கடவுள் வந்திருந்தார் (நாடக விமர்சனம்)
சுஜாதாவின் "கடவுள் வந்திருந்தார்' நாடகத்தை "சென்னை அரங்கம்' சார்பாக சமீபத்தில் சென்னை மியூஸியம் அரங்கத்தில் நிகழ்த்தினார் பாரதி மணி.
சுஜாதாவின் "கடவுள் வந்திருந்தார்' நாடகத்தை "சென்னை அரங்கம்' சார்பாக சமீபத்தில் சென்னை மியூஸியம் அரங்கத்தில் நிகழ்த்தினார் பாரதி மணி. சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டு "நாளைய மனிதன்' என்னும் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறார் பெரியவர் சீனிவாசன். தன்னை மறந்து கதையை சுவாரஸ்யமாகப் படித்துக் கொண்டிருப்பவரின் எதிரில் உண்மையிலேயே பறக்கும் தட்டில் வந்து இறங்கிவிடுகிறான் நாளைய மனிதன் ஜோ. வேண்டா விருந்தாளியாக சீனிவாசனின் வீட்டில் தங்கிவிடும் ஜோ, சீனிவாசனின் கண்களுக்கு மட்டும்தான் தெரிவார்.
ஜோவுடன், சீனிவாசன் நடத்தும் உரையாடல் மற்றவர்களுக்கு சீனிவாசன் தனக்குத் தானே ஏதோ பிதற்றுவதாகத் தோன்றுகிறது. அவரின் மனைவி, மகள், மாடிப் பகுதியில் குடித்தனம் இருக்கும் சுந்தர் ஆகியோரே நம்ப மறுக்கின்றனர். சீனிவாசனுக்கு சித்தப்பிரமை பிடித்துவிட்டது என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர். இதைச் சரிசெய்வதற்கு பேய் ஓட்டுபவர், மனோதத்துவ நிபுணர் என பல முயற்சிகளில் இறங்குகின்றனர் சீனிவாசனின் குடும்பத்தினர். இந்தக் காட்சிகளில் நடக்கும் களேபரம்தான் கதை.
கலைஞர்களையும் மேடையையும் முழுமையாக தன்னுடைய ஆளுமைக்குள் கொண்டுவந்து நாடகத்துறையில் தமக்கிருக்கும் அனுபவத்தை சென்னை ரசிகர்களுக்கு
உணர வைத்தார் பாரதி மணி. மேடையில் ஓடியாடி அவர் நடித்ததைப் பார்த்தவர்கள் அவருக்கு வயது 76 என்றால் நம்பமாட்டார்கள். அந்த அளவுக்கு அவரின் உடல் மொழியும் வசன உச்சரிப்பில் அவரின் "டைமிங்'கும் சிறப்பாக இருந்தன. குறிப்பாக நாளைய மனிதன் ஜோவுடன் அவர் நிகழ்த்தும் ஆரம்பகட்ட உரையாடல்!
சீனிவாசன்: ""உங்கள் கிரகத்தில் பிரஜா உற்பத்தியெல்லாம் எப்படி?''
ஜோ: ""எனக்கு விதிக்கப்பட்ட எண்ணுடனான பெண்ணின் கையைப் பிடித்து குலுக்கியவுடன், அவள் அணிந்திருக்கும் உடையின் பாக்கெட்டிலிருந்து குழந்தையை எடுத்துத் தந்துவிடுவாள்... அவ்வளவுதான்... உங்கள் உலகத்தில் எப்படி?''
சீனிவாசன்: ""எங்கள் உலகத்தில் கைகுலுக்கிய பத்தாவது மாதத்தில் குழந்தை பிறக்கும்!!''
ஒருகட்டத்தில் சீனிவாசன் சொல்வதில் இருக்கும் உண்மையை உணர்ந்து கொள்கிறான் அவர் வீட்டு மாடியில் குடியிருக்கும் சுந்தர் (இவருக்கு சீனிவாசனின் மகளின் மீது காதல்). ஜோவின் உதவியுடன் நிகழ்த்தப்படும் சாகசங்களால் சீனிவாசன், "சீனிவாசானந்தா ஜோ'வாகி மக்களுக்கு அருள்பாலிக்கிறார். அவரின் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்படுகிறது.
உலகின் பல பகுதிகளிலிருந்தும் பணம் குவிகிறது. அதன்மூலம் பல நல்ல காரியங்களை அவர் செய்கிறார். அவரின் அத்யந்த சீடனாக மாடிவீட்டு சுந்தர். எதிர்கால மனிதன் ஜோ விடைபெறும் வேளை வந்துவிடுகிறது. தனக்கு தெய்வீக சக்தி இருப்பதாக பிறர் நம்பும் நாடகத்தை, ஒரு நேரடி தொலைக்காட்சி பேட்டியின் மூலம் முடிவுக்குக் கொண்டுவர நினைக்கிறார் சீனிவாசன்.
ஆனால் அதை தன் எளிய யுக்தியின் மூலமாகவே முறியடித்துவிடுகிறார் சுந்தர். நல்லது நடக்கவேண்டுமானால் இது தொடரவேண்டும் என்கிறார். ""உண்மையைச் சொல்லும்போது பைத்தியக்காரன் என்றார்கள். பொய்யைச் சொன்னேன் கடவுளாக்கிவிட்டார்கள்...'' என்னும் சீனிவாசானந்தா ஜோவின் "பன்ச்' வசனத்தோடு நாடகம் முடிகிறது.
டி.வி.ஸ்ரீதர், பத்மஜா நாராயணன், ராம்குமார், வைஷாலி (வசனத்தில் தெலுங்கு வாடை அதிகம்) ஆகியோரின் நடிப்பு நன்றாக இருந்தது. மேடை நிர்வாகமும் ஒளியமைப்பும் நாடகத்தை உயிர்ப்போடு ரசிப்பதற்கு உதவின.
ஒருமணி அடித்தால் வரவேண்டும், இரண்டு மணி சேர்ந்தால் போல் அடித்தால் போய்விடவேண்டும். இதுதான் எதிர்கால மனிதன் ஜோவுக்கும் சீனிவாசனுக்கும் இடையேயான உடன்பாடு. ஒருகாட்சியில் மணி அடிக்காமலேயே ஜோ போய்விடுகிறார். நாடகத்தின் நீளத்தை குறைத்தால் நன்றாக இருக்கும்.