மெய் மறந்து ரசிக்கும் விஷயங்கள் உலகில் பல இருக்கலாம். ஆனால், ஓவியங்கள், அதுவும் தத்ரூபமான ஓவியங்களைப் பார்க்கும்போது மெய் மறந்து ஓவியத்தோடு ஓவியமாக நம் மனதும் ஒன்றிவிடும். அந்த வகையில் மெய் சிலிர்க்க வைக்கும் ஓவியப் படைப்புகளை உருவாக்கி வருகிறார் ஈரோட்டைச் சேர்ந்த ஓவியர் ஜெ.வெங்கடேஷ்.
கலாம் மறைவு, கிராமங்கள் முதல் நகரங்கள் வரை, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. இந்த அதிர்ச்சி அலைகள் பல்வேறு வடிவங்களில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ஓவியர் வெங்கடேஷின் கைவண்ணத்தில் அப்துல் கலாமின் உருவம் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற ஓவியங்களை போல இன்றி இது மெசபடோமியா ஓவியங்கள் எனப்படும் அரிய வகை ஓவியமாகப் படைக்கப்பட்டுள்ளதுதான் இதன் தனிச்சிறப்பு. இதனால், தான் இந்த ஓவியம் கின்னஸ் சாதனைக்காக அனுப்பப்படுகிறது.
இனி வெங்கடேஷிடம் இருந்து....
""சேலம் மாவட்டம் தம்மம்பட்டி எனக்கு சொந்த ஊர். ஈரோட்டில் திருமணம் செய்துகொண்டதால் இங்கேயே தங்கி இங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். சென்னை கவின் கலை கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறேன்.
சாதாரண ஓவியங்களில், ஓவியம் மட்டும் தான் இருக்கும். எழுத்தும், ஓவியமும் சேர்ந்த கலைதான் மெசபடோமியா ஓவியங்கள். 3,500 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து, மெசபடோமியா நாகரிகக் கலாசாரத்தில் கல்வெட்டுகளில் எழுத்தைப் பயன்படுத்தி ஓவியம் வரையும் கலை இருந்தது. தமிழ்க் கலாசாரத்தில் ஓலைச்சுவடிகளில் எழுத்துக்களும், ஓவியங்களும் இணைந்து இருக்கும். இந்த இரண்டு கலாசாரத்தையும் இணைத்து, முன்மாதிரியாகக் கொண்டு புதுமையான முறையில் மெசபடோமியா ஓவியம் என்னும் புதிய முறையை உருவாக்கியுள்ளேன்.
இப்போது அப்துல் கலாம் மறைவையொட்டி எனது மனதில் இந்த புதிய முறையில் அவரது ஓவியத்தை உருவாக்க முடிவு செய்து வரைந்தேன். இதைப் பொருத்தவரை கலாமின் உருவம் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது. அந்த ஓவியத்தில் கண்ணுக்குத் தெரியாத மிகச்சிறிய எழுத்துக்களால் கலாமின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளேன். லென்ஸ் உதவியுடன் தான் இந்த வரலாற்றைப் படிக்க முடியும்.
பொதுவாக மெசபடோமியா ஓவியம் வரைய 10 நாள்கள் ஆகும். கலாம் இறந்த செய்தியைக் கேட்டவுடன், இரவும், பகலுமாகச் சேர்த்து 4 நாள்கள் அமர்ந்து இந்த ஓவியத்தை வரைந்தேன்.
2005-ம் ஆண்டில் சென்னை அரசு கவின் கலை கல்லூரியில் இளநிலை மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது, ஓவியக் கண்காட்சிக்கு கலாம் வந்திருந்தார். அப்போது நான் வைத்திருந்த ஒரே கடுகில் பாதி பக்கத்தில் வரையப்படும் நுட்பமான ஓவியத்தைப் பார்த்த கலாம் என்னை அழைத்து, ""கடுகளவு நினைத்தால் விண் அளவு சாதிக்கலாம்'' எனக்கூறி என்னை ஊக்கப்படுத்தினார். கடுகில் அவரது ஓவியத்தை வரைந்து குடியரசுத் தலைவர் மாளிக்கைக்கு அனுப்பி வைத்தபோது அதை பெற்றுக்கொண்டு வாழ்த்து மடல் அனுப்பியிருந்தார். அவரைச் சந்தித்த அனுபவம் என் மனதில் இப்போதும் நிழலாடுகிறது.
ஏற்கெனவே உலகத் தலைவர்கள் 42 பேரின் உருவங்களை வரைந்து வைத்திருக்கிறேன். முதல்கட்டமாக போதி தர்மரின் படத்தை ஏசியன் இன்ஸ்டிடியூட் மூலம் விரைவில் அனுப்ப முடிவு செய்துள்ளேன். அதைத்தொடர்ந்து கலாம் ஓவியம் மற்றும் 42 உலக தலைவர்களின் ஓவியத்தையும் அனுப்புவேன்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.