முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஒன்றாம் வகுப்பு குழந்தையிடம் மலையாளம் கற்றுக் கொண்டேன்!

கே.வி.ஷைலஜா, மொழிபெயர்ப்பாளர். மலையாள இலக்கியங்களைத் தமிழுக்கு அளிப்பவர். இவர் நடத்தும் பதிப்பகம் வெளியிட்டுள்ள மூன்று நூல்கள் தமிழக அரசின் விருதுகளைப் பெற்றுள்ளன. ஆறு மலையாள நூல்களைத் தமிழுக்கு அளித்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:32 AM
பகிர்:

கே.வி.ஷைலஜா, மொழிபெயர்ப்பாளர். மலையாள இலக்கியங்களைத் தமிழுக்கு அளிப்பவர். இவர் நடத்தும் பதிப்பகம் வெளியிட்டுள்ள மூன்று நூல்கள் தமிழக அரசின் விருதுகளைப் பெற்றுள்ளன. ஆறு மலையாள நூல்களைத் தமிழுக்கு அளித்திருக்கும் அவர், தற்போது மொழிபெயர்த்துக் கொண்டு இருப்பது கே.ஆர்.மீரா எழுதிய "ஆச்சார்' என்ற மலையாள நாவலை. அவரிடம் பேசினோம்:

 ""என் தாய்மொழி மலையாளம். என் அப்பா, அம்மாவுக்குக் கேரளத்தில் உள்ள பாலக்காடுதான் சொந்த ஊர். ஆனால் நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் திருவண்ணாமலையில்தான். பள்ளியில் தமிழ்தான் படித்தேன். மலையாளம் பேசத் தெரியும். எழுதப் படிக்கத் தெரியாது. இதில் வியப்பு என்னவென்றால் என் அம்மா கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு

 வந்து தமிழ் படிக்கக் கற்றுக் கொண்டார். சாண்டில்யனின் வரலாற்று நாவல்களைப் படிப்பார். அவர் படிப்பதைப் பார்த்து, நானும் தமிழ் புத்தகங்களைச் சிறுவயதிலேயே படிக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் காமிக்ஸ் புத்தகங்கள், அப்புறம் சிவசங்கரி, ஜெயகாந்தன் புத்தகங்கள் என படிக்க ஆரம்பித்தேன்.

Advertisement

 அதற்குப் பிறகு எனது கணவர் பவா.செல்லதுரையின் அறிமுகம் கிடைத்தது. கூடவே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தொடர்பும் கிடைத்தது. என் புத்தக வாசிப்பு வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்தது. சுந்தரராமசாமி, அம்பை, நாஞ்சில்நாடன், அசோகமித்திரன், லா.ச.ராமாமிருதம் எனப் படிக்க ஆரம்பித்தேன். அதற்கு முன்பு தமிழில் சொந்தமாகப் படைக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால் இலக்கியவாதிகளின் படைப்புகளைப் படித்தவுடன், நம்மால் இலக்கியத் திறனுடன் எழுத முடியாது என்ற அவநம்பிக்கை வந்துவிட்டது. அதனால் தமிழ் எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தை மனதிலிருந்து அழித்துவிட்டேன்.

 2001 இல் திருவண்ணாமலையில் "முற்றம்' என்ற இலக்கிய அமைப்பை நடத்தி வந்தோம். அதில் பேசுவதற்கு மலையாள எழுத்தாளர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு வந்திருந்தார். அவருடைய மலையாளப் பேச்சைத் தமிழில் மொழிபெயர்த்தேன். அது பலருடைய பாராட்டுகளைப் பெற்றது. பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவருடைய புத்தகம் ஒன்றை என்னிடம் கொடுத்து, ""தமிழில் மொழிபெயர்க்கலாமே?'' என்று கேட்டார். எனக்கோ மலையாளம் எழுத, படிக்கத் தெரியாது. ரொம்பவும் அவமானமாக இருந்தது. அந்த நேரம் பார்த்து என் அக்கா கே.வி.ஜெயஸ்ரீயின் 1 வது படிக்கும் மகள் சுகானா கேரளாவிலிருந்து வந்திருந்தாள். அவள்தான் எனக்கு மலையாளம் கற்றுக் கொடுத்தாள். எனக்கு மலையாளம் பேசத் தெரியும் என்பதால் மிக எளிதில் மலையாளம் படிக்கக் கற்றுக் கொண்டேன்.

