பாசம் காட்டினால் நேசம் காட்டும்!
நாய், பூனை, பசு போன்ற வீட்டு விலங்குகள் மட்டுமே பாசத்திற்குக் கட்டுப்பட்டவை. காட்டு விலங்குகள் அப்படிப்பட்டவை அல்ல. அவை இயற்கையிலேயே மூர்க்கத்தனமான விலங்குகள்' என்று கருதுவோர் பலர். ""அப்படியல்ல, அன்ப
நாய், பூனை, பசு போன்ற வீட்டு விலங்குகள் மட்டுமே பாசத்திற்குக் கட்டுப்பட்டவை. காட்டு விலங்குகள் அப்படிப்பட்டவை அல்ல. அவை இயற்கையிலேயே மூர்க்கத்தனமான விலங்குகள்' என்று கருதுவோர் பலர்.
""அப்படியல்ல, அன்பு செலுத்திப் பழகினால் அவையும் நேசம் காட்டுபவைதான். அவற்றைக் கையாளத் தெரிந்துகொண்டால் அவை நம்மிடம் மிகவும் பாசம் காட்டும்'' என்கிறார் புதுதில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவின் மூத்த வனவிலங்கு மருத்துவரான ந. பன்னீர்செல்வம்.
தமிழகத்தைச் சேர்ந்த இவர், மத்திய அரசின் வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 240 ஏக்கர் பரந்த வன உயிரியல் பூங்காவில் 16 ஆண்டுகளாக மருத்துவராகப் பணியாற்றி வருபவர்.
சிங்கம், புலி, சிறுத்தை என 1,500 காட்டு விலங்குகள் உள்ள இந்த உயிரியல் பூங்காவில் அவரது பணி அனுபவம் குறித்து கலந்துரையாடினோம்:
""எனது சொந்த ஊர் மதுரை. தந்தை நடராஜன், ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பள்ளிப் படிப்பை மதுரையில் முடித்தேன்.
பிறகு, சென்னை அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் 1975-ம் ஆண்டு சேர்ந்தேன். அங்கு படிப்பை முடித்த பிறகு 5 ஆண்டுகள் அரசு கால்நடைப் பராமரிப்புத் துறையில் சேர்ந்து மதுரை மாவட்டம், பாலமேடு, சோழவந்தான், குட்லாம் பட்டி, கொட்டாம்பட்டி, வத்தலகுண்டு உள்ளிட்ட இடங்களில் பணியாற்றினேன்.
தொடர்ந்து படிக்க வேண்டும். சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் என்னுள் இருந்ததால் 1989-ல் பட்ட மேற்படிப்பை அரசு உதவியுடன் தொடர்ந்தேன்.
பிறகு வண்டலூர் உயிரியல் பூங்காவில் அயல்பணியில் சேர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றினேன். அப்போதுதான், வன உயிரினங்களுடன் பழகுவதில், அவற்றுக்கு சிகிச்சை அளிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது.
அப்போது, பன்றிமலையில் முள்வேலியில் சிக்கிக்கொண்ட சிறுத்தையைப் பிடிக்கச் சென்ற அனுபவமும் கிடைத்தது. வனத்துறை சார்பில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் பிரிவில் தமிழகத்தின் சார்பில் இருமுறை தேர்வாகி டேராடூன், புவனேஸ்வர் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று வந்தேன்.
இதனிடையே, அயல்பணி முடிந்து கால்நடை பராமரிப்புத் துறையிலேயே மீண்டும் பணியாற்ற வேண்டிய சூழல். எனக்கோ வன விலங்குகளுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம்.
அச்சமயம், தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் கால்நடை மருத்துவர் பணியிடம் இருப்பதை அறிந்தேன். இதையடுத்து, அயல்பணி அடிப்படையில் 1996-ல் இங்கு பணியில் சேர்ந்தேன். தமிழகத்தில் இருந்து முதன் முதலாக இங்கு கால்நடை மருத்துவராக வந்தவன் என்பதை அறிந்தபோது மகிழ்ச்சி அடைந்தேன்.
பூங்காவில் விலங்குகளின் இறப்பு விகிதத்தைக் குறைத்து பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபட்டேன். சிறந்த வகையில் பணியாற்றியதால் 2001-ம் ஆண்டில் அயல்பணியில் இருந்து நிரந்தரப் பணிக்கு மாற்றப்பட்டேன்.
இதனிடையே 1997-ல் லண்டனில் ஒன்றரை மாதம் வன விலங்குகள் தொடர்பான பயிற்சிக்குச் சென்றேன். தவிர, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் உள்ள வன உயிரின பூங்காக்களுக்கும் சென்று வந்துள்ளேன்.
இந்தியாவில் அனைத்து முக்கிய வன உயிரின பூங்காக்களுக்கும் சென்று வந்துள்ளேன். பூங்காக்கள் இடையேயான விலங்குகள் பரிமாற்றம், பூங்கா மதிப்பீட்டுக் குழுவில் இருந்ததன் மூலம் பல இடங்களுக்கும் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.
தமிழக அரசு, ராஜஸ்தான் அரசிடம் இருந்து சிறந்த பணிக்கான பாராட்டுச் சான்றிதழும் பெற்றுள்ளேன்.
