ஞாயிறு கொண்டாட்டம்

கேரளத்தில் பரவி வரும் திருவள்ளுவர் மதம்!

திருவள்ளுவரைக் கடவுளாகவும், திருக்குறளை புனித வேதமாகவும் ஏற்று, திருக்குறள் நெறிமுறைகளை நூற்றுக்கு நூறு கடைப்பிடித்து கேரளத்தில் ஒரு பிரிவினர் வழிபாடுகள் நடத்தி வருகிறார்கள் என்றால் அதிசயமாகத்தான் இருக்கும். இந்த நம்பிக்கையாளர்கள் பின்பற்றும் மதம் - திருவள்ளுவர் மதம் - என்றும் அழைக்கப்படுகிறது.

பிஸ்மி பரிணாமன்

திருவள்ளுவரைக் கடவுளாகவும், திருக்குறளை புனித வேதமாகவும் ஏற்று, திருக்குறள் நெறிமுறைகளை நூற்றுக்கு நூறு கடைப்பிடித்து கேரளத்தில் ஒரு பிரிவினர் வழிபாடுகள் நடத்தி வருகிறார்கள் என்றால் அதிசயமாகத்தான் இருக்கும். இந்த நம்பிக்கையாளர்கள் பின்பற்றும் மதம் - திருவள்ளுவர் மதம் - என்றும் அழைக்கப்படுகிறது.

திருவள்ளுவரை "பகவான் ஆதி திருவள்ளுவர்' என்று இவர்கள் அழைக்கிறார்கள். திருவள்ளுவரை தரிசிக்கும், வணங்கும் ஆலயத்தை "பகவான் ஆதி திருவள்ளுவர் ஞான மடம்' என்று பெயரிட்டுள்ளார்கள். கேரளத்தின் கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மாவட்டங்களின் பகுதிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மடங்கள் செயல்படுகின்றன. பகவான் ஆதி திருவள்ளுவர் மடங்களில், மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை மந்திரமாக ஏறக்குறைய சுமார் 60 ஆயிரம் பேர் ஓதி, வள்ளுவரைத் தெய்வமாக தியானித்து கும்பிட்டு வருகிறார்கள். திருவள்ளுவருக்கு, திருக்குறளுக்கு உலகில் எந்த மூலையிலிருந்தும் கிடைக்காத அங்கீகாரம், பெருமையை கெüரவத்தை கேரளம் தந்திருக்கிறது.

வள்ளுவர் மதத்தைக் கேரளத்தில் ஸ்தாபித்திருப்பவர் மூவாற்றுபுழாவைச் சேர்ந்த சிவானந்தர்.

ஆரம்பத்தில் சிவானந்தன் என்று அழைக்கப்பட்டவர், தனி மனிதராக நின்று, உடல் பொருள் ஆவி, குடும்பத்தை மறந்து, திருவள்ளுவரின் போதனைகளைப் பரப்பி, திருவள்ளுவர், திருக்குறள் பக்கம் அறுபதாயிரம் கீழ்த்தட்டு மக்களைக் கொண்டு வந்ததினால், அந்த அறுபதாயிரம் பேர்களால் மதிப்பு மரியாதையுடன் சிவானந்தர் என்று அழைக்கப்படுகிறார். சிவானந்தரைச் சந்தித்த போது:

""எனது பூர்வீக மதம் கிறிஸ்தவம். 1974 வாக்கில், பூப்பாறை என்ற இடத்தில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். தேயிலைத் தோட்டத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் வேலை பார்த்து வந்தார்கள். அங்கே தமிழர் ஒருவர் தேநீர் கடை நடத்தி வந்தார். அந்தக் கடையில் பெரிய படம் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அந்தப் படத்தில், உலகத்தைத் திருத்திய உத்தமர்கள் என்ற தலைப்பிற்கு கீழே இயேசு, திருவள்ளுவர், புத்தர் படங்களை அச்சடித்திருந்தார்கள். தேநீர்க் கடைக்காரர் திருவள்ளுவர் படத்தைக் காட்டி, ""அவர்தான் திருவள்ளுவர் . எங்க தமிழ்நாட்டின் மகாகவி . அவர் எழுதிய திருக்குறள் உலகப் புகழ் பெற்றது .. ரொம்பவும் பிரபலமானது'' என்று பதில் சொன்னார். அந்தக் கடைக்காரரின் பதிலால், திருவள்ளுவரிடம் எனக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது.

வெண்ணிக் குளம் கோபால குரூப் மலையாளத்தில் மொழிபெயர்த்த திருக்குறள் புத்தகம் கிடைத்தது. பலமுறை மலையாள திருக்குறளைப் படித்தேன் நான் என்ன தேடினேனோ அவை எல்லாம் திருக்குறளில் சொல்லப்பட்டிருந்தன. எனது பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது அந்தக் கணத்தில், திருவள்ளுவர் தான் எனது ஞானகுரு வழிகாட்டி என்று முடிவு செய்தேன்.

