முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

இரவின் முடிவில்

தமிழ் நாடக மேடைகளில் முயற்சி செய்ய முடியாத சில இந்தியப் படைப்புகளை, ஆங்கிலப் பின்னணியில் காண்கையில்

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:54 AM
பகிர்:

தமிழ் நாடக மேடைகளில் முயற்சி செய்ய முடியாத சில இந்தியப் படைப்புகளை, ஆங்கிலப் பின்னணியில் காண்கையில், அந்த உழைப்பு பலத்த வரவேற்பைப் பெறுவதைப் பார்க்க முடிந்தது. "ஜஸ்ட்டஸ் ரெப்பர்டா' அமைப்பின் வாயிலாக எழுத்தாளர் டாக்டர் கௌரி ராம் நாராயண் இயக்கிய "நைட்ஸ் என்ட்' நாடகத்தை கலாúக்ஷத்திரா அரங்கில் பார்த்தபோது, முதலில் ஏற்பட்டது பிரமிப்பு. முற்றிலும் புதிய களம், புதிய கற்பனை, புதிய உத்தி.
 ராஜஸ்தானத்துக் காடுதான் கதை நடக்கும் களம். கேரளாவைச் சேர்ந்த இளைஞன் கிருஷ்ணன் நாயர் வீட்டிலிருந்து ஓடிப்போய், அங்கே வனக் காவலராக வேலை பார்க்கிறான். அவனுடைய தாத்தா, தந்தை இருவருமே கதகளி கலைஞர்கள். எனவே அவன் பிறவியிலேயே அந்தக் கலையில் ஊறிப்போனவன். சில காட்சிகளில் அவன் கதகளியில் ஒரு பாத்திரமாக மாறி நடிக்கும்போது ஸ்ரீஜித் கிருஷ்ணாவின் திறமை அசர வைக்கிறது. இந்தப் பின்னணிக்கேற்ற அரங்கைக் கற்பனை செய்தது முதல், இசை, இயக்கம் என்று கௌரி ராம்நாராயண் ஏற்றிருக்கும் பொறுப்பு நாடகத்தின் ஒவ்வொரு காட்சியமைப்பிலும் தெரிகிறது.
 அருகிலிருக்கும் மோகியா பழங்குடியினர் கிருஷ்ணன் நாயரை பெரிதும் மதிக்கிறார்கள். அந்தக் காட்டில் கிடைத்த ஒரு புலிக்குட்டியை வளர்க்கும் கிருஷ்ணன் நாயர், அதனுடன் பேசுவதும், "அம்மிணி அம்மிணி' என்று அதை அபினயத்திலேயே சீராட்டுவதும் ஒரு நடனக் கலைஞனால் மட்டுமே மேடையில் கொண்டுவருவது சாத்தியம். ஸ்ரீஜித் கிருஷ்ணாவின் நடிப்பும் எளிமையான ஆங்கில வசன உச்சரிப்பும் வெகு இயற்கையாக இருக்கின்றன. தன் தாயை நினைத்துக் குமுறுவதும், தங்கை பிரேமாவை நினைந்து உருகுவதும் நாடகத்தின் உயிர் நாடியான காட்சிகள். ஸ்ரீஜித் அரங்க அமைப்பிலும் தன் கலைத்திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். கூண்டிலிருக்கும் பறவையுடன் அவர் சிநேகமாகக் கொஞ்சுவதிலும், சீண்டுவதிலும் மெலிதான நகைச்சுவையை இழைத்திருக்கிறார். ஏமாற்றம், இழப்பு போன்ற சோகத்தின் தாக்கங்கள் வலிமை மிக்கவை. உணர்ச்சியுடன் அவற்றை வெளியிடும்போது பார்வையாளர் அதன் முழுவீச்சையும் உணர முடிகிறது.
 கிருஷ்ணாவின் சிநேகிதன் பில்லுவின் சகோதரி சாந்தினியாக அகிலா ராம்நாராயண் ஏற்றிருக்கும் பாத்திரமும் சவால் நிறைந்தது. கிட்டத்தட்ட பரத நாட்டியத்தில் கடைப்பிடிக்கப்படும் அரைமண்டி நிலையில் உடலின் உயரத்தைக் குறைத்துக்கொண்டு, அவர் நடிக்கும்போது பாத்திர அமைப்பில் எத்தனை கவனம் செலுத்தியிருக்கிறார் என்பது புரிகிறது. ஒரு வனவாசியாக அவர் கிருஷ்ணாவை எட்ட இருந்தே காதலிக்கும்போதும், நெருங்கி வந்து வசப்படுத்த முனையும்போதும் நடிப்பில் அவருடைய திறமை பளிச்சிடுகிறது. குரலிலேயே ஒரு வசியத்தை வெளியிட அகிலாவால் முடிந்திருக்கிறது. கிருஷ்ணாவின் இருப்பிடத்தில் இவர் நுழைவதும், ஓசைப்படாமல் பண்டங்களை வைத்துவிட்டு வெளியேறுவதும்கூட கவிதை நயத்துடன் மென்மையாக அமைந்திருக்கின்றன.
 சதனம் சிவதாஸனின் கதகளி இசையும், சதனம் ராமகிருஷ்ணனின் செண்டை வாத்திய வாசிப்பும், கோவிந்த வெங்கடேசன் மற்றும் நந்த மேனனின் மென்மையும், இனிமையும் நிறைந்த குரலிசையும் நாடகத்தின் உயர்வுக்குப் பெரும் பங்களிப்புகள். மேடையில் லைட்டிங் கே. வெங்கடேஷின் பொறுப்பு. கானகத்தின் இருளும், பகலின் ஒளியும் இவருடைய ஒளியமைப்பில் உயிர் பெறுகின்றன. கலாமண்டலம் மனோஜும் பால் ஜேக்கப்பும் இதன் வெற்றிக்கு உதவியதற்காக, கௌரி நன்றி தொவித்தார்.
 நாடகத்தின் பின்னால் கடின உழைப்பு தெரிகிறது. இத்தனை கற்பனை வளம் நிறைந்த கௌரி ராம்நாராயண் நாவல் ஏதும் எழுதாமல் இருப்பது வியப்பைத் தருகிறது. குறைந்தபட்சம் அவருடைய நாடகப் படைப்புகளாவது வெளிச்சத்துக்கு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது.
 சுற்றுச் சூழல் பின்னணியில், புலிகளைக் காக்க வேண்டிய சிக்கலான சூழல் அரசியலாகிவிட்டதையும் நாசுக்காகச் சுட்டிக்காட்டுகிறார் கௌரி ராம்நாராயண். சென்னை ரசிகர்களோடு மட்டுமே நின்றுவிடாமல் வேறு தளங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டிய படைப்பு.

முழு கட்டுரையைப் படிக்க →