ஞாயிறு கொண்டாட்டம்

மாரி பண்டிகை!

ஊர் கூடி தேர் இழுக்க வேண்டுமென்பர். ஆனால், ஊரே கூடி கடவுளுக்கு கட்டாயமாக பலி செலுத்த வேண்டுமா? வேண்டும் என்கிறார்கள் படகர் இன மக்கள்.

ஏ. பேட்ரிக்

ஊர் கூடி தேர் இழுக்க வேண்டுமென்பர். ஆனால், ஊரே கூடி கடவுளுக்கு கட்டாயமாக பலி செலுத்த வேண்டுமா? வேண்டும் என்கிறார்கள் படகர் இன மக்கள்.
 அதையே பாரம்பரியமாக கடைபிடித்து ஆண்டுக்கொருமுறை மட்டும் குறிப்பிட்ட நாளில் கட்டாயமாக அசைவம் சமைத்து உண்கின்றனர்.
 மலை மாவட்டமான நீலகிரியில் வசிக்கும் படகர் இன மக்கள் வசிக்குமிடத்தின் அடிப்படையில் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இவை சீமெ எனப்படும். நீலகிரியைப் பொறுத்தமட்டில் தொதநாடு, பொரங்காடு, மேற்குநாடு மற்றும் குந்தை ஆகிய 4 சீமெகள் உள்ளன. இவற்றில் தொதநாடு பகுதி மக்கள் மாரி பண்டிகையையும், குந்தை பகுதி மக்கள் தீபாவளி மற்றும் ஹெத்தை பண்டிகையையும், மேற்குநாடு பகுதி மக்கள் மாரி மற்றும் தீபாவளியையும், பொரங்காடு பகுதி மக்கள் ஹெத்தை பண்டிகையையும்
 கொண்டாடுகின்றனர்.
 ஹெத்தை பண்டிகை என்பது கோத்தகிரி அருகேயுள்ள பேரகணியில் தொடங்கி கேத்தியிலுள்ள அச்சனக்கல் கிராமத்தில் முடிவடையும். அதையடுத்தே மாரி பண்டிகை ஒவ்வொரு பகுதியிலும் கொண்டாடப்படும். மாரி பண்டிகை வழக்கமாக பிப்ரவரி மாதத்தில்தான் கொண்டாடப்படுகிறது.
 அப்போது தங்களது குல தெய்வமான ஹிரியோடய்யா, மாதேஸ்வரய்யா மற்றும் கரியபெட்டய்யா என்ற 3 சகோதரர்களை வழிபடுகின்றனர். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு சகோதரரை வழிபடுவதால், இவை சகோதர கிராமங்கள் என அழைக்கப்படுகின்றன. சகோதர கிராமங்களுக்குள் பெண் எடுப்பதுமில்லை, கொடுப்பதுமில்லை.
 ஒவ்வொரு சீமெயின் பண்டிகை கொண்டாட்டங்கள் ஒவ்வொரு வகையில் வேறுபட்டாலும் மாரி பண்டிகை காலத்தில் தங்களது குல தெய்வத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்திய பின்னர், கண்டிப்பாக அந்த பகுதியில் அசைவ உணவு சமைக்கப்பட வேண்டுமென்பது விதியாகும்.
 ஏழையாக இருந்தாலும், வசதி படைத்தவர்களாக இருந்தாலும் மாரி பண்டிகை தினத்தன்று அனைவரது வீட்டிலும் கண்டிப்பாக அசைவம் சமைக்கப்பட வேண்டுமாம். ஆண்டுக்கொரு முறை நடக்கும் இந்நிகழ்வு கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அவர்களது நம்பிக்கையின்படி இந்நிகழ்வு ஊர் மக்கள் அனைவரும் இணைந்து செய்கின்றனர்.
 மாரி பண்டிகை கொண்டாடப்படும் பகுதிகளில் உள்ள கோயில் 6 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும். முதற்கட்டமாக மாரி பண்டிகை கொண்டாடப்படும் போது அசைவம் சாப்பிடக்கூடாது. ஆனால், இரண்டாவது முறையாக அக்கோயில் திறக்கப்படும்போது கண்டிப்பாக அசைவம் சமைக்கப்பட வேண்டும். இந்த பண்டிகை எப்போது கொண்டாடப்பட வேண்டுமென்பதை சீமெ தலைவர்கள்தான் முடிவு செய்வர்.