 அதற்குப் பிறகு பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தந்த புத்தகத்தை "சிதம்பர நினைவுகள்' என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தேன். 2002 இல் வெளிவந்த அந்தப் புத்தகம் என்னைத் தமிழ் இலக்கிய உலகுக்குத் தெரிய வைத்தது. இப்போதும் கூட என்னைப் பார்ப்பவர்கள் சிதம்பர நினைவுகள் ஷைலஜாதானே? என்று கேட்பார்கள்.

 என்.எஸ்.மாதவனின் "பரியாய கதெகள்' என்ற நூலை மொழிபெயர்த்தேன். அது "சர்மிஷ்டா' என்ற பெயரில் தமிழில் வெளிவந்தது. "ஒரே கடல்' என்ற மலையாளத் திரைப்படத்துக்கு கதை,வசனம் எழுதிய கே.ஆர்.மீராவின் சிறுகதைகளை மொழிபெயர்த்தேன். நடிகர் மம்முட்டி எங்களுடைய குடும்ப நண்பர். ஏற்கெனவே பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் புத்தகத்தை நான் தமிழில் மொழிபெயர்த்ததைத் தெரிந்திருந்த அவர், தனது வாழ்வனுபவங்களைத் தமிழில் மொழிபெயர்க்க முடியுமா? என்று கேட்டார். அது "மூன்றாம் பிறை' என்ற பெயரில் தமிழில் வெளிவந்தது.

 நான் கேரளத்தில் பிறந்து வளராததால், எனக்கு அங்குள்ள வாழ்க்கைமுறை, பழக்க, வழக்கங்கள் எல்லாம் அவ்வளவாகத் தெரியாது. மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும்போது இதனால் நிறையச் சிரமங்கள் ஏற்பட்டன.

 எனது மொழிபெயர்ப்பு நூல்களைத் தமிழில் படிக்கிறவர்களுக்கு நெருடல் இருக்கக் கூடாது. அதே சமயம் மூல நூலின் சாராம்சம், கலையம்சம் கெட்டுவிடக் கூடாது. இதனால் மொழிபெயர்க்கும்போது தெரியாத விஷயங்கள் வந்தால், மூலநூலின் ஆசிரியரிடம் நேரடியாகக் கேட்டுத் தெரிந்து கொள்வேன். கேரளாவில் உள்ள நண்பர்கள், உறவினர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.

 எடுத்துக்காட்டாக, மலையாளத்திலிருந்து ஒரு கதையை மொழிபெயர்க்கும்போது, அந்தக் கதையில் திருமணமாகாத ஒரு பெண் இறந்தபோது அவளுக்குச் செய்யப்பட்ட சடங்குகள் எனக்குப் புரியவில்லை. கதையை எழுதிய எழுத்தாளரிடமும், நண்பர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். இறந்து போன அந்தப் பெண்ணுக்கு வாழை மரத்தைக் கல்யாணம் செய்து வைக்கிறார்கள். வழக்கமான கல்யாணத்தின்போது நடக்கும் விருந்து எல்லாம் வைக்கிறார்கள். அதற்குப் பிறகுதான் அந்தப் பெண்ணை அடக்கம் செய்கிறார்கள். இதை நான் இதற்கு முன்பு கேள்விப்பட்டதில்லை.

 மலையாளத்தில் எழுதிப் புகழ்பெற்ற பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகளை மொழிபெயர்க்காமல், அவ்வளவு வெளிச்சத்துக்கு வராத எழுத்தாளர்களின் நூல்களை மொழிபெயர்க்க வேண்டும் என்பதே என்

 விருப்பம்.

 நான் படித்தது வணிகவியல். எம்.காம்., எம்ஃபில் என்று வணிகவியலில் படித்துவிட்டு, கல்லூரியில் ஆசிரியையாக வேலை செய்து கொண்டு இருந்தேன். ஆனால் நண்பர்கள் சிலரின் ஆலோசனைப்படி அமலதாஸ் என்ற நண்பரின் உதவியுடன் வம்சி புக்ஸ் என்ற பதிப்பகத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறேன். இதுவரை 250 தலைப்புகளில் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறேன். இந்த ஆண்டு தமிழக அரசின் விருதுகள் மூன்று எங்களுக்குக் கிடைத்தன. சிறந்த நாடகம், சிறந்த கவிதை, சிறந்த கட்டுரை நூல்களை வெளியிட்டதற்காக விருதுகள் கிடைத்தன'' என்றார் கே.வி.ஷைலஜா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.