** வீராணம் ஏரி - என்று அழைக்கப்படும் ஏரி, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ளது.
** முதலாம் பராந்தக சோழனின் மகன் ராஜாதித்தன் தக்கோலம் போருக்குச் செல்லும் வழியில் "வடகாவிரி' என அழைக்கப்பட்ட கொள்ளிடம் ஆற்றின் நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க எண்ணினான்.தனது வீரர்களுக்கு ஏரியை வெட்ட உத்தரவிட்டான்.
** ஏரி வெட்டும் பணி நிறைவடையாத நிலையில், தக்கோலம் போருக்கு ஒரு பகுதி வீரர்களுடன் புறப்படும் போது ஏரியை வெட்டி முடித்ததும் தன் தந்தையின் வீரப்பெயர்களில் ஒன்றான "வீரநாராயணன்' பெயரைச் சூட்ட வேண்டும் என்று கூறிவிட்டு சென்றான்.
** போரில் ராஜாதித்தன் யானை மீது அமர்ந்து போரிட்ட நிலையிலேயே வீரமரணம் அடைந்தான். இதன் காரணமாக ராஜாதித்தன் "யானைமேல் துஞ்சிய தேவன்' என அழைக்கப்பட்டான்.
** 1011- 1037 ஆண்டுகளுக்கிடையே ஏரி வெட்டி முடிக்கப்பட்டது. ராஜாதித்தனின் விருப்பப்படியே ஏரிக்கு "வீரநாராயணன் ஏரி' என்றும் பெயரிடப்பட்டது. காலப்போக்கில் இந்த ஏரியின் பெயர் "வீராணம் ஏரி' என்று மருவியது.
** இதன் தொடர்ச்சியாக காட்டுமன்னார்கோயிலில் பெருமாள் கோயில் ஒன்றை கட்டி அதற்கு "வீரநாராயணன் பெருமாள்' என்று பெயர் சூட்டப்பட்ட வழிபாட்டுத் தலத்தை சோழ மன்னன் உருவாக்கினான்.
** மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் 188 கி.மீ பயணித்து கல்லணைக்கு வந்து சேர்ந்து, கல்லணையிலிருந்து கொள்ளிடத்தின் வழியாக 81 கி.மீ பயணித்து, கீழணையை வந்தடைந்து, அங்கு தேக்கப்பட்டு வடவாறு வழியாக 22 கி.மீ பயணித்து வீராணம் ஏரிக்கு வந்து சேரும் வகையில் அமைந்திருக்கிறது.
** 1100 ஆண்டுகள் வரலாற்று சிறப்பு கொண்ட வீராணம் ஏரியின் கிழக்கு பிரதான கரையின் மொத்த நீளம் 16}கி.மீ. ஏரியின் மொத்த சுற்றளவு 48 கி.மீ. ஏரியின் மொத்த அகலம் 5.6 கி.மீ ஆகும். ஏரியின் பரப்பளவு 15 சதுர மைலாகவும் உள்ளது.
** இந்த ஏரியின் நீர்மட்ட அளவு 47.50 அடியாகும். இந்த அளவு ஏரியின் கடல்மட்ட அளவு 31.90 அடி போக மீதம் 15.60 அடியே அதிகபட்ச நீர் மட்ட அளவாக உள்ளது. ஏரியின் மொத்த நீர் கொள்ளளவு 1465 மி.க.அடியாகும்.( 1.465 டி.எம்.சி ஆகும்).
** ஏரியின் மூலம் கிழக்கு கரையில் 28 மதகுகள் மூலமாகவும், மேற்கு கரையில் 6 மதகுகள் மூலமாகவும் 49,440 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று விவசாயப் பணிகள் நடந்து வருகின்றன.
** வீராணம் ஏரியின் பிரதான வடிகால் வெள்ளியங்கால் ஓடையாகும். இது ஏரியின் தென்பகுதியில் லால்பேட்டை கிராமத்தின் அருகே உள்ளது. இதில் மொத்தம், 14 கண்மாய்கள் உள்ளன. இதில் இருந்து விநாடிக்கு 18,000}கன அடி நீரை ஏரியில் இருந்து வெளியேற்ற முடியும். இது மட்டும் இல்லாமல் ஏரியின் பாதுகாப்பிற்க்காக 490 அடி நீள மொட்டை கலுங்கு வெள்ளீயங்கால் ஒடையின் தென்புறத்தில் கட்டப்பட்டுள்ளது.
** ஏரியின் அதிகபட்ச நீர்மட்டத்திற்கு மேல் நீர்மட்டம் உயருமானால் நீர் தானாகவே வழிந்து ஓடிவிடும். இது மட்டுமின்றி இந்த ஏரியின் வடப்புறத்தில் 2 வீராணம் புது வரத்து மதகில் இருந்து அதிகபட்சமாக விநாடிக்கு 3000 கன அடி நீரை வெள்ளாற்றில் (சேத்தியாத்தோப்பு) வடிய வைக்க முடியும்.