திருவள்ளுவர் படத்தை வணங்க ஆரம்பித்தேன். அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களிடம் திருவள்ளுவர், திருக்குறள் பற்றி பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தேன். குடிப்பதை நிறுத்தினேன். அசைவ உணவையும் ஒதுக்கினேன். என்னைப் பார்த்து, பலரும் மாற ஆரம்பித்தார்கள். ஞான குருவாக வள்ளுவரை ஏற்றுக் கொண்டவர்கள் அசைவ உணவுகளை விட்டுவிட வேண்டும். மது, புகையிலை இதர லாகிரி வஸ்துகளைத் தொடக் கூடாது. பொய் சொல்லக் கூடாது. திருடுவது, பிறரை ஏமாற்றுவதும் விலக்கப்பட்டுள்ளது. காதல் திருமணங்களுக்கு வரவேற்பு உண்டு. இந்த 34 வருட காலத்தில், திருவள்ளுவரை சாட்சியாக வைத்து ஏராளமான காதல் திருமணங்களை நான் நடத்தி வைத்துள்ளேன்.

ஞானமடங்களில் நடக்கும் திருமணத்தில் பெண்ணுக்குத் தாலி கட்டப்படுவதில்லை. மோதிரம் போட்டுவிடும் வழக்கமும் இல்லை. மணமகனும் மணமகளும் திருமண தினத்தன்று புத்தாடை உடுத்தி, கழுத்தில் மலர் மாலை அணிந்து சுற்றம் சூழ மடத்திற்கு வருவார்கள். திருமணம் பதிவு செய்யப்படும்.

பெற்றோர், உறவினர் முன்னிலையில், திருவள்ளுவர் ஞான மட புரோகிதர் இல்லறம் அதிகாரத்தில் உள்ள திருக்குறள்களை ஓதி முடிக்க, திருமணம் நிறைவுறும். குழந்தை பிறந்தால் பிறப்புப் பதிவேட்டில், பிறப்பு விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

ஞான மடங்களை உருவாக்கிய போதே, இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடுகாட்டுக்காக நிலத்தையும் சேர்த்து வாங்கிவிட்டோம். காரணம், இவர்களது முன் மதமான இந்து, கிறிஸ்தவத்தைச் சேர்ந்த சிலர், திருவள்ளுவர் மதத்தைப் பின்பற்றியவர்கள் இறந்து போனால், அடக்கம் செய்ய அனுமதிக்கவில்லை. அதனால், வழிபடும் மடத்திற்கு அருகிலேயே இடுகாட்டுக்காக நிலம் வாங்கி விட்டோம். மரணம் ஏற்படும் போது, உடலை ஞான மடத்திற்கு கொண்டு வந்து, நிலையாமை அதிகாரத்தில் உள்ள குறள்களை ஓதி, இறப்பிற்கான பதிவேட்டில் பதிவு செய்து நல்லடக்கம் செய்கிறோம்.

கார்த்திகை மாதம் 41 நாட்கள் விரதமிருந்து, தலைமை ஞானமடமான கூர்மலையில் உள்ள மார்பளவு திருவள்ளுவர் சிலையை பூக்களால், விளக்குகளால் அலங்கரித்து வழிபடுகிறோம்.

திரு ஓணம் பண்டிகை எல்லா மதத்தினருக்கும் பொதுவானது. திரு ஓணம் பண்டிகையின் போது, எல்லா ஞான மடங்களிலும் வண்ண வண்ண பூக்களால் பூக்களம் என்னும் மலர்க் கோலங்கள் போடப்படுகின்றன. வள்ளுவரை வணங்கினாலும், கேரள மண்ணின் வாசனையை வள்ளுவருக்கு வழங்குகிறோம். ஆண்டு விழா அன்று, அதிகாலையில் செண்டை மேளங்கள் மங்கலமாய் முழங்க, ஞான மடத்தின் கொடி ஏற்றம் நடக்கும்.

திருவள்ளுவர் மதத்திற்காக, பச்சைநிறக் கொடியின் நடுவே சிவப்பு வட்டம் வரைந்து வடிவமைத்திருக்கிறோம். கொடியேற்றம் நடந்து முடிந்ததும், திருவள்ளுவர் வழிபாடு. மலையாள திருக்குறள்கள் ஜெபிக்கப்படும். திருவள்ளுவர், திருக்குறள் பற்றி பக்தர்கள் உருவாக்கிய பாடல்கள் பாடப்படும்.

ஒவ்வொரு மடத்துக்கும் மடபதி எனப்படும் புரோகிதர் இருக்கிறார். வழிபாடு நடத்துவது, மட பரிபாலனம் இவரது பொறுப்பு.

ஞான மடத்துடன் இணைந்தவர்கள் பல ஜாதியைச் சேர்ந்தவர்கள் ஞான மடத்தில் சேர்ந்த பிறகு, இவர்களுக்கிடையில் இருந்து வந்த ஜாதி, மத வேறுபாடு, அடையாளங்கள் தொலைந்து போயின'' என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT