முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

குத்துச் சண்டையில் பதக்கம் குவிக்கும் பள்ளி மாணவி!

சில விளையாட்டுகள் ஆண்கள் மட்டுமே விளையாட முடியும் என்ற காலம் மலையேறிவிட்டது. விளையாட்டிலும் பெண்கள் வெற்றி பெற முடியும் என்ற நிலை இப்போது வந்துவிட்டது.

Updated On : 9 ஆகஸ்ட், 2015 at 2:42 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:54 AM

சில விளையாட்டுகள் ஆண்கள் மட்டுமே விளையாட முடியும் என்ற காலம் மலையேறிவிட்டது. விளையாட்டிலும் பெண்கள் வெற்றி பெற முடியும் என்ற நிலை இப்போது வந்துவிட்டது.

விருதுநகரில் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி கே.எஸ்.ஐஸ்வர்யா, குத்துச் சண்டை போட்டியில் தொடந்து நான்கு ஆண்டுகளாக மாநில அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணியில் பங்கேற்று மூன்றாமிடம் பெற்றுள்ளார்.

இந்த வெற்றி குறித்து அவரிடம் கேட்டபோது:

Advertisement

""எனது தந்தை கே.கருணாகரன் தமிழகக் குத்துச் சண்டை பயிற்சியாளராக உள்ளார். நான் சிறுபிள்ளையாக இருந்தபோது, அவர் பயிற்சி அளிக்கும்போது வேடிக்கை பார்ப்பேன்.

நான் 5ஆம் வகுப்பு படிக்கும் போது எனது தந்தையிடம் முறையாக பயிற்சி பெறத் தொடங்கினேன்.

2011-2012 கல்வியாண்டில் நான் 6ஆம் வகுப்பு படிக்கும் போது, பள்ளிக் கல்வித்துறை விருதுநகரில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டியை நடத்தியது. அதில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாவட்ட அளவிலான 48-50 கிலோ எடை பிரிவில் நான் கலந்து கொண்டு முதலிடம் பெற்றேன். அதற்காக சக மாணவிகள், ஆசிரியைகள் பாராட்டினார்கள். இதனால் மேலும் குத்துச் சண்டையில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது.

பின்னர் அதே ஆண்டு பள்ளி கல்வித்துறையினர் ராமநாதபுரத்தில் நடத்திய மண்டல அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன். மண்டல அளவிலான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சேலத்தில் தேசிய போட்டிக்கு நடைபெற்ற தேர்வுப் போட்டியில் இடம் பிடித்தேன். தேர்வில் வெற்றி பெற்றதையடுத்து 8.1.2012 முதல் 13.1.2012 வரை மஹாராஷ்டிரா மாநிலம் அக்கோலாவில் நடைபெற்ற தேசிய போட்டியில் தமிழக அணியில் உள்ள 13 பேரில் நானும் ஒருத்தியாக இருந்தேன். அந்தப் போட்டியை தேசிய விளையாட்டுக்கழகம் நடத்தியது. அது 17வயதுக்குட்பட்டோர் பிரிவில் 50-52 கிலோ எடைப் பிரிவாகும். இதில் வெற்றி பெறாவிட்டாலும், பல அனுபவங்கள் கிடைத்தன.

எதிராளியை அதிரடியாகத் தாக்குவது, பதுங்கித் தாக்குவது, எதிராளி தாக்க வந்தால் எப்படித் தப்பிப்பது போன்ற நுணுக்கங்களைத் தெரிந்து கொண்டேன்.

2011 முதல் 2015 வரை உள்ள  கல்வியாண்டுகளில் மாநில அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம்

பெற்றேன்.

2012 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டுக்கழகம் நடத்திய 4 வது கிராமப்புற விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட தமிழக அணியில் இடம்

பெற்றிருந்தேன்.

பின்னர் 27.4.2013 முதல் 1.5.2013 ஆம் தேதிவரை தேசிய விளையாட்டுக்கழகம் நடத்திய 58வது தேசிய அளவிலான போட்டியில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தமிழக அணியில் பங்கேற்றேன். இப்போட்டி ஆந்திர மாநிலம் தடைப்பள்ளிக்கூடம் என்ற ஊரில் நடைபெற்றது.

தொடந்து 8ஆம் வகுப்பு படித்தபோது, தேசிய விளையாட்டுக்கழகம் நடத்திய 59வது தேசிய விளையாட்டுப் போட்டியில் 17வயதுப் பிரிவில் பங்கேற்ற தமிழக அணியில் இடம்பிடித்தேன். அப்போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது.

தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்ற தமிழக அணி பரிசு எதுவும் வாங்காவிட்டாலும், சிறப்பான அனுபவமும், பல அறிமுகங்களும் கிடைத்தன. எட்டாம் வகுப்பு படிக்கும் போது கர்நாடகமாநிலம் பெல்லாரியில் 6வது கிராமப்புற விளையாட்டுப் போட்டியை தேசிய விளையாட்டுக் கழகம் நடத்தியது. அதில் தமிழக அணி பங்கேற்றது. இப்போட்டியில் தமிழக அணி மூன்றாமிடம் பெற்றது. பங்கேற்ற அனைவருக்கும் வெண்கலப்பதக்கம் வழங்கப்பட்டது.

9ஆம் வகுப்பு படிக்கும் போது தேசிய விளையாட்டுக்கழகம் நடத்திய 60வது தேசிய விளையாட்டுப் போட்டியில் 50-52 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்ட தமிழக அணியில் பங்கேற்றேன்.

மாநிலப் போட்டியில் தொடந்து தங்கப்பதக்கம் பெற்று வந்தாலும், தேசியப் போட்டியில் ஒரு போட்டியில் மட்டும் மூன்றாமிடம் பிடிக்க முடிந்தது சந்தோஷமான விஷயமாகும். வரும் காலங்களில் தேசிய போட்டியில் தமிழக அணி நிச்சயம் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது'' என்றார் ஐஸ்வர்யா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.