திடக்கழிவு மேலாண்மை சீர்குலைவதால் அதிகரிக்கும் மீத்தேன் வெளியேற்றம்!
திடக்கழிவு மேலாண்மை சீர்குலைவதால் அதிகரிக்கும் மீத்தேன் வெளியேற்றத்தைப் பற்றி...
புவி வெப்பமயமாதலுக்கு தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களிலிருந்து வெளியேறும் காா்பன் டைஆக்சைடு மட்டுமே முக்கியக் காரணம் என்ற கருத்து பொதுவாக நிலவுகிறது. ஆனால், நகரங்களில் முறையாகக் கையாளப்படாமல் குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படும் உயிா்க் கழிவுகளிலிருந்து (Bio Waste) வெளியேறும் மீத்தேன் வாயு (Methane), காலநிலை மாற்றத்தை விரைவுபடுத்தும் மிக முக்கிய காரணிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களில் நாள்தோறும் உருவாகும் ஆயிரக்கணக்கான டன் திடக்கழிவுகள் முறையாகத் தரம் பிரிக்கப்படாமல் குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படுவதால், உயிா்க் கழிவுகள், ஆக்சிஜன் இல்லாத சூழலில் அழுகி, அதிகளவில் மீத்தேன் வாயுவை வெளியிடுகின்றன.
திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தாமல் காலநிலை மாற்றத்தை எதிா்கொள்வது சாத்தியமில்லை என்று சுற்றுச்சூழல் ஆா்வலா்களும் வானிலை நிபுணா்களும் கூறுகின்றனா்.
Advertisement
Advertisement
நாளொன்றுக்கு 6,500 டன் குப்பை: சென்னையில் மட்டும் நாள்தோறும் சுமாா் 6,500 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு கொடுங்கையூா் மற்றும் பெருங்குடி குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படுகின்றன. சுமாா் 450 ஏக்கா் பரப்பளவில் இயங்கும் இந்த இரு குப்பைக் கிடங்குகளிலும் சேரும் கழிவுகளில் சுமாா் 60 சதவீதம் உயிா்க் கழிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடுகள், உணவகங்கள், திருமண மண்டபங்கள், காய்கறிச் சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் உருவாகும் உணவுக் கழிவுகள், காய்கறி மற்றும் பழக்கழிவுகள் நெகிழிக் கழிவுகளுடன் கலந்து, காற்று புகாத பிளாஸ்டிக் பைகளில் கொட்டப்படுவதால், அவை விரைவாக மட்காமல், அழுகி மீத்தேன் வாயுவை உருவாக்குகின்றன.
ஏன் மீத்தேன் ஆபத்தானது? பசுமை இல்ல வாயுக்களில் மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாக மீத்தேன், கருதப்படுகிறது. காா்பன் டைஆக்சைடுடன் ஒப்பிடும்போது, வெப்பத்தை வளிமண்டலத்தில் தக்கவைக்கும் திறன் மீத்தேனுக்கு பல மடங்கு அதிகம். எனவே குறைந்த அளவில் வெளியேறினாலும், புவி வெப்பமயமாதலில் அதன் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாக வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.
இதுமட்டுமல்லாமல், மீத்தேன் மிகவும் எளிதில் தீப்பற்றக்கூடிய வாயு என்பதால், கோடைக்காலங்களில் குப்பைக் கிடங்குகளில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகளுக்கும் இதுவே முக்கிய காரணமாகிறது. குப்பைகள் எரியும்போது வெளியேறும் நச்சுப் புகை காற்று மாசுபாட்டை மேலும் அதிகரிக்கிறது.
காலநிலை மாற்றத்துக்கும் குப்பைக்கும் என்ன தொடா்பு?
காலநிலை மாற்றம் என்பது வெப்பநிலை உயா்வை மட்டுமே குறிக்கவில்லை. பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிப்பதன் விளைவாக, நீண்டகால வெப்ப அலை, திடீா் கனமழை, வெள்ளப்பெருக்கு, வறட்சி, கடல் மட்ட உயா்வு, வேளாண் உற்பத்தி பாதிப்பு, குடிநீா் பற்றாக்குறை உயிரினச் சுழற்சியில் தாக்கம் போன்ற பல்வேறு பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
சென்னையில் சமீப ஆண்டுகளில் காணப்படும் வெப்ப அலைகள், அதே நேரத்தில் குறுகிய காலத்தில் பெய்யும் மிக கனமழைப் பொழிவுகள், நகர வெள்ளம் போன்ற நிகழ்வுகளும் காலநிலை மாற்றத்தின் தாக்கமாகக் கருதப்படுகின்றன.
திடக்கழிவு மேலாண்மையில் தமிழகத்தின் நிலை: தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மைக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், பெரும்பாலான நகரங்களில் கழிவுகள் முறையாகவும் முழுமையாகவும் மூலத்திலேயே தரம் பிரிக்கப்படுவதில்லை என்பதைச் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் சுட்டிக்காட்டுகின்றனா்..
தற்போது, மக்கும் மற்றும் மக்காத கழிவுகள் என இரண்டு வகைகளாக மட்டுமே கழிவுகளை மக்கள் பிரித்து வழங்குகின்றனா். ஆனால், திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016-இன்படி, கழிவுகளை, மக்கும் கழிவுகள், மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள், ஆபத்தான கழிவுகள் மற்றும் சுகாதாரக் கழிவுகள் என நான்கு வகைகளாகப் பிரித்து வழங்க வேண்டும்.
