முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

படி‌ப்‌பே உயி‌ர் மூ‌ச்சு!

திண்டுக்கல் அருகே உள்ளது பழைய வத்தலக்குண்டு. அந்தச் சிறுமிக்குப் படிப்பதில் நிறைய ஆர்வம். ஆனால் 8 ஆம் வகுப்பு படிக்கும்போதே திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். படிப்பு நின்றுபோகிறது. அடுத்தடுத்து இரண

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

திண்டுக்கல் அருகே உள்ளது பழைய வத்தலக்குண்டு. அந்தச் சிறுமிக்குப் படிப்பதில் நிறைய ஆர்வம். ஆனால் 8 ஆம் வகுப்பு படிக்கும்போதே திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். படிப்பு நின்றுபோகிறது. அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள். வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள். ஆனால் படிப்பின் மீதான கட்டற்ற ஆர்வம் அப்படியே அந்தச் சிறுமிக்குள் உறைந்து நின்றுவிடுகிறது.

ஒரு வீடு. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மாலை நேரங்களில் ட்யூஷன் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நன்கு படித்த சிலர் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கு ட்யூஷன் படிப்பதற்கு எந்தக் கட்டணமும் இல்லை. இதை நடத்துபவர் அன்று படிப்பை பாதியிலேயே விட்ட சாந்தினி.

அவரிடம் பேசினோம்.

""என் சொந்த ஊரான பழைய வத்தலகுண்டில் உள்ள மக்களுக்கு நிறைய மூடநம்பிக்கைகள். பழக்க, வழக்கங்கள். அதனால்தான் என்னுடைய 13 வயதிலேயே என் பெற்றோர் எனக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். ஆனால், எனக்குப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் நிறைய இருந்தது.

இந்த நிலை எனக்கு மட்டுமல்ல. எங்கள் ஊரில் உள்ள நிறையப் பெண் குழந்தைகளின் நிலையும் இதுதான். இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஊர் முன்னேற வேண்டுமானால் அது கல்வி வளர்ச்சியால் மட்டுமே முடியும். ஆனால் எங்கள் ஊர் பிள்ளைகளுக்குப் படிப்பதற்கு நிறைய தடைகள். இன்றுள்ள அளவுக்குக் கூட பஸ் வசதி இல்லை. ஆட்டோ வசதி கிடையாது. ஊரில் உள்ள பிள்ளைகள் ட்யூஷன் படிக்க வேண்டும் என்றால் 3 கி.மீ. தூரத்தில் உள்ள வத்தலகுண்டுக்குத்தான் போக வேண்டும்.

எனவே எங்கள் ஊரிலேயே ட்யூஷன் நடத்தினால் என்ன? என்று நினைத்தேன். ஆனால் இங்குள்ளவர்களுக்கு ட்யூஷனுக்குப் பணம் தரும் அளவுக்கு வசதி இல்லை. இலவசமாக ட்யூஷன் சொல்லிக் கொடுத்தால் மட்டுமே தங்களுடைய பிள்ளைகளை ட்யூஷனுக்கு அனுப்புவார்கள்.

எனது தம்பிக்கும், எனக்கும் தெரிந்த மோகன், சரவணன், சாரதி, பாண்டி போன்ற நண்பர்களும், வேறு சில நண்பர்களும் இலவசமாக ட்யூஷன் சொல்லித் தர முன்வந்தார்கள்.

இப்படித்தான் 2001 இல் எங்களுடைய இலவச ட்யூஷன் மையம் ஆரம்பமானது. நடத்த இடம் கிடைக்காமல், ஊரில் உள்ள ஐயப்பன் கோயிலில் நடத்தினோம்.

முதலில் எல்லாம் எங்கள் ஊரில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 500 க்கு 250 மதிப்பெண்கள் எடுப்பது பெரிய சாதனை. அந்த அளவுக்குத்தான் கல்வித் தரம் இருந்தது. எங்களுடைய ட்யூஷன் வந்த பிறகு இந்த நிலை மாறத் தொடங்கியது.

எங்களிடம் ட்யூஷன் படித்த மாணவர்கள் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றார்கள். முத்துக்குமார் என்ற மாணவர் 1090 மதிப்பெண்களும், ராஜ்குமார் என்ற மாணவர் 1047 மதிப்பெண்களும் பெற்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

முதலில் எங்கள் ஊரில் மட்டும் இலவச ட்யூஷன் மையங்களை நடத்தி வந்த நாங்கள் எங்கள் ஊரைச் சுற்றி உள்ள குரும்பப்பட்டி, மூப்பனூர், சாமியார் மூப்பனூர், கன்னிமார் கோவில்பட்டி, கோட்டைப்பட்டி, கட்டகாமன்பட்டி ஆகிய ஊர்களிலும் இலவச ட்யூஷன் மையங்களைத் தொடங்கி நடத்துகிறோம்.

