கற்றுக் கொடுக்கும் பொம்மலாட்டக் கலை!
பொம்மலாட்டம் என்றால் அது ஏதோ ஆதி காலத்துக் கலை; இந்தக் காலத்துக்கு எல்லாம் அது ஒத்துவராது என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
பொம்மலாட்டம் என்றால் அது ஏதோ ஆதி காலத்துக் கலை; இந்தக் காலத்துக்கு எல்லாம் அது ஒத்துவராது என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பொம்மலாட்டத்தை இன்றைய நவீன காலத்துக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து, அதைப் பலருக்கும் சொல்லிக் கொடுத்து வருகிறார் ஆர்.பானுமதி.
சென்னை ஆழ்வார்பேட்டையில் "பாவைக்கூத்து மைய'த்தை நடத்தி வரும் பானுமதி, பிறந்து வளர்ந்தது எல்லாம் தில்லியில். 1981 இல் சென்னைக்கு வந்த அவர், "தென்மாநிலங்களில் தோல் பாவைக் கூத்தின் இன்றைய நிலை'யைப் பற்றி ஒப்பாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.
""நான் படித்தது இயற்கையைப் பற்றி. "வேர்ல்டு வைல்டு லைஃப் ஃபண்ட் ஃபார் இந்தியா' (ரரஊ ஊஞத ஐசஈஐஅ) என்ற அமைப்பில் இயற்கைக் கல்வியைக் கற்றுக் கொடுப்பவராக இருந்தேன். அப்போதுதான் எனக்கு பொம்மலாட்டத்தில் ஆர்வம் வந்தது. தோல் பாவை கூத்து தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் எவ்விதம் நடத்தப்படுகிறது? என்பதை ஒப்பிட்டு ஆய்வு செய்து முனைவர்
பட்டம் பெற்றேன்.
பொம்மலாட்டத்தைப் பற்றி திருவாசகத்தில் குறிப்பிடப்படுகிறது. இவ்வளவு பழமையான கலை, இன்றைய தொலைக்காட்சி, திரைப்பட, கம்ப்யூட்டர் யுகத்தில் நலிந்து கொண்டு வருகிறது. பொம்மலாட்டத்தை நடத்திக் கொடுக்கும்படி பொம்மலாட்டக் கலைஞர்களை யாரும் கேட்பதில்லை. எனவே அவர்கள் வேறு தொழில்களுக்குப் போய்விட்டார்கள்.
ஆனால் கேரளத்தில் பகவதி அம்மன் கோயில்களில் தோல்பாவைக் கூத்து இன்றும் நிகழ்த்தப்படுகிறது. அங்குள்ள 13 தோல்பாவைக் கூத்துக் கலைஞர்களின் குடும்பங்கள், கேரளத்தில் உள்ள 150 பகவதி அம்மன் கோவில்களில் தோல் பாவைக் கூத்தை நடத்துகிறார்கள். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அவர்கள், கம்பராமாயணத்தை தோல் பாவைக் கூத்தின் மூலமாக விளக்கு
கிறார்கள்.
பாரம்பரியமான தோல் பாவைக் கூத்தில் பொம்மைகள் விலங்குகளின் தோலால் செய்யப்படுகின்றன. பொம்மலாட்டத்துக்கு மரத்தினால் பொம்மைகளைச் செய்தார்கள். நான் சுற்றுச்சூழலுக்குக் கேடற்ற வகையில் பொம்மைகளைச் செய்ய விரும்பினேன். பயன்படுத்தப்பட்ட பழைய காகிதத்தில், துணியில், காட்போர்டில், ஃபோமில் பொம்மைகள் செய்தேன்.
பொம்மலாட்டக் கலை ஒரு பொழுதுபோக்குக் கலையாகவே நீண்டகாலமாக இருந்திருக்கிறது. ஒரு கல்வியாளர் என்கிற முறையில் பொம்மலாட்டக் கலை மூலம் குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.
குழந்தைகளைப் பொம்மை செய்யச் சொல்வேன். உதாரணமாக, ஒரு வண்ணத்துப் பூச்சி பொம்மையைச் செய்யச் சொல்வேன். வண்ணத்துப் பூச்சியின் இறகுகள், அதிலுள்ள வண்ணங்கள், கால்கள் என வண்ணத்துப் பூச்சியைப் பற்றிய அறிவியல் விவரங்களை எல்லாம் அந்தப் பொம்மையை வைத்துக் கற்றுக் கொடுப்பேன்.
அம்மா, பெண் குழந்தைகளிடம் நேரடியாகப் பேச முடியாத பல விஷயங்கள் இருக்கும். உதாரணமாக ஓர் ஆண், பெண் குழந்தையிடம் தவறாக நடக்க முயலலாம். ஆனால் அதைப் பற்றி அம்மா பெண் குழந்தையிடம் நேரடியாகப் பேச முடியாது. பொம்மலாட்டம் மூலம் அம்மா பொம்மை, பெண் குழந்தை பொம்மையிடம் பேசுவதாகக் காட்டுவேன். அதில் ஓர் ஆண் கெட்ட எண்ணத்துடன் பெண் குழந்தைகளைத் தொடுவதையும், நல்ல உள்ளத்துடன் தொடுவதையும் முறையே ஆஹக் ற்ர்ன்ஸ்ரீட், எர்ர்க் ற்ர்ன்ஸ்ரீட் என விளக்குவேன்.
குழந்தைகளின் கவனம் திசை திரும்பாமல் இருக்கவும் பொம்மலாட்டக் கலையைப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்குக் கதை சொல்லிக் கொண்டிருக்கும்போது, அவர்கள் கவனம் திசைமாறாமல் இருக்க இரண்டு பொம்மைகள் பேசுவதாகவும், அப்படிப் பேசும்போது கதை சொல்வதாகவும் காட்டலாம். அப்படிச் செய்தால் குழந்தைகளின் முழுக் கவனமும் பொம்மையில் இருக்கும்.
கடல்சார்ந்த உயிரினங்களைப் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை ராயபுரத்தில் இருந்து கோவளம் வரையில் உள்ள 30 பள்ளிகளுக்குச் சென்று பொம்மலாட்டக் கலை வடிவத்தைப் பயன்படுத்திக் கற்றுக் கொடுத்தேன். மீன், நத்தை, நண்டு, கடல் ஆமை, திமிங்கலம், கடலோர மரங்கள் போன்றவற்றின் பொம்மைகளை மாணவர்களைச் செய்யச் சொல்வேன். அதற்குப் பிறகு அவற்றைப் பற்றி
விளக்குவேன்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட பாலவாக்கம், சின்ன நீலாங்கரை, கொட்டிவாக்கம் போன்ற பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள பெண்களுக்குப் பொம்மைகள் செய்யக் கற்றுக் கொடுத்ததுடன், அவற்றை விற்பனை செய்யவும் அவர்களுக்கு உதவினேன். இதனால் அவர்களுக்கு ஓரளவுக்கு வருமானமும் கிடைத்தது.
பொம்மலாட்டக் கலையைப் பயன்படுத்தி மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதில் உதவ விரும்புகிறேன்'' என்றார் ஆர்.பானுமதி.