FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தலையங்கம்

குப்பை மேலாண்மை சவால்

குப்பைகளை எப்படி மாற்றி பயன்படுத்தலாம் என்பது குறித்த ஆராய்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

Updated On : 12 மார்ச் 2026, 6:21 am IST
சாலையில் கொட்டிக் கிடக்கும் குப்பை.
பகிர்:

நாடு முழுவதுமே முறையாகத் திட்டமிடாமல் நகரங்கள் தொடர்ந்து விரிவடைந்து வருவதால் திடக்கழிவு (குப்பைகள்) மேலாண்மை என்பது மிகப் பெரிய சவாலாக உருவெடுத்து வருகிறது. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் புறநகர்ப் பகுதிகளாக இருந்த இடங்களில் மக்கள் அதிகம் வசிக்காததால் நகரங்களில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்பட்டன. அந்த இடங்கள் இன்று நகர எல்லைக்குள் வந்துவிட்டன.

கோவை வெள்ளலூர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக கோவை மாநகராட்சியின் குப்பைக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. சுமார் 650 ஏக்கர் பரப்பளவு உள்ள இங்கு தினமும் 1,200 டன் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இங்கு ஏதாவது காரணத்தால் குப்பை தீப்பற்றி எரியும்போது, பல கி.மீ. சுற்றளவுக்கு துர்நாற்றம் வீசுவதுடன் சுவாசக் கோளாறு போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு இடையே தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் கடந்த 2013}இல் வழக்குத் தொடரப்பட்டது. வெள்ளலூர் குப்பைக் கிடங்கை அகற்றவும், தேங்கியுள்ள குப்பைகளை பயோமைனிங் முறையில் அகற்றவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த 3.10.2018}இல் உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.

Advertisement

Advertisement

மக்கும் குப்பைகள் கோவை மாநகரில் 33 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையங்கள், வெள்ளலூரில் உள்ள மறுசுழற்சி மையத்தில் உரமாக மாற்றப்பட்டாலும் சேகரமாகும் குப்பைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் இது யானைப் பசிக்கு சோளப் பொரியாகவே உள்ளது.

நம் நாட்டின் அனைத்துப் பகுதியினரும் வேலை தேடி வரும் பகுதியாக திருப்பூர் மாறி உள்ளது. நகரம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இங்கு சேகரமாகும் குப்பைகள் கடந்த 40 ஆண்டுகளாக பாறைக்குழிகளில் கொட்டப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். சிலர் நீதிமன்றங்களில் வழக்கும் தொடுத்தனர்.

தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படிப்பட்ட நிலை என்றில்லை. தேசத்தின் தலைநகரான புதுதில்லியில் காஜிப்பூர், ஓக்லா, பால்ஸ்வா ஆகியவை பிரதான குப்பைக் கிடங்குகளாக உள்ளன. இங்கு பெரிய மலைபோல குப்பைகள் குவித்துவைக்கப்பட்டுள்ளன. காஜிப்பூர் குப்பைக் கிடங்கில் 2027}28}ஆம் ஆண்டுக்குள் குப்பை மலையின் உயரத்தைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதில் இருந்தே பிரச்னை எவ்வளவு தீவிரமானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்த சூழ்நிலையில்தான், திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் போபால் மாநகராட்சிக்கு உள்பட்ட ஆதம்பூர் குப்பைக் கிடங்கில் விதிமுறைகளுக்கு முரணாக குப்பை கொட்டப்பட்டதற்கு எதிரான வழக்கில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.1.80 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த 2023-இல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டபோது சில உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

"வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சேகரிக்கப்படும் கழிவுகளை காய்கறி போன்ற மக்கும் குப்பை, நெகிழி போன்ற மக்காத குப்பை, கையுறைகள், ஊசி, காலாவதி மருந்துகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள், காலாவதி பேட்டரி, மடிக்கணினி, கைப்பேசி, அதன் உதிரி பாகங்கள் போன்ற அபாயகரமான கழிவுகள் என நான்கு வகைகளாகப் பிரித்து சேகரிக்க வேண்டும்.

மேயர்கள், கவுன்சிலர்கள் குப்பை தரம் பிரிப்பதை உறுதி செய்யும் முதன்மை ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட வேண்டும். நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகளை ஏப்ரல் 1}ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும்.

விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றால் முதல் முறை குற்றம் புரியும் தனிநபர் அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் கடமையைச் செய்யத் தவறிய அதிகாரிகள், விதிகளுக்கு கட்டுப்படாதவர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் சுற்றுச்சூழல் சட்டத்தின்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

திடக்கழிவு மேலாண்மை குறித்து பள்ளிப் பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட வேண்டும். திடக்கழிவை குறைவாக உருவாக்குவது, வீட்டிலேயே அதை தரம் பிரித்து கழிவுகளை சேகரிப்போரிடம் ஒப்படைப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்பன உள்ளிட்டவை உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளன.

குப்பை கொட்டும் விஷயத்தில் உள்ளாட்சி அமைப்பினர் ஓரளவு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும். அரசு எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் இது எனது ஊர், இங்கு பொது இடத்தில் குப்பை கொட்டமாட்டேன், தரம் பிரித்தே வழங்குவேன், நெகிழியைத் தனியே பிரிப்பேன் என பொதுமக்கள் தீர்மானித்தால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு ஓரளவு தீர்வு ஏற்படும். அதேபோன்று, மக்கள்தொகையும் நகரமயமாக்கலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் குப்பைகளை எப்படி மாற்றி பயன்படுத்தலாம் என்பது குறித்த ஆராய்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments