முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

நதி ஓடுகிறது!

பாடினி என்ற அமைப்பைத் தோற்றுவித்து அதன் மூலம் பல மேடைப் படைப்புகளை வேறுபட்ட வகையில் வழங்கி வரும் தியேட்டர் இயக்குநர் பிரசன்னா ராமசாமிக்கு இந்த ஆண்டுக்கான சங்கீத நாடக அகாதெமி விருது கிடைத் திருக்கிறது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:03 AM
பகிர்:

பாடினி என்ற அமைப்பைத் தோற்றுவித்து அதன் மூலம் பல மேடைப் படைப்புகளை வேறுபட்ட வகையில் வழங்கி வரும் தியேட்டர் இயக்குநர் பிரசன்னா ராமசாமிக்கு இந்த ஆண்டுக்கான சங்கீத நாடக அகாதெமி விருது கிடைத்
 திருக்கிறது.
 கர்நாடக இசைப் பாடகர் சஞ்சய் சுப்பிரமணியன் பரத நாட்டியக் கலைஞர் மாளவிகா சருக்கை, மலையாளத் திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் பணிகளை டாகுமென்டரி படங்களாகக் கலையழகுடன் உருவாக்கியவர் பிரசன்னா ராமசாமி. பல அகில உலக மாநாடுகளில் இவர் வாசித்த கட்டுரைகள் எல்லாம் திரைப்படம், தியேட்டர், இலக்கியம், எழுத்தாளர் சந்திப்பு என்று பல தளங்களில் இவர் நடந்து வந்த பாதையை வெளிப்
 படுத்தியிருக்கின்றன.
 பிரசன்னா ராமசாமியை, அவர் விருது வழங்கப்பட்டிருப்பதை ஒட்டி, இம்மாதம் 17ஆம் தேதி தில்லியில் ஒரு படைப்பையும் மேடை ஏற்ற வைத்தது மத்திய
 சங்கீத நாடக அகாதெமி.
 இலங்கைத் தமிழர் பிரச்னையில் இயற்கையாகவே ஈடுபாடு கொண்டு தன் கலைப் படைப்புகளில் தம் மனத்தை வெளிப்படுத்தி வருபவர் பிரசன்னா. இப்படி ஒரு வாய்ப்பு, அதுவும் தலைநகரிலேயே போய் தன் குரலை ஓங்கி ஒலிக்கக் கிடைத்திருக்கும் வாய்ப்பை எளிதாக விட்டுவிடுவாரா என்ன? குழுவினருடன் தில்லி புறப்பட்ட வேளையில் "நதி ஓடுகிறது'
 ஒத்திகையின்போது இந்தச் சந்திப்பு:
 
