Rose is a rose,
is a rose, is a rose -
இது ரோஜாவை புகழும் பிரபல ஆங்கில கவிதையாகும்.
மே மாதம் என்றால் கோடை சீசனும், குளுகுளு உதகையும்தான் உடனடியாக நினைவுக்கு வருபவை. ஆனால், உதகையைப் பொறுத்தமட்டில் மே மாதம் என்பது மலர்களுக்கான திருவிழா மாதம் என்றால் மிகையாகாது.
அதிலும் உதகையில் அரசினர் தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர்க்காட்சியும், ரோஜா பூங்காவில் நடைபெறும் ரோஜா கண்காட்சியும் சர்வதேச அளவிலும் பிரசித்தி பெற்றவை. வழக்கமாக, மே மாதம் 2வது வார இறுதி நாள்களில் ரோஜா கண்காட்சியும், மே மாதம் 3வது வார இறுதியில் மலர்க்காட்சியும் நடைபெறும். எனவே, இந்த வாரம் (மே 11, 12) ரோஜா கண்காட்சி நாள்களாகும்.
ரோஜா கண்காட்சி நடைபெறும் உதகை ரோஜா பூங்காவைக் குறித்து கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?
ஆசியாவிலேயே ஏன், சர்வதேச அளவில்கூட அதிக அளவிலான ரோஜா ரகங்களைக் கொண்டுள்ள ரோஜா பூங்கா என இப்பூங்கா அழைக்கப்படுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் விஜயநகரம் பகுதியில், சுமார் 4 ஹெக்டேர் பரப்பளவில் இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
உதகையிலுள்ள அரசினர் தாவரவியல் பூங்காவில் மலர்க்கண்காட்சி கொண்டாட ஆரம்பித்து 100 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த 1995ஆம் ஆண்டில் இப்புதிய ரோஜா பூங்காவை உருவாக்கினார். இப்பூங்காவுக்கு "நூற்றாண்டு ரோஜா பூங்கா' என்றே பெயரிடப்பட்டது. அதன் பின்னர் பெயர் மாறி தற்போது "அரசினர் ரோஜா பூங்கா' என அழைக்கப்படுகிறது.
தொடக்கத்தில் 1919 ரோஜா ரகங்களில் 17,256 ரோஜா செடிகளுடன் உருவாக்கப்பட்ட இப்பூங்காவில் தற்போது புளோரிபண்டா, பாலியன்தா, மினியேச்சர், ஹைபிரிட் டீ, கிரீப்பர் என சுமார் 3,800 ரகங்களில் 25,000க்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் உள்ளன. இப்பூங்காவில் 5,000 ரோஜா ரகங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இப்பூங்காவின் சிறந்த பராமரிப்பிற்காகவும், அதிக அளவிலான ரோஜா ரகங்களுக்காகவும் சர்வதேச ரோஜா சங்கத்தின் சார்பில் கடந்த 2006ஆம் ஆண்டில் ஜப்பானில் ஒசாகா மாகாணத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவில் உதகை ரோஜா பூங்காவுக்கு "கார்டன் ஆப் எக்சலென்ஸ்' என்ற விருது வழங்கி கெüரவிக்கப்பட்டது.
உதகை அரசினர் ரோஜா பூங்காவைப் பொறுத்தமட்டில் 5 அடுக்குகள் கொண்டதைப் போல 5 தளங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதனால் பூங்காவின் முகப்பிலிருந்து பார்த்தாலே மற்ற 4 தளங்களும் தெரியும். முதல் தளத்தில் பாரம்பரிய ரோஜா ரகங்களும், "மினியேச்சர்' எனப்படும் மிகச்சிறிய ரோஜா ரகங்களும் உள்ளன. இவை அழிந்துவிடாமல் பாதுகாக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இரண்டாவது தளத்தில் பரந்த புல்வெளியும், ரோஜா தோட்டமும், மூன்றாவது தளத்தில் புளோரிபண்டா என்ற ரகத்தினாலான ரோஜாக்களும், 4 மற்றும் 5வது தளங்களில் பல்வேறு வண்ணங்களிலான ரோஜா ரகங்களும் உள்ளன.
ஜவஹர், இந்திரா பிரியதர்ஷினி, ஜெயலலிதா, நெப்போலியன், ரஜினி, மார்கரெட் தாட்சர், ஜான் கென்னடி, எலிசபெத், ஆபிரகாம் லிங்கன், டாடா, சுனில் கவாஸ்கர், நேதாஜி, ஐஸ்வர்யா- இந்த பெயர்களெல்லாம் என்னவென்று கேட்கிறீர்களா? இவை இங்குள்ள சில ரோஜா ரகங்களின் பெயர்களாகும்.
12வது ஆண்டாக இவ்வாண்டில் நடைபெறும் ரோஜா கண்காட்சியில் நீலகிரி மாவட்டத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான ரோஜா மலர்களைக் கொண்டு பிரமாண்டமான புறாவின் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் ரோஜா காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ரோஜா மலர்கள் மட்டுமின்றி ரோஜா மலர்களிலிருந்து உருவாக்கப்படும் பொருள்களும் இடம் பெற்றுள்ளன.
ரோஜா என்றாலே அழகு. அதன் நிறங்களும், வண்ணமும் மனதைவிட்டு அகலாதவை. அன்பு, பாசம், உறவு, நட்பு, பிரிவு, சோகம், துக்கம் எல்லாவற்றுக்குமே ரோஜா ஓர் அடையாளமாக உள்ளது. அதனால்தான் நேருவின் கோட்டில் தொடங்கி, காதலர் தின கொண்டாட்டங்கள் வரை பிரதான இடத்திலிருப்பதும் ரோஜாதான். அத்தகைய ரோஜாவுக்காக நடக்கும் திருவிழாவில் நாமும் பங்கேற்று மனதையும், உடலையும் கொஞ்சம் புதுப்பித்துக் கொள்ளலாமே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.