2005 ஆம் ஆண்டிலிருந்து "சுவாமி விவேகானந்தா கல்வி சேவா அறக்கட்டளை' என்ற பெயரில் இயங்கி வருகிறோம்.

எங்கள் ஊரில் மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டால் அவர்களுடைய படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்கள். நாங்கள் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறோம். படிப்பதில் அவர்களுக்கு என்ன பிரச்னை என்பதைத் தெரிந்து கொண்டு, அவர்களுடைய தேவைக்கு ஏற்ப சொல்லிக் கொடுத்தோம். தேர்வில் தோல்வியடைந்தவர்கள் எல்லாம் பாஸ் ஆகிவிட்டார்கள்.

இலவச ட்யூஷன் நடத்துவதுடன், தையல் பயிற்சி, கணினி பயிற்சி வகுப்புகளும் நடத்துகிறோம். ஆர்வமுள்ளவர்கள் வந்து கற்றுக் கொள்ளலாம்.

சில மாணவர்கள் மிகவும் நன்றாகப் படிப்பார்கள். பிளஸ் டூ வில் நிறைய மதிப்பெண்களும் எடுப்பார்கள். ஆனால் மேற்படிப்பு படிக்க வசதி இருக்காது. அவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்திருக்கிறோம்.

உதாரணமாக விக்னேஸ்வரன் என்ற மாணவன் நிறைய மதிப்பெண் எடுத்திருந்தான். அவனுடைய அம்மா கட்டடத் தொழிலாளி. அப்பாவுக்கு உடல்நலக் குறைவு. வேலைக்குப் போக முடியவில்லை. அவனைப் படிக்க வைக்க முடியாமல் தவித்தார்கள். அவனைத் திண்டுக்கல்லில் உள்ள ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் சேர்த்திருக்கிறோம். அவனுக்கான கல்விக் கட்டணத்தை ரவிச்சந்திரன் என்ற நண்பர் செலுத்தி வருகிறார். எங்களுக்கு உள்ள பிரச்னை ட்யூஷன் நடத்துவதற்கான இடம்தான். முதலில் ஐயப்பன் கோயிலில் நடத்தி வந்தோம். தொடர்ந்து அங்கேயே நடத்த முடியவில்லை. வீடுகளை வாடகைக்குப் பிடித்து நடத்தி வருகிறோம். எங்களுடைய சேவையைக் கேள்விப்பட்டு சென்னையைச் சேர்ந்த சேது பிரகாசம், ஹரிஹர சுப்பிரமணியன் ஆகியவர்கள் எங்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

திண்டுக்கல்லில் சீலப்பாடியில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்தவர்களும் எங்களுக்கு உதவுகிறார்கள். அவர்களுடைய பள்ளியில் பயன்படுத்தப்பட்ட பழைய விளையாட்டுப் பொருட்களை எங்களுடைய மாணவர்களுக்குக் கொடுக்கிறார்கள். நாங்கள் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். படிப்பு வராத மாணவர்கள் விளையாட்டில் திறமையானவர்களாக வரக் கூடும். கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு முறையான விளையாட்டுப் பயிற்சி கொடுத்தால் அனைத்திந்திய போட்டிகளில் மட்டுமல்ல, அனைத்துலகப் போட்டிகளிலும் வெற்றி பெறுவார்கள் என்பது உறுதி.

கல்வியின் மீதுள்ள ஆர்வத்தால் இலவச ட்யூஷன் நடத்த என்னால் இயன்ற அளவுக்கு நான் செயல்பட்டாலும், நான் படிக்கவில்லை என்று குறை மனசுக்குள் இருந்து கொண்டே இருந்தது. அதனால் பி.ஏ. வரலாறு அஞ்சல் வழியில் படித்தேன். சில ஆண்டுகளில் அப்படிப் படிப்பது செல்லாது என்று அரசு சொல்லிவிட்டதால், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி பாஸானேன். இப்போது பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதியிருக்கிறேன். என் கூட என் மகள் ரதிதேவியும் தேர்வு எழுதி பாஸாகி, இப்போது கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்திருக்கிறார்'' என்கிறார் மகிழ்ச்சியுடன்.

முழு கட்டுரையைப் படிக்க →