 ""என்னுடைய பெரும்பாலான மேடைப் படைப்புகளில், புலம் பெயர்ந்த மக்கள் சந்திக்கும் சிக்கல்களையும், பிரச்னைகளையும் வெளிச்சமிட்டுக் காட்டி வருகிறேன்.
 கடினமான சமுதாயப் போராட்டம் அல்லது போர் அவற்றின் அடிநாதமாக இருக்கும். ருவாண்டா, க்ரோஷியா, ஆப்ரிக்கா, ஸ்ரீலங்கா என எந்தக் களத்தை எடுத்துக்கொண்டாலும் இதுதான் பின்னணி.
 நான் 2002 இல் "சூர்யமுகம்' மேடையில் வழங்கினேன். அதில் முழுக்க முழுக்க 24 இலங்கைக் கவிஞர்களின் கவிதைகளைத்தான் தொகுத்து மேடையில் தியேட்டர் வடிவில் வழங்கினேன்.
 இலங்கைத் தமிழரின் பிரச்னையை அரசியல்வாதிகள் அவரவர்களுக்குச் சாதகமான கோணத்தில் பயன்படுத்திக் கொண்டாலும், நான் உலகக் கவிஞர்கள் பலரிடமிருந்தும் என் படைப்புக்கு வலு சேர்க்க சேரன், மனுஷ்யபுத்ரன், கனிமொழி உட்பட, ஜேம்ஸ் ஜாய்ஸ், அன்னா அக்மடோவா, பிரெக்ட், விஸ்லாவா ஜிம்போர்ஸ்கா, பைஸ் அகமது பைஸ் என்று பல்வேறு கவிஞர்களின் கவிதைகளிலிருந்து எடுத்துக் கொண்டிருக்கிறேன். மணிமேகலைக் காப்பியத்திலிருந்துகூட எடுத்துக் கையாண்டிருக்கிறேன்'' என்கிறார் பிரசன்னா.
 அழுத்தத்துக்காகவும், ஆக்ரோஷத்துக்காகவும் இவர் கையாளும் பாணி நம்மைக் கொஞ்சம் அதிர வைத்தாலும், அவர் மனசின் துடிப்பு அந்த வேகத்திலும் வீச்சிலும்தான் வெளிப்படுகிறது. நடிக்கிறவர்களிடமிருந்து வெறும் வார்த்தைகளை மட்டுமே எதிர்பார்க்காமல் அதில் முழு ஜீவனும் தொனிக்க வேண்டும் என்ற துடிப்பும், பரிதவிப்பும் இயக்குநராக அவர் காண்பிக்கிற அக்கறையில் வெளிப்படுகிறது. கூத்துப் பட்டறையிலிருந்து வந்திருக்கிற நடிகர்களை அவர்கள் உடல் மொழி நூறு சதவிகிதம் தன் படைப்புக்குக் கிடைக்க வேண்டும் என்று பாடாய்ப்படுத்துகிறார்.
 வசனங்களுக்கு இடையே பின்னணியில் நெல்லரி மணிகண்டனின் மேளம் சிலசமயம் தாளம் போடுகிறது. சிலசமயம் இடப்பக்கத் தோலிலிருந்து உரசி உரசி உறுமுகிறது. பெனிதா பெர்சியால், எம். நடேஷ், புகைப்படக் கலைஞர் பிரசன்ன குமார் ஆகியோர் இணையான ஒலி ஒளி காட்சியமைப்புகளில் உதவியிருக்கிறார்கள். ரேவதி குமாரின் கர்நாடக இசையும் இதில் ஒலிக்கும். நடிகர்களின் இயற்கையான ராப் இசையும் அங்கங்கே கேட்கும். நடிகை ரோகிணி, பிரசன்னாவின் மனதைப் புரிந்துகொண்டவர். அவருடைய கருத்துக்கு மேடையில் வடிவம் கொடுப்பதில் வெற்றி கண்டவர்.
 தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் அங்கங்கே வசனங்கள் யோசிக்க வைக்கின்றன. ரோகிணி, ஹரிஷ், ரமேஷ், நிரன் விக்டர், ஸ்வேதா பிராசன்டே, மீரா கிருஷ்ணமூர்த்தி, அந்தோனி அருள் என்று அத்தனை பேரும் பிரசன்னாவின் படைப்புக்கு ரத்தமும் சதையுமாக இயங்கியிருக்கிறார்கள்.
 மணிமேகலைக் காப்பியத்தில் சக்ரவாகக்கோட்டத்திலிருந்து, எவ்வாறு பல வகை மாமிசம் புசிக்கும் மிருகங்களும் மனிதனின், பிசாசுகளின் சதையை ருசித்துத் தின்று ஆட்டம் போட்டன என்ற வரிகளைச் சொல்லும்போது, இது முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு இணையானது என்று பார்வையாளருக்குப் புரியும்.
 ஓர் இனப்படுகொலையை இத்தனை தீவிரத்துடனும், உருக்கத்துடனும் எடுத்துச் சொல்லும் மேடைப் படைப்பு, ஆயிரம் ஆக்ரோஷச் சொற்பொழிவுகளின் தாக்கத்தையும் தாண்டியது.
 அதிலும் குறிப்பாக தில்லியில் போய், அரசின் சங்கீத நாடக அகடமி விருது பெற்ற தருணத்தில் இப்படி ஒரு மேடைப் படைப்பை பிரசன்னா ராமசாமி வழங்க முடிந்தது, அவருக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு.

 

முழு கட்டுரையைப் படிக்க →