பொதுவாக வீட்டு விலங்குகளைக் கையாளுவது எளிது. ஆனால், காட்டு விலங்குகளைக் கையாளுவது கடினமான விஷயம். நாம் அவற்றிடம் அன்பு செலுத்துகிறோம் என்பதை அவை புரிந்துகொண்டுவிட்டால் நமக்கு அவை கட்டுப்பட்டு நடக்கும்.
1993-ம் ஆண்டின்போது கோவையில் ஒரு விழாவுக்காக கேரளத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட யானைகளில் ஒன்றுக்கு திடீரென மதம் பிடித்துவிட்டது. யானைப் பாகனையும் அது கொன்றுவிட்டது. அதைப் பிடிப்பதற்கு மயக்க ஊசி செலுத்த வேண்டியிருந்தது. அதற்காக நாங்கள் மேற்கொண்ட முயற்சி அசாத்தியமானது. அதைப் பாராட்டி அரசு சான்றிதழ் அளித்தது.
அதேபோன்று, தில்லியில் மரக் கிடங்கில் புகுந்த சிறுத்தையைப் பிடிக்க மயக்க மருந்து கொடுக்க முயன்றபோது அது வேகமாக எங்களை நோக்கித் தாக்க வந்தது. சிறிது நேரம் தாமதித்திருந்தாலும் அது என் மீது பாய்ந்திருக்கும். இது மறக்க முடியாத மற்றொரு அனுபவம்.
மிருகங்களிடம் அன்போடு பழகினால் அவை நல்லவை. புலி, சிங்கம் போன்ற 12 மிருகங்களை நெருக்கமாக வைத்து பராமரித்த அனுபவமும் 300 முதல் 400 வனவிலங்குகளுக்கு சிகிச்சை அளித்த அனுபவமும் உண்டு. காட்டு மிருகங்கள் தன்னிடம் யாராவது நெருங்கி வந்தால் அவர்கள் குறிப்பிட்ட தூரத்தில் வரும்போதே தப்பிக்க முயற்சிக்கும். அடுத்த கட்டத்திற்கு அவர்கள் நெருங்கி வந்தால் மிரட்டும். மிகவும் நெருங்கி வரும்போதுதான் தனக்கு ஆபத்து வருவதாக நினைத்து தாக்கும். இதுதான் அதன் இயல்பு.
கிராமத்தில் புகும் புலி, சிறுத்தை போன்றவை கூட மனிதர்களைத் தாக்குவதற்காக வருவது கிடையாது. வழி தவறியோ, நீர் அருந்தவோ, ஆடு,மாடு, கோழி ஆகியவற்றை பிடிக்கவோதான் வருகின்றன.
அதேபோன்று, புலி, சிங்கம் போன்ற மிருகங்கள் காட்டுப் பகுதியில் தனது எல்லையை வரையறுத்துக் கொண்டு அதற்கான அடையாளமாக சிறுநீர் உள்ளிட்ட தனது எச்சத்தை மரங்களின் மீது விட்டுச் செல்லும். மற்ற மிருகங்கள் அந்தப் பகுதிக்கு வரும்போது அதன் வாசனையை உணர்ந்து உள்ளே நுழையாமல் திரும்பிச் சென்றுவிடும். அப்படியே நுழைந்தால் இரு மிருகங்களுக்கும் இடையே பலப்
பரீட்சை நடைபெறும்.
அதேபோன்று, தனது எல்லைப் பகுதிக்குள் பிற மான்கள் வராமல் இருக்கச் செய்வதற்காக, மான் தனது கண்ணின் கீழ்ப் பகுதியில் உள்ள சுரப்பில் இருந்து ஒரு திரவத்தை மரத்தின் மீது தேய்த்துவிட்டுச் செல்லும்.
வன விலங்குகளைக் கையாளுவதற்கு வனவிலங்கு மனோதத்துவம் அறிந்திருப்பது அவசியம். மனிதக் குரங்கு தாய்ப்பாசம் மிக்கது. மனிதர்களின் வாழ்க்கை முறையை ஒட்டியே அதன் வாழ்க்கையும் அமைந்திருக்கும். சிகிச்சைக்கு ஊசி போடுவது என்றால் அதற்கு ஒரே பயம்தான். கூச்சல் போட்டு ஊரையே கூட்டிவிடும்.
அதேபோன்று, நீர் யானை தண்ணீருக்குள்ளே பாலினப்பெருக்கம் செய்வது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் செய்துகொள்ளும் தன்மை உடையது. 300 கிலோ முதல் 500 கிலோ வரை எடை இருந்தபோதிலும் நன்றாக நீந்தும் பிராணி அது.
தில்லி உயிரியல் பூங்காவில்தான் இந்தியாவிலேயே முதல் முறையாக சிங்கத்திற்கு கண்புரை அறுவைச் சிகிச்சை செய்தோம். அதன்பிறகு, ராஜஸ்தானில் இரண்டு புலி, ஒரு சிங்கத்திற்கு இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வன விலங்குகளுடனான எனது பணி அனுபவம் மகிழ்ச்சிக்குரியது..!'' என்கிறார் பிரம்மச்சாரியான டாக்டர் ந.பன்னீர்செல்வம்.