பரம்பரைச் சேகரிப்பு!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசுக்குத் தேவையான மூலப்பொருள்களை விற்பனை செய்து வரும் ஐ.கே.ராஜராஜன் நாணயங்கள் சேகரிப்பிலும்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசுக்குத் தேவையான மூலப்பொருள்களை விற்பனை செய்து வரும் ஐ.கே.ராஜராஜன் நாணயங்கள் சேகரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவரிடம் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் முதன்முறையாக கப் வடிவில், காந்தாரஜனபராடா என்ற மன்னரால் வெளியிடப்பட்ட வெள்ளிக்காசு முதல், மொகலாயர்களின் நாணயம், பாண்டியன் நெடுஞ்செழியன் உள்ளிட்ட பல மன்னர்கள் வெளியிட்டுள்ள
நாணயங்கள் சுமார் 1000 வரை சேகரித்து வைத்துள்ளார்.
இது குறித்து ராஜராஜனிடம் கேட்டோம்:
எனது தாத்தா அய்ய நாடார், எனது தந்தை காளிராஜன் ஆகியோர் நாணயம் சேகரிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தனர். இதைத் தொடர்ந்து நானும் எனது பிள்ளைகளும் நாணயம் சேகரிப்பில் ஆர்வம் காட்டி வருகிறோம். எனினும் எனது தாத்தா மற்றும் தந்தை சேகரித்து வத்துள்ள நாணயங்கள்தான் மிகப் பழமையானவை.
நான்கு தலைமுறையாக நாணயம் சேகரித்து வருவதால் பழமையான நாணயங்கள் சுமார் 1000 வரை என்னிடம் உள்ளன. ஒருசில நாணயத்தின் தற்போதைய மதிப்பு ரூபாய் 5,000 ஆகும். இந்தியாவை மொகலாய மன்னர்கள் 1526-ஆவது ஆண்டுமுதல் 1858 ஆண்டுவரை ஆண்டு வந்ததாகவும், இந்த 333 ஆண்டுகளில் 21 மன்னர்கள் ஆண்டு வந்ததாகவும் சரித்திரம் கூறுகிறது. பாபர், ஹுமாயின், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான், முரட்பக்ஷி, அவுரங்கசீப், அசாம்ஷா, காம்பஷ், ஷாஆலம்பஹதூர், ஆஷிம் உசேன்ஷா உள்ளிட்ட பல மன்னர்கள் வெளியிட்டுள்ள நாணயங்கள் என்னிடம் உள்ளன.
உங்களிடம் உள்ள நாணயம் இந்த மன்னர் காலத்து நாணயம் என எப்படிக் கூறுகிறீர்கள்?
குஜராத் மாநிலத்தில் மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வகத்துறையினரின் நாணய ஆய்வுப் பிரிவு உள்ளது. நம்மிடம் உள்ள நாணயத்தை அஞ்சல் மூலம் அனுப்பி ரூபாய் 1000 அனுப்பினால், அவர்கள் அதை ஆய்வு செய்து, எந்த ஆண்டின் நாணயம், எந்த மன்னர் வெளியிட்டது என அச்சிட்டு, ஒரு சிறிய பேக்கிங்கில் வெளியில் எடுக்க முடியாதபடி பேக் செய்து அனுப்பி விடுவார்கள். இப்படித்தான் என்னிடம் உள்ள நாணயத்தின் மதிப்பை நான் உணர முடிந்தது.
உங்கள் சேகரிப்பில் உள்ள சிறப்புக்கள் எவை?
கிருஷ்ணதேவராயர் வெளியிட்ட தங்கக் காசு, சோழ மன்னர்களின் நாணயம், முகமதுபின் துக்ளக்கின் நாணயம், திப்புசுல்தான், ஹைதர்அலி, திருமலைநாயக்கர், 1311-இல் மதுரையை ஆண்ட சுந்தரபாண்டிய மன்னரின் நாணயங்களும் தற்போது நடைமுறையில் உள்ள நாணயம் வரை எனது சேகரிப்பில் உள்ளன.
வெளிநாட்டு மான்னர்களின் நாணயம் உள்ளதா?
ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், ஆறாம் ஜார்ஜ் மன்னர், எலிசபெத் ராணி, விக்டோரியா மகாராணி ஆகியோர் காலத்தில் இருந்த நாணயங்கள் என்னிடம் உள்ளன.
எப்படி இவற்றைச் சேகரித்தீர்கள்?
யாராவது பழைய நாணயங்கள் விற்பனை செய்ய முன் வந்தால், என் போன்ற சேகரிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்குத் தகவல் தெரிந்துவிடும். இதில் உடனடியாகச் செயல்பட்டு உடனே நாணயங்களை வாங்க வேண்டும். எனக்கு விவரம் தெரிந்தது முதல் எனது தந்தை இதுபோல பல நாணயங்களை விலைக்கு வாங்கியுள்ளார். நானும் பல நாணயங்கள் விலைக்கு வாங்கியுள்ளேன்.
வேறு என்ன சேகரிக்கிறீர்கள்?
பல பழைமையான கலைப்பொருள்கள் என்னிடம் உள்ளன. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள பித்தளை பானை, அரசிகள் பயன்படுத்தும் சினுக்குவாலி, கும்பா, தட்டு என சுமார் 50 கலைப்பொருள்களைச் சேகரித்து வைத்துள்ளேன்.