முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஓலைக்கொட்டானில் கருப்பட்டி மிட்டாய்!

ஒரு காலத்தில் காகிதக் கவர்கள் தயாரித்து இனிப்புகளையும் கார வகைகளையும் ஸ்வீட் ஸ்டாலில் மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தனர்.

Updated On : 2 நவம்பர், 2014 at 1:26 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:39 PM

ஒரு காலத்தில் காகிதக் கவர்கள் தயாரித்து இனிப்புகளையும் கார வகைகளையும் ஸ்வீட் ஸ்டாலில் மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தனர். ஆனால்  15ஆண்டுகளாக பிளாஸ்டி பைகள் இல்லாமல் ஸ்வீட் ஸ்டால்களே இல்லை.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள கற்குவேல் அய்யனார் ஸ்வீட் ஸ்டாலில், தென்மாவட்டங்களின் பிரபலமான இனிப்பு வகைகளான கருப்பட்டிமிட்டாய், சீனி மிட்டாய் ஆகியவற்றை ஓலைக்கொட்டானில் மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

பனை ஓலையில் தயாரிக்கப்படும், ஓலைக்கொட்டான்களைப் போல கருப்பட்டி பேக்கிங் செய்யவும் இந்த வகைக் கொட்டான்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Advertisement

கிராமங்களில் இரவு நேரங்களில் நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு காவலுக்குச் செல்பவர்கள், தண்ணீரில் கருப்பட்டியைப்போட்டு, அதில் டீத்துளை கொட்டி கொதிக்க வைத்து, ஓலையில் மட்டை தயாரித்து அதில் டீயை உற்றி குடிப்பார்கள். ஆகா... என்னசுவை! என்ன சுவை! கருப்பட்டி, டீத்தூள் மற்றும் பனை ஓலையின் வாசனையுடன் டீயை அருந்தும் போது தேவாமிர்தம் போல இருக்கும். நகரவாசிகள் அதனை ருசிக்க முடியாது. எனவே கருப்பட்டி மிட்டாய், சீனி மிட்டாயை ஓலைக் கொட்டானில் கொடுத்து, அதன் ருசியை ஓரளவேனும் சுவைக்கச் சொல்கிறார்கள் எனலாம்.

இது குறித்து சிவகாசி கற்குவேல் அய்யனார் ஸ்வீட் ஸ்டால் பங்குதாரர் எஸ்.கற்குவேல் ராஜூவிடம் கேட்டபோது:

""நாங்கள் 45 ஆண்டுகளாக ஓலைக்கொட்டானைப் பயன்படுத்தி வருகிறோம்.

இது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் என்பதோடு மிட்டாய் கெட்டுப்போகாமல் இருக்கவும் பயன்படுகிறது.

பிளாஸ்டிக் பைகளில் இந்த வகை மிட்டாய்களைப் போட்டால், இரண்டு அல்லது மூன்று நாளில் கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் ஓலை கொட்டானில் உள்ள மிட்டாய்கள் பத்து நாள்கள் வரை கெட்டுப் போகாது.

எனவே நாங்கள் இதனை பயன்படுத்துவதை நிறுத்தவில்லை. இங்குள்ளவர்கள் வெளிமாநிலங்களில் உள்ள உறவினர் வீடுகளுக்கு இனிப்புகள் வாங்கிச் செல்லும்போது, ஓலைக்கொட்டானில் தாருங்கள் எனக்கேட்டு வாங்கிச் செல்கிறார்கள்.

சிலர் லட்டு, பூந்தி, ஜிலேபி ஆகிய இனிப்பு வகைகளையும் ஓலைகொட்டானில் தரும்படி கேட்டு வாங்கிச் செல்கிறார்கள்.

ஓலைக்கொட்டானில் உள்ள மிட்டாய் தனி சுவையாகவும் இருக்கும்.

ஒரு கிலோ, அரை கிலோ, கால் கிலோ அளவு ஓலைக்கொட்டானை இருக்கன்குடி அருகே உள்ள கிராமத்திலிருந்து வாங்குகிறோம்.

45 ஆண்டுகளாக ஒரே நபர்தான் இதனை குடிசைத் தொழிலாக செய்து எங்களுக்கு வேன் மூலம் அனுப்பி வைக்கிறார்''என்றார் கற்குவேல்ராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.