இலக்கியவாதிகளால் மிகவும் போற்றப்படுகின்ற தலைவர் பாரதிய ஜனதா கட்சியில் ஒருவர் இருக்கிறாரென்றால் அவர் இல. கணேசன்தான். அவர் தேசியத் தலைவர். நாடாளுமன்ற உறுப்பினர் என்பது ஒருபுறம் இருந்தாலும், பொற்றாமரை இலக்கிய அமைப்பின் தலைவர் என்பதுதான் அவருக்குள்ள தனிச்சிறப்பு.
நயத்தக்க நாகரிகமாகவும் கடுகளவு கூட கண்ணியக் குறைவு இல்லாத வகையிலும் மேடையில் பேசக் கூடியவர். எனக்குப் பிடித்த பா.ஜ.க. தலைவர் அவர் ஒருவர்தான். அண்மையில் கவிக்கோ ஞானச்செல்வன் எழுதிய "இன்றும் இனிக்கிறது நேற்று' என்ற நூல் வெளியீட்டு விழாவில் நூலை வெளியிட்டு மிகச் சிறப்பான முறையில் சிறப்புரையாற்றினார். நான் அவ்விழாவில் கலந்து கொண்டு நூலை அறிமுகம் செய்து பேசினேன். அந்த நூலுக்குத் திருப்பூர் கிருஷ்ணன் அற்புதமான அணிந்துரையை எழுதியிருந்தார்.
கம்பராமாயணம் என்ற மாளிகைக்கு முன்புறப் பூஞ்சோலையாகப் பாலகாண்டம் திகழ்கிறது என்று கம்பரது அன்பர்கள் எப்படிக் கூறுவார்களோ அதைப்போல் ஞானச் செல்வன் எழுப்பிய இந்தப் புத்தக மாளிகைக்கு முன்புறப் பூஞ்சோலை திருப்பூர் கிருஷ்ணனின் அணிந்துரையென்று சொல்லலாம். அவ்வளவு சிறந்த அணிந்துரை.
இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகுதான் "பதில்' என்ற சொல் தமிழ்ச் சொல் அல்ல, அது அரபிச் சொல் என்பதை அறிந்து கொண்டேன். அதுபோல் ஏராளம், தாராளம் என்பது தெலுங்குச் சொல் என்பதையும் தெரிந்து கொண்டேன். ஏராளம் என்பதற்கு மிகுதியென்றும், தாராளம் என்பதற்கு கணக்கின்றியென்றும் தமிழில் சொல்ல வேண்டும் என்றும் புரிந்து கொண்டேன்.
மேலும் "வேன்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு "கூட்டுந்து' என்றும் கரடுமுரடான பாதைகளில் ஓடுகின்ற "ஜீப்' என்ற சொல்லுக்கு "கரட்டுந்து' என்ற புதிய தமிழ்ச் சொல்லையும் அவர் படைத்திருக்கிறார்.
தினமணியில் இரண்டாண்டுக் காலம் தொடர்ந்து "நல்ல தமிழில் பேசுவது எழுதுவது' எப்படியென்று ஏற்கெனவே எழுதியிருக்கிறார். அதையும் படித்திருக்கிறேன்.
ராமநாதபுர மாவட்டம் அபிராமத்தில் தமிழாசிரியராக இவர் இருந்தபோது, தமிழ் வித்துவான் வகுப்புத் தேர்வு எழுதுவதற்காக இவரிடத்தில் மாணாக்கராகச் சேர்ந்து இலக்கிய இலக்கணங்களைக் கற்றுக் கொண்டவர்தான் இவரைவிட மூன்று வயது மூத்தவரான பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன். இதை ஞானச்செல்வனே அந்த நூலில் சொல்லியிருக்கிறார்.
1967-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ராஜாஜி, காமராசர், காயிதேமில்லத் இஸ்மாயில் சாகிப், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளோடு கூட்டணி சேர்ந்து காங்கிரசை அண்ணா வீழ்த்தினார். 1967-இல் வீழ்ந்த காங்கிரஸ் வீழ்ந்ததுதான் என்று ஞானச்செல்வன் குறிப்பிட்டிருந்தார்.
தமிழர்களின் உணர்ச்சிகளுக்கு எதிராக எந்தத் தேசியக் கட்சிகள் ஈடுபட்டாலும் அந்தத் தேசியக் கட்சிகளுக்குத் தமிழ்நாட்டில் வீழ்ச்சிதான் ஏற்படும். இதற்கு காங்கிரஸ் பா.ஜ.க. என்று பேதம் கிடையாது என்று நான் பேசும்போது குறிப்பிட்டேன்.
