முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பல மொழிப் படங்களுக்கும் சுவரொட்டி!

திரைப்படங்களுக்குச் சுவரொட்டி அவசியம். தமிழகத்தில் சிறிதும் பெரிதுமாக சுவரொட்டிகள் அச்சடிக்கும் அச்சகங்கள் பல இருந்தாலும்,

Updated On : 23 ஆகஸ்ட், 2015 at 2:25 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:01 PM

திரைப்படங்களுக்குச் சுவரொட்டி அவசியம். தமிழகத்தில் சிறிதும் பெரிதுமாக சுவரொட்டிகள் அச்சடிக்கும் அச்சகங்கள் பல இருந்தாலும், இந்தியா முழுவதும், பல மொழிகளில் திரைப்படங்களுக்கு சுவரொட்டிகள் அச்சடித்துத் தருகிறார்கள் சிவகாசியில் உள்ள "சபையர் பிரிண்டோகிராப்' என்ற நிறுவனம்.

அந்த நிறுவனத்தைச் சேர்ந்த அ.ஞானசேகரனிடம் சுவரொட்டிகள் அச்சடிப்பது குறித்துக் கேட்டபோது:

""1968ஆம் ஆண்டு எங்களது தந்தை என்.அய்யநாதன், சினிமா சுவரொட்டிகள் அச்சடிக்கும்  நிறுவனத்தைத் தொடங்கினார்.

Advertisement

20 க்கு 30 அங்குலம் மற்றும் 40 க்கு 30 அங்குலம் அளவில் மூவர்ணச் சுவரொட்டிகளையும், பல வண்ணச்  சுவரொட்டிகளையும் அச்சடித்து விநியோகம் செய்து வந்தார்.

ஆரம்பத்தில் மதுரை நகருக்கு மட்டுமே அச்சடித்துக் கொடுத்து வந்தார்.

அதற்குப் பின்னர் அவருடன் சேர்ந்து நானும் என் சகோதரர்களும் இத்தொழிலில் ஈடுபட்டோம். திருச்சி, கோவை, சென்னை என பல ஊர்களுக்கும் சுவரொட்டிகளை அச்சடித்துக் கொடுத்தோம்.

1990ஆம் ஆண்டு ஒரே சமயத்தில் நான்கு வண்ணத்தில் அச்சடிக்கும் இயந்திரம் வாங்கினோம். தற்போது பல புதிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன.

நாங்கள் இப்போது இந்தியா முழுவதும் பல மொழிகளின் திரைப்படங்களுக்கு சுவரொட்டிகள் அச்சடித்து வினியோகம் செய்து வருகிறோம். இந்தி, வங்கமொழி, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், போஜ்பூரி உட்பட பல மொழித் திரைப்படங்களுக்கும் அச்சடித்துத் தருகிறோம்.

முன்பு தமிழில் மாதம் நான்கு திரைப்படங்கள் வெளிவரும். அவற்றைத் திரையிடும் திரையரங்குகளின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும். ஒவ்வொரு திரையரங்காக மூன்று ஆண்டுகள் வரை ஓடிக் கொண்டிருக்கும். இப்போது திரைப்படங்கள் அதிக நாட்கள் ஓடுவதில்லை. நிறையப் படங்களும் வெளியாகின்றன. எனவே அதற்கான தேவை இருக்கிறது.

தற்போது திரைப்படத்தில் டிஜிட்டல் கேமிராவை பயன்படுத்தி ரூ 1 கோடியிலேயே ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க இயலும் என்றாகிவிட்டது. எனவே பலர் திரைப்படத் தொழிலுக்குப் புதிதாக வந்து கொண்டிருக்கிறார்கள். அதிக அளவில் திரைப்படங்கள் வெளிவருகின்றன. அதனால் சுவரொட்டிகளுக்கான தேவை அதிக அளவில் இருக்கிறது.

இன்னொருபுறத்திலோ, முன்பு திரைப்படம் திரையிடப்பட்டு 25வது நாள், 50வது நாளின் போது சுவரொட்டிகள் ஒட்டுவார்கள். இப்போது அது இல்லை.

ஒரு திரைப்படம் 15 நாள் ஓடினாலே போதும் என்ற நிலை வந்துவிட்டது. முன்பு தமிழகத்தில் 800 முதல் 1000 திரையரங்குகள் இருந்தன. தற்போது அது பாதியாகக் குறைந்துவிட்டது.

அஸ்ஸாம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் தற்போதும் நாடகங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே நாடகங்களுக்கும் சுவரொட்டி அச்சடிக்கிறோம். உத்தரபிரதேசம் மற்றும் பீஹார் மாநிலங்களில் பேசப்படும் போஜ்பூரி என்ற மொழியில் பல திரைப்படங்கள் வந்து மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன.

தற்போது ஃபிளெக்ஸ் சுவரொட்டிகள் வந்துவிட்டன. முதல்முதலில் "எந்திரன்' திரைப்படத்திற்கு ஃபிளெக்ஸ் சுவரொட்டிகளை அச்சடித்தோம்.

தற்போது 240க்கு 480 அங்குல சுவரொட்டிகள் வரை அச்சடிக்கிறோம். எவ்வளவுதான் நவீன தொழில்நுட்பங்கள் வந்தாலும் அதற்கேற்ப திரைப்படச் சுவரொட்டித் தொழிலும் தன்னைத் தகவமைத்து எப்போதும் நிலைத்தும் நிற்கும் தொழிலாக இருந்து வருகிறது'' என்றார் ஞானசேகரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.