 ஆண்டில் ஜூலை மாதத்தில் கோயில் திறக்கப்படும்போது படகர் இன மக்களின் அறுவடைக்காலமாக இருக்கும். பெரும்பாலும் படகர் இன மக்கள் உருளைக்கிழங்கு விவசாயத்தில்தான் ஈடுபடுவர். அதில் ஜூலை மாதத்தில்தான் உருளைக்கிழங்கும் நிலத்திலிருந்து எடுக்கப்படும். அப்போது தங்களது விளைச்சலின் காணிக்கையாக கடவுளுக்கு உருளைக்கிழங்கையே படைப்பார்கள். கோயிலின் முன் தீ மூட்டி அதில் உருளைக்கிழங்கைச் சுட்டு எடுத்து கடவுளுக்கு படைத்து தாங்களும் உண்பர்.
 இத்திருவிழாக்களின்போது மூங்கில் குச்சிகளைக் கொண்டு உரசி தீ மூட்டி தீபமேற்றியே கடவுளை வழிபடுவர். தீ மூட்ட தீப்பெட்டியை பயன்படுத்தக் கூடாது என்பது கட்டளையாகும்.
 கோயிலின் நுழைவுவாயில் தரையிலிருந்து 3 அடி உயரத்திற்கு மட்டுமே இருக்கும். விரதமிருந்து கோயிலை திறக்கும் குறிப்பிட்ட பூசாரியைத் தவிர வேறு எவரும் கோயிலுக்குள் செல்லக் கூடாது என்பது இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வரும் அம்சமாகும். கோயிலில் தீபாராதனை முடிந்ததும் பிரசாதம் வழங்கப்படும். இந்த பிரசாதம் முதன்முதலில் கன்றை ஈன்ற பசுவின் பால் மற்றும் அதிலிருந்து எடுக்கப்பட்ட நெய் ஆகியவற்றில் அரிசியை வேக வைத்து பால் சாதம்போல இருக்கும்.
 இத்திருவிழாவின் முக்கிய அம்சமே ஊர் கூடி நடனமாடுவதாகும். காலையில் கடவுள் வழிபாடு முடிந்ததிலிருந்து மாலையில் சூரியன் மறையும் வரை ஆண்களும், பெண்களும் இணைந்து ஊர் பொது மைதானத்தில் தங்களது பாரம்பரிய இசைக்கேற்ற வகையில் பல மணி நேரத்திற்கு தொடர்ந்து பாரம்பரிய நடனமாடுவர். நடனமாடி முடித்தவர்களும், நடனமாட முடியாதவர்களும் ஊர் பொது மேடையில் அமர்ந்து
 பார்ப்பார்கள்.
 இதற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. இவ்வாறு நடனமாடும்போது அங்கிருக்கும் திருமணமாகாத இளைஞனையோ அல்லது இளம் பெண்ணையோ பிடித்து விட்டால் அவர்களது குடும்பத்தைக் குறித்து கேட்டறிந்து திருமணத்திற்கு வழிவகுப்பார்களாம். இது சம்பந்தப்பட்ட இளைஞனுக்கும், இளம் பெண்ணுக்கும் கூட தெரியாமலேயே நடக்கும் நிகழ்வு என்பதால் அனைவரும் கட்டாயமாக நடனமாடி வருவதாக பெரியவர்கள் கூறுகின்றனர்.
 இதுபோன்ற பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் நிறைந்துள்ளதாலேயே நீலகிரியிலுள்ள படகர் கிராமங்களில் மாரி பண்டிகை என்பது ஆண்டுக்காண்டு பிரபலமடைந்து வருகிறது எனலாம்.

 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT