முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

அனாதைக் குழந்தைகளுக்கு யார் இருக்கிறார்கள்?

கணவனின் கொடுமை தாங்க முடியாமல், தன் இரு பெண் குழந்தைகளுடன் தானும் தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறாள் அந்தப் பெண். அந்தக் குழந்தைகளில் ஒன்று அதைப் புரிந்து கொள்கிறது. ""நாம சாக வேண்டாம் அம்மா... நான் பெ

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:18 PM
பகிர்:

கணவனின் கொடுமை தாங்க முடியாமல், தன் இரு பெண் குழந்தைகளுடன் தானும் தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறாள் அந்தப் பெண். அந்தக் குழந்தைகளில் ஒன்று அதைப் புரிந்து கொள்கிறது. ""நாம சாக வேண்டாம் அம்மா... நான் பெரியவளாகி நல்லா படிச்சு வேலைக்குப் போயி உன்னைக் காப்பாத்துவேன் அம்மா'' என்று கெஞ்சுகிறது. தாய் மனம் மாறி திரும்ப வீட்டுக்கு வருகிறாள்.

அந்தக் குழந்தை கமலா, இப்போது "டிப்ளமோ இன் நர்சிங்' படித்துவிட்டு பெரிய மருத்துவமனையில் பணிபுரிகிறார். அம்மாவைக் காப்பாற்றுகிறார்.

கண்ணெதிரில் தாயை வெட்டிக் கொலை செய்வதைப் பார்க்கிறார்கள் அக்காவும், சின்னத் தம்பியும். அதிர்ச்சியில் பேச முடியாமல் நிற்கிறார்கள். அப்பா சிறைக்குப் போனதும் யாருமற்ற அனாதைகளாகப் போகிறார்கள் அவர்கள். ஆனால் அவர்கள் இன்று பள்ளிக்குப் போகிறார்கள், பிற குழந்தைகளைப் போல.

இப்படி யாருமற்ற அனாதைக் குழந்தைகளையும், அப்பா, அம்மா இருவரில் யாரேனும் ஒருவரில்லாத வீட்டுக் குழந்தைகளையும் பாதுகாத்து வளர்த்து வருகிறது "சில்ரன்ஸ் ஹோம் ஆஃப் ஹோப்' நிறுவனம்.

ஆனால் இந்த இல்லம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் நோக்கமே வேறு.

இந்த நிறுவனத்தை நடத்திவரும் இந்திராணி சிவராமிடம் பேசினோம்:

""என் அம்மா லில்லி பிரபாகர் 1970 இல் இந்த இல்லத்தை ஆரம்பித்தார். தந்தை பிரபாகர் ஐ.ஏ.எஸ். அதிகாரி. அம்மாவுக்குச் சமூக சேவையில் ஆர்வம் அதிகம். ஒரு தொழுநோய் மறுவாழ்வு மையத்திலும் அவர் சமூக சேவை செய்து வந்தார். அப்போது அவர் தெரிந்து கொண்ட ஓர் உண்மை அவரை அதிர வைத்திருக்கிறது.

தாய்க்கும், தந்தைக்கும் தொழுநோய் இருந்தால், அவர்களின் குழந்தைகளுக்கும் சிறிது நாளில் தொழுநோய் வந்துவிடுவதைப் பார்த்து அவர் அதிர்ந்து போயிருக்கிறார்.

இந்தக் குழந்தைகளை அவர்களுடைய பெற்றோரிடம் இருந்து பிரித்து வளர்த்தால் என்ன? என்று அவருக்குத் தோன்றியது. அவருடைய சினேகிதி சம்பா வெங்கடாசலம் மூலம் சென்னை புரசைவாக்கத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அவர்களுக்கான இல்லத்தை ஆரம்பித்தார். முதலில் பத்துக் குழந்தைகள்தாம் சேர்ந்தார்கள். பின்பு இந்த எண்ணிக்கை 30 ஆனது. அதற்குப் பிறகு ஜூன் மாதமானால் எங்கள் வீட்டு வாசலில் பெரிய கூட்டமே நிற்க ஆரம்பித்தது, எங்களுடைய இல்லத்தில் தங்களுடைய குழந்தைகளைச் சேர்ப்பதற்காக.

தொழுநோயாளிகளின் குழந்தைகளைத் தனியாகப் பிரித்து வளர்த்தபோது, ஒரு பிரச்னை. அந்தக் குழந்தைகள் சமூகத்திலிருந்து தாங்கள் ஒதுக்கப்பட்டதாக உணர்ந்தார்கள். பிறருடன் பேசவும், பழகவும் கூச்சப்பட்டார்கள். எனவே பிற குழந்தைகளையும் இல்லத்தில் சேர்த்துக் கொள்ள என் அம்மா முடிவெடுத்தார். அனாதைக் குழந்தைகளையும், பெற்றோரில் ஒருவரில்லாத குழந்தைகளையும் சேர்த்துக் கொண்டார்கள்.