அண்ணா ஆட்சியில் அவர் செய்த மாபெரும் சாதனை இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை 1967-இல் சென்னை யில் நடத்தியது தான் என்று ஞானச்செல்வன் அந்த நூலில் கூறியிருந்தார். அதுவும் ஒரு சாதனையாக இருக்கலாமே தவிர, அதையே ஒரு மாபெரும் சாதனையாகக் கருத முடியாது.
சென்னை மாநிலமாக இருந்த இந்த மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டி உலகில் உள்ளவர்கள் எல்லாரையும் தமிழ்நாடு தமிழ்நாடு என்று சொல்லும்படி செய்தாரே அதுதான் அண்ணா செய்த மாபெரும் சாதனை. சுயமரியாதைத் திருமணங்களெல்லாம் செல்லும் என்று சட்டம் செய்தாரே அதுவும் ஒரு சாதனை தான்.
அண்ணாவுக்குப் பிறகு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை மதுரையிலே நடத்தினார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டைத் தஞ்சாவூரிலே நடத்தினார். இதைப் போல மாநாடுகள் நடத்தப் பல முதலமைச்சர்கள் வரலாம். ஆனால் தாய்க்குத் தனயன் பெயர் வைப்பதைப் போலே நம் தாய்நாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைக்க ஒரு அண்ணாவால்தான் முடிந்தது.
1956-இல் இருந்து தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டுமென்று தமிழ்நாட்டுச் சட்டமன்றத்திலே கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. 1956-இல் மார்ச் 28-ஆம் தேதி மாநில மறுசீராய்வுத் தீர்மானத்தின்மீது கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் ஜீவானந்தம் சட்டமன்றத்தில் பேசும்போது ஏன் தமிழ்நாடு என்று இந்த மாநிலத்திற்குப் பெயர் வைக்கக்கூடாது என்று கேட்டார் அதைக் காங்கிரஸ் கட்சி கண்டுகொள்ளவே இல்லை. அண்ணாவால்தான் அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. ஆக அண்ணாவின் சாதனைகளில் மிகப்பெரிய சாதனை அதுதான்.
1967-இல் அண்ணா முதலமைச்சர் பதவியை ஏற்பதற்கு முன்னால் அந்தத் தேர்தலில் தோற்றுப்போன காங்கிரஸ் தலைவர்களை, குறிப்பாக காமராசர், பக்தவத்சலத்தைச் சந்தித்து அவர்களிடம் வாழ்த்துப் பெற்று அதன் பிறகு முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டார். அரசியல் நாகரிகம் என்றால் அதுதான் அரசியல் நாகரிகம். இன்றைக்கு அத்தகைய அரசியல் நாகரிகம் எவரிடமாவது இருக்கிறதா? வெற்றிபெற்ற முதலமைச்சர் தோற்றுப் போன முதலமைச்சர் மீது வழக்குப் போடுவதுதான் இன்றைய நாகரிகமாக மாறியிருக்கிறது.
அண்ணா பல தலைவர்களை வளர்த்துவிட்டார். அண்ணாவுக்குப் பிறகு தலைவராக வந்த திராவிட இயக்கத் தலைவர்கள் யாரும் புதிய தலைவர்களை வளர்த்துவிடவில்லை. வளர்ந்து விடுவார்கள் என்று நினைத்தவர்களையெல்லாம் இயக்கத்தை விட்டு வெளியேற்றினார்களே தவிர, அரவணைத்துக் கொண்டு செல்லவில்லை. அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்குப் பிறகு ஆளுமைத் தன்மைமிக்க தலைவர்கள் யாரும் இன்று தமிழ்நாட்டில் இல்லை.
மிகப்பெரிய இயக்கத்திற்குத் தலைவராகவும், இரண்டாண்டுக் காலம் முதலமைச்சராகவும் இருந்தவர் அண்ணா. அவர் மறையும்போது அவர் குடும்பத்திற்கு மூன்றரை லட்சம் ரூபாய் கடனிருந்தது. இரண்டாண்டுக் காலம் முதலமைச்சராக இருந்த ஒருவருக்கு மிகப்பெரிய இயக்கத்தின் தலைவருக்கு மூன்றரை லட்சம் ரூபாய் கடன் இருந்தது என்றால் இன்றைய அரசியல் உலகில் யாராவது நம்புவார்களா? ஆனால் அதுதான் உண்மை. ஒரு கவுன்சிலர் கூட எப்படி எப்படியெல்லாமோ இன்றைக்கு இருக்கிறார்கள். அண்ணா, காமராசர், கக்கன் போன்றவர்களெல்லாம் கோயிலில் வைத்துக் கும்பிடத்தகுந்தவர்கள்.