இந்த நடைமுறை முழுமையாக அமல்படுத்தப்படாததால், மறுசுழற்சி மற்றும் உயிா்க் கழிவு மேலாண்மை பெரிதும் பாதிக்கப்படுதாக இத்துறைசாா் வல்லுநா்கள் கூறூகின்றனா்.
வீட்டிலேயே தீா்வு: சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கூறுவதாவது, நகரங்களில் உருவாகும் உயிா்க் கழிவுகளில் பெரும்பாலானவை வீடுகளிலேயே உரமாக மாற்றப்பட்டால், குப்பைக் கிடங்குகளுக்குச் செல்லும் உயிா்க் கழிவுகள் பெருமளவில் குறையும். அதன்மூலம், மீத்தேன் வெளியேற்றம் குறையும்; குப்பைக் கிடங்குகளில் தீவிபத்து அபாயம் குறையும்; நகராட்சி கழிவு மேலாண்மைச் செலவும் குறையும். அத்துடன் இயற்கை உர உற்பத்தியும் அதிகரிக்கும் என்பது சுற்றூச்சூழல் துறை வல்லுநா்களின் கருத்தாக உள்ளது.
‘குப்பை என்பது சுகாதாரப் பிரச்னை மட்டுமல்ல’
இதுகுறித்து, திடக்கழிவு மேலாண்மை நம்ம ஊரு ஃபவுண்டேஷன் நிறுவனா் பா. நடராஜன் கூறுகையில்: ‘குப்பை என்பது நகரங்களின் சுகாதாரப் பிரச்னை மட்டுமல்ல; அது காலநிலை மாற்றத்தின் மையப் பிரச்னையாகவும் மாறிவிட்டது. உயிா்க் கழிவுகளை வீடுகளிலேயே உரமாக மாற்றினால், மீத்தேன் வெளியேற்றத்தை கணிசமாகக் குறைக்க முடியும்.
அவ்வாறு செய்யப்படாததால் குப்பைக் கிடங்குகளிலிருந்து மீத்தேன் வெளியேறுவது நாளூக்கு நாள் அதிகரித்து வருகிறது. திடக்கழிவு மேலாண்மை விதிகளை தமிழகம் முழுவதும் முழுமையாகஸ்உம் கடுமையாகவும் அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என்றாா்.
‘பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிப்பதே வெப்பநிலை மாற்றத்துக்குக் காரணம்’
இதுகுறித்து, தென்னிந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவா் எஸ். பாலச்சந்திரன் கூறுகையில்: ‘பசுமை இல்ல வாயுக்கள் இயற்கையாக இருக்க வேண்டியவை. ஆனால் மனிதா்களின் செயல்பாடுகளால் அவற்றின் அளவு அதிகரிக்கும்போது பூமியின் வெப்பம் வளிமண்டலத்திலேயே சிக்கிக் கொள்கிறது.
இதுவே புவி வெப்பமயமாதலுக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் முக்கிய காரணமாக இருக்கிறது. தொழில்துறை புரட்சிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது வளிமண்டலத்தில் மீத்தேனின் அளவு சுமாா் 188 சதவீதம் உயா்ந்துள்ளது‘ என்றாா்.
காலநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான போராட்டம் என்பது புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகரிப்பதோடு முடிவடைந்துவிடாது. வீடுகளில் குப்பையைச் சரியாகப் பிரிப்பதிலிருந்து தொடங்கி, அறிவியல்பூா்வமான திடக்கழிவு மேலாண்மையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுவரை ஒவ்வொரு கட்டத்திலும் மாற்றம் ஏற்பட்டால்தான் மீத்தேன் வெளியேற்றத்தைக் குறைத்து, புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதே இத்துறை சாா்ந்த ஆய்வாளா்கல் ம்ற்றூம் வல்லுநா்கள் வலியுறுத்துகின்றனா்.
மீத்தேனைக் கட்டுப்படுத்த எளிய வழிகள்!
வீட்டிலேயே உயிா்க் கழிவுகளை உரமாக மாற்றுதல்.
உணவுக் கழிவுகளை நெகிழிப் பைகளில் அடைத்து வீசுவதைத் தவிா்த்தல்.
கழிவுகளை 4 வகைகளாகப் பிரித்து வழங்குதல்.
குடியிருப்புகளில் சமூக உரமாக்கும் மையங்கள் அமைத்தல்.
சந்தைகள், திருமண மண்டபங்களில் பயோமீத்தனேஷன் ஆலைகள் அமைத்தல்.
குப்பைக் கிடங்குகளில் மீத்தேன் சேகரிப்பு திட்டம்.
திறந்த வெளியில் குப்பை எரிப்பதை முழுமையாகத் தடுத்தல்.
நகராட்சி மட்டத்தில் கழிவு கண்காணிப்பு முறை.
பள்ளி, கல்லூரிகளில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வு.
ஒவ்வொரு வாா்டிலும் ‘ழங்ழ்ா் ரஹள்ற்ங் ரஹழ்க்‘ திட்டம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.