னேற்றம் எதுவுமில்லை.

இங்குள்ள ஒரு மாணவர் வக்கீலுக்குப் படித்தாலும், கோர்ட்டில் வாதாடப் போகமாட்டார். ஏதாவது வக்கீலிடம் வேலை செய்வார். அல்லது சிறிய நிறுவனங்களில் வேலை செய்வார். காரணம் ஆங்கில அறிவு குறைவு. ஆங்கிலத்தில் பேச வராது. அதுபோல பட்டம் வாங்கியவர்கள் கூட குறைந்த சம்பளத்துக்குத்தான் வேலைக்குப் போகிறார்கள். அவர்களால் வேலையில் முன்னேற முடியவில்லை. உயர் பதவிகளுக்கும் போக முடியவில்லை. இதற்கு என்ன காரணம் என்று பார்த்தேன். ஒன்று ஆங்கிலத்தில் பேசும் திறன் இல்லை. இரண்டாவது கம்ப்யூட்டரில் விரைவாக டைப் அடிக்கக் கூடத் தெரியவில்லை.

எனவே இங்குள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளை நடத்தலாம் என்று நினைத்தேன். அதுபோல அடிப்படைக் கம்ப்யூட்டர் பயிற்சியும் தரலாம் என்று நினைத்தேன். நண்பர்கள் உதவியுடன் இங்குள்ள "தமிழ்நாடு அரசு கடற்கரை ஆரம்பப் பள்ளியில்' அனுமதி பெற்று இந்த வகுப்புகளை அங்கு நடத்தி வருகிறேன்.

அரசுப்பணி கிடைக்க டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத வேண்டும். அதற்கான பயிற்சியையும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தி வருகிறேன். அவர்கள் பிற்காலத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும்போது எளிதாகத் தேர்வு எழுதி வெற்றி பெறுவார்கள் இல்லையா? நிறையப் பேர் அரசுப் பணிக்குப் போவார்கள் இல்லையா?

அறிவு வளர்ச்சிக்கு நம்மால் முடிந்த சேவைகளைச் செய்தால் மட்டும் போதாது என்று நினைத்ததன் விளைவுதான் பரதநாட்டிய வகுப்புகள். ஸ்லோக வகுப்புகள். பரத நாட்டியம் எதற்கு? என்று ஆரம்பத்தில் சிலர் கேட்டனர்.

பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் இந்தப் பகுதி மாணவர்கள், வீட்டுக்கு வந்ததும் டிவிக்கு அடிமையாகிவிடுகிறார்கள். அவர்களுடைய கவனம் முழுவதையும் டிவி இழுத்துவிடுகிறது. இதனால் அவர்களால் நல்லமுறையில் படிக்கவும் முடியவில்லை. அதிக மதிப்பெண்கள் எடுக்கவும் முடியவில்லை. இப்படிப்பட்ட மாணவர்களைத் திசை திருப்பும் நோக்கத்துடன் பரதநாட்டிய வகுப்பை ஆரம்பித்தேன். இதனால் மாலை நேரங்களில் நாட்டியம் கற்க வந்துவிடுகிறார்கள். நாட்டியம் கற்க விருப்பமில்லாதவர்கள் யோகாசனம் கற்கிறார்கள்.

வெறும் எட்டாவது படித்துவிட்டு இவற்றையெல்லாம் எப்படிச் செய்ய முடியும் என்று நினைக்கலாம். இதில் அதிசயம் எதுவுமில்லை.

என்னுடைய சேவையைப் பார்த்துவிட்டு பலர் தாமாகவே உதவுகிறார்கள். மில்டன் என்ற ஆசிரியர் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு எடுக்கிறார். மீனாட்சி

சுந்தரம் சார் இந்தி வகுப்பு எடுக்கிறார். ஸ்லோகங்களைச் சொல்லித் தர ஆசிரியை மைனாவதி வருகிறார். இப்படிச் சேவை மனம் படைத்த பலருடைய உதவியால்தான் வெறும் எட்டாவது படித்த என்னால் இவ்வளவு செயல்களைச் செய்ய முடிகிறது'' என்கிறார் கண்களில் நன்றியுணர்வு பொங்க.

கிருஷ்ணமூர்த்தி திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏன்? என்று கேட்டதற்கு, ""நம்முடைய சமூக சேவைக்கு கல்யாணமெல்லாம் ஒத்துவராது சார்...'' என்கிறார் சிரிப்புடன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.