முதலமைச்சராக ஜெயலலிதா அம்மா முதன்முதல் 1991-இல் வந்தபோதுதான் அண்ணா குடும்பம் படக்கூடிய சிரமத்தை அறிந்து அண்ணாவின் நூல்களையெல்லாம் நாட்டுடைமை ஆக்கி அண்ணாவின் குடும்பத்திற்கு எழுபத்தைந்து லட்சம் ரூபாய் நிதியளித்தார். அண்ணாவுக்குச் செய்யக் கடமைப்பட்டவர்கள் அதை செய்யவில்லை. ஆனால் ஜெயலலிதாதான் அதைச் செய்தார்.
நீச்சுக் கலையிலே ஆட்டனத்தி என்ற சேரமன்னன் சிறந்திருந்ததைப் போல் பேச்சுக் கலையில் பெரும்புகழ் பெற்றவராக விளங்கினார் அண்ணா. நாக்கு ஒன்றையே மூலதனமாக வைத்து மக்களின் வாக்கு வன்மையைப் பெற்று முதல்வரானவர் அவர். ஓட்டுக்குப் பணம் கொடுக்காத காலம் அந்தக் காலம். ஓட்டுக்குப் பணம் வாங்காத காலமும் அந்தக் காலம்தான்.
அப்படிப்பட்ட அண்ணாவைப் பற்றி ஒரு பாட்டிலே ஒருவரி எழுதியிருக்கிறேன். அதைச் சொல்வதற்காகத்தான் இந்தக் கட்டுரையில் அரசியலைக் கலந்தேன்.
கதாசிரியர் பாலமுருகன் தாயரித்து இயக்கிய படம் "காமசாஸ்திரம்'. இதில் தான் நடிகை சீமா தமிழில் அறிமுகமானார். பாலமுருகன்தான் அறிமுகப்படுத்தினார்.
சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த குடும்பம் அது. அந்தக் குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்தால் மகிழ்ச்சியடைவார்கள். ஆண் குழந்தையென்றால் மனதுக்குள் அழுவார்கள். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த ஆண் குழந்தைக்குத் தாலாட்டுப் பாடுவதைப் போல ஒரு காட்சி. இந்தக் காட்சியை விளக்கிப் பாடல் எழுதச் சொன்னார் பாலமுருகன். இதில் அண்ணா, காமராசர், எம்.ஜி.ஆர், கலைஞர் போன்றவர்கள் பெயரெல்லாம் வரும்படி எழுதுங்கள் என்றார்.
""மானென்றும் வானத்து மீனென்றும் கொண்டாட
மகன் பிறந்தான் தென்றல் காற்றாக
ஆணொன்று பிறந்தால் அழுகின்ற கூட்டத்தில்
ஆனந்தம் பிறந்தது பாட்டாக''
இதுதான் பல்லவியென்று எழுதிக் காட்டினேன். நன்றாக இருக்கிறது. சரணத்தையும் எழுதி விடுங்கள் என்றார்.
""தங்கத்தில் தேர்செய்து உன்கையில் கொடுக்கத்
தாய்மாமன் யாரும் உனக்கில்லையே
மானத்தை உயிராய் மதிக்கும் உன் பாட்டனும்
மகனே உனைப்பார்க்க இன்றில்லையே
செந்தமிழ் நதியில் நீ விளையாடு
திருக்குற ளோடு உறாவடு
பைந்தமிழ்ச் சாரதி பாரதி போலே
பயனுள்ள கவிகளை நீ பாடு
அறிவுக்குச் சிகரம் தமிழுக்கு அகரம்
அண்ணாவைப் போலே புகழ்கொள்ளடா
ஊருக்கு உழைத்த உத்தமன் காமராஜ்
உன்னத வழியில் நீ செல்லடா
மழைபோல் வழங்கும் பொன்மனச் செம்மல்போல்
மக்களின் உள்ளத்தில் நீ வாழணும்
எதையும் தாங்கும் கலைஞரைப் போலே
எதுவந்தாலும் நீ தாங்கணும்''
இதுதான் சரணம். எம்.எஸ்.விசுவநாதன் இசையில் வாணி ஜெயராம் பாடிய பாடல் இது. படம் சுமாராக ஓடியது. இந்தப் பாடல் ஓரளவுக்குப் பிரபலமானது.
தமிழ்ப் படங்களில் தாலாட்டுப் பாடல்கள் நிறைய வந்திருக்கின்றன. அதைப் பட்டியலிட்டால் அவற்றை ஒரு புத்தகமாகவே வெளியிடலாம்.
அண்மையில் கதாசிரியர் பாலமுருகனின் வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. அதில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, நடிகரும் தயாரிப்பாளருமான சங்கிலி முருகன், பாலமுருகன், நான் உட்பட பலரும் கலந்து கொண்டோம்.
(இன்னும் தவழும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.