எங்கள் இல்லத்தில் இந்தக் குழந்தைகளை வளர்த்து, அவர்களைக் கல்லூரியில் படிக்க வைத்து, இந்த உலகத்தில் வாழத் தகுதியையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்திக் கொடுக்கிறோம். பெற்றோர் யாருமற்ற குழந்தைகளைப் படிக்க வைத்து, வேலை வாங்கிக் கொடுத்து, கல்யாணம் செய்து வைத்து, அவர்கள் தனியாக வாழ,புதுவீட்டுக்குத் தேவையான கட்டில், பாத்திரங்கள் எல்லாம் வாங்கிக் கொடுக்கிறோம். சுருக்கமாகச் சொல்லப் போனால் அந்தக் குழந்தைகளுக்கு எல்லாமுமாக இருக்கிறோம்.

இப்போது எங்கள் இல்லத்தில் 99 குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் 11 குழந்தைகள் தொழுநோயாளிகளின் பிள்ளைகள். நாங்களே ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆரம்பப் பள்ளியையும் நடத்துகிறோம். அதற்குப் பிறகு, அவர்களைச் சாதாரணப் பள்ளிகளில் படிக்க வைக்காமல் நல்ல தரமான பள்ளிகளில் படிக்க வைக்கிறோம். அவர்கள் பள்ளிக்குச் சென்று வர வாகனங்களை ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்தக் குழந்தைகள் பெரிய ஆட்களாக உருவாக வேண்டும். அனாதைக் குழந்தைகள் என்று யாருக்கும் தெரியக் கூடாது என்பதே எங்கள் நோக்கம்.

2007 இல் என் தாய் மறைந்த பிறகு, இந்த இல்லப் பணிகளில் நேரடியாக நான் ஈடுபட்டு வருகிறேன்.

1970 இலிருந்து 42 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்த இல்லத்தை நடத்த பலர் உதவியாக இருந்திருக்கிறார்கள். 99 குழந்தைகளில் 45 குழந்தைகளுக்கான செலவுகளுக்கு அரசின் சமூக நலத்துறை உதவுகிறது. "ஹோம் ஆஃப் ஹோப் இன் கார்ப்பரேட்டடு யுஎஸ்ஏ' என்ற வெளிநாட்டு நிறுவனம் சில ஆண்டுகள் உதவி செய்தார்கள். இது தவிர நண்பர்கள், எங்கள் இல்லத்தைப் பற்றித் தெரிந்து கொண்டு உதவுபவர்கள் போன்றவர்களின் நன்கொடையாலும் இந்த இல்லத்தை எங்களால் நடத்த முடிகிறது.

எங்கள் இல்லத்துக்கு மதுரவாயலில் அரசு நிலம் கொடுத்து உதவியது. இல்லத்துக்கான கட்டடம் கட்டி 40 ஆண்டுகளாகிவிட்டதால், ரொம்பவும் பழைய கட்டடம் ஆகிவிட்டது. எனவே புதிய கட்டடம் கட்டி வருகிறோம். இன்னும் முழுமையடையவில்லை. நிதிப் பற்றாக்குறைதான் காரணம். இல்லம் இருக்கும் இடத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதால் அதற்காக 25 அடி நிலத்தை எடுத்துக் கொண்டார்கள். இன்னும் 15 அடி இடத்தை எடுக்கப் போவதாகக் கூறுகிறார்கள். அப்படியானால் எங்கள் பிள்ளைகளுக்கு விளையாட இடம் இல்லாமற் போய்விடும். எனவே இல்லத்தின் மாடியில் விளையாடுவதற்கான வசதிகளைச் செய்யலாம் என்று நினைக்கிறோம். எல்லாவற்றுக்கும் பணம் தேவைப்படுகிறது. நிறையப் பேரிடம் உதவி கேட்டு இருக்கிறோம்.

சாதாரணமாக ஒரு குழந்தைக்கு தாய் வழியிலும் தாத்தா, பாட்டி இருப்பார்கள். தந்தை வழியிலும் இருப்பார்கள். அத்தை,மாமா, சித்தப்பா, சித்தி போன்ற உறவுகளும் இருப்பார்கள். ஆனால் அனாதைக் குழந்தைகளுக்கு யார் இருக்கிறார்கள்? இதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். அப்படி நினைத்துப் பார்த்தால் இப்போதுள்ள அனாதை, ஆதரவற்ற குழந்தைகளின் நிலையில் பெரிய மாற்றம் ஏற்படும்'' என்கிறார் நெகிழ்வுடன்.

முழு கட்டுரையைப் படிக்க →