** இந்த ஏரியின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 165 சதுர மைல் ஆகும். இப்பகுதியில் பெய்யும் மழைநீர் 1.செங்கால் ஓடை, 2. கருவாட்டு ஓடை, 3. ஆண்டிப்பாளயம் வடிகால், 4. பாளையங்கோட்டை வடிகால், 5. பாப்பாகுடி வடிகால் ஆகிய ஓடைகளின் வழியாக ஏரிக்கு வரும். இந்த நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து 3 நாட்களுக்கு அடை மழை பெய்யுமானால் மேலே குறிப்பிட்ட 5 ஓடைகளின் வழியாக விநாடிக்கு 16,300 கனஅடி நீர் ஏரிக்கு வரும்.
** 1465மி.க.அடி கொள்ளளவு கொண்ட தமிழகத்தின் நான்காவது மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி. 1923-ஆம் ஆண்டு ஏரியின் நீர் கொள்ளளவு 1441 மி.க.அடியாகவும், 1966-ஆம் ஆண்டு ஏரியின் நீர் கொள்ளளவு 1102 மி.க.அடியாகவும், 1972-ஆம் ஆண்டு ஏரியின் நீர் கொள்ளளவு 987 மி.க.அடியாகவும், 1983-ஆம் ஆண்டு ஏரியின் நீர் கொள்ளளவு 930 மி.க.அடியாகவும், 2004-ஆம் ஆண்டு ஏரியின் நீர் கொள்ளளவு 906 மி.க.அடியாகவும் படிப்படியாக நீர்ப்பிடிப்பு கொள்ளளவு குறைந்து வந்துள்ளது.
** வீராணம் ஏரியின் மூலம் கிழக்குகரையில் உள்ள 28 பாசன மதகுகளின் மூலமாகவும் எதிர்வாய்க் கரையில் உள்ள 6 பாசன மதகுகளின் மூலமாகவும் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் உள்ள 123 கிராமங்களில் உள்ள 49,440 ஏக்கர் விளைநிலங்களுக்கு நேரடியாகவும் சேத்தியாத்தோப்பு அனணகட்டு, வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி ஆகியப்பகுதிகளில் உள்ள 40,669 ஏக்கர் விளைநிலங்களுக்கு மறைமுகமாகவும் பாசன வசதியைச் செய்கிறது.
** சென்னை பெருநகர குடிநீர் தேவைக்கு புதிய வீராணம் திட்டம் உருவாக்கி அதன் மொத்த திட்டமதிப்பீடான 720.00 கோடிரூபாயில் 130.00 கோடிரூபாய் வீராணம் ஏரியின் கரைகள் பலப்படுத்துதல் மற்றும் அனைத்து கால்வாய்கள் பாசனமேம்பாட்டு பணிகளுக்கும், மீதம் உள்ள ரூபாய் 690 கோடி வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டு செல்ல குழாய் அமைப்பு உள்ளிட்ட அனைத்து குடிநீர் பணிகளுக்கும் ஓதுக்கீடு செய்யப்பட்டது.
** 2004-ஆம் ஆண்டு "புதிய வீராணம் திட்ட' செயல்பாட்டின் போது தூர்ந்துபோன ஏரியை தூர்வாரி ஆழப்படுத்துவதற்கு பதிலாக பிரதான கரையையும், எதிர்வாய் கரையையும் உயர்த்தி முழுகொள்ளளவான 1465 மி.க.அடிக்கு பதிலாக 1441 மி.க.அடி தண்ணீரை தேக்கும் அளவிற்கு ஏரியின் நீர்ப்பிடிப்பின் அளவை உயர்த்தி உள்ளதாக பொதுப்பணித்துறை அறிக்கை கூறுகிறது.
** 2004-ஆம் ஆண்டு முதல் வீராணம் ஏரியிலிருந்து சென்னை மாநகர குடிநீருக்காக விநாடிக்கு 78 கன அடி வீதம் தண்ணீர் கொண்டுசெல்ல வடிவமைக்கப்பட்டு 77 கன அடி வீதம் கொண்டு செல்லப்படுகிறது. பாசனத்திற்க்கு அதிகபட்சமாக ஏரியின் நீர் இருப்பு மற்றும் தேவைக்கேற்ப விநாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
** சென்னை நகரப் பகுதியில் ஒரு நாளைக்கு நபர் ஒன்றுக்கு 90 லிட்டர் வீதம், மாநகரத்தில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 140 லிட்டர் வீதம் குடிநீர் வழங்க வேண்டிய நிலையில் 65.10 லட்சம் நபர்களுக்கு நாளொன்றுக்கு 910.16 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். தற்போது 820 மி.லி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. 2004-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வீராணம் ஏரியிலிருந்து 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. சென்னை குடிநீர் தேவையில் நான்கில் ஒரு பகுதியை வீராணம் ஏரி பூர்த்தி செய்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.