ஞாயிறு கொண்டாட்டம்

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 49: காலத்தை வென்று நின்ற மாயவநாதன்!

மின்னல்போல் ஆகுமிந்த வாழ்க்கையே - வான்வில்போலுமே இளமை ஆனதே - ஆம்துன்பக்கதை உனதே'' 

கவிஞர் முத்துலிங்கம்

மின்னல்போல் ஆகுமிந்த வாழ்க்கையே - வான்
வில்போலுமே இளமை ஆனதே - ஆம்
துன்பக்கதை உனதே'' 

என்று 1953-இல் வெளிவந்த "அவன்' என்ற மொழி மாற்றுப் படத்தில் சங்கர் - ஜெய்கிஷன் இசையில் கம்பதாசன் ஒரு பாடல் எழுதியிருப்பார்.
கணநேரத்தில் மின்னி மறைகின்ற மின்னல் போன்றது வாழ்க்கையென்றும் இளமை என்பது வானவில் போலே விரைவில் மறையக் கூடியது என்றும் தமிழ் இலக்கியங்கள் வாழ்வியல் தத்துவங்களைச் சொல்லியிருக்கின்றன.

""இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
வளம்தரு வான்பொருட் செல்வமும் நில்லா''
என்று நமது மணிமேகலைக் காப்பியமும் நிலையாமையைக் கூறுகிறது. அப்படிப்பட்ட நிலையில்லா உலகத்தில் நிலைத்து நிற்பது எது? புகழ் ஒன்றுதான்.
""மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந்தனரே''

என்று புறநானூறு புகலும். குமணவள்ளலைப் பாடும் போது பெருந்தலைச் சாத்தனார் பாடிய வரிகள் இவை. நிலைத்த புகழோடு நிற்பதற்கும் காலம்தான் நமக்குத் துணை செய்கிறது. இறந்த காலத்தில் இருந்தவர்கள் பெற்ற புகழை நிகழ்காலத்தில் வாழ்பவர்கள் நினைவு கூர்ந்து பிறருக்குச் சொல்லிக் கொண்டிருப்பதால்தான் எதிர்காலத்திலும் அவர்கள் புகழ் நீண்டு நிலவுகிறது. ஆக, காலம்தான் அதற்கும் துணை நிற்கிறது.

எதுவாக இருந்தாலும் எல்லாம் காலத்தின் கைகளில்தான் இருக்கிறது. காலத்திற்காகத்தான் நாம் காத்திருக்க வேண்டுமே தவிர காலம் நமக்காகக் காத்திருக்காது. இதை விளக்குகின்ற வகையில் "கரையைத் தொடாத அலைகள்' என்ற படத்தில் சந்திர போஸ் இசையில் ஒரு பாடல் எழுதினேன். இது 1985-ஆம் ஆண்டு வெளிவந்தது.

""பூப்பறிக்கும் நேரத்திலே
புயலடிச்சுப் போனதடா
தொடுத்த பூவை அடுத்த மனிதன்
எடுத்துப் போவதைப் பார்த்துக் கடா
பூவோ பூவு பூவோ பூவு''
- இது பல்லவி.

""நதிகள் காய்ந்தபின் படகோட்ட முடியுமா
கோட்டை சாய்ந்தபின் கொடியேற்றம் நடக்குமா
ஐப்பசி ஆடி மாதத்தில் தென்றலும் வீசுமா
காட்டுக்குச் சென்ற பூங்கிளி கூட்டுக்குத் திரும்புமா
காலம் எவர்க்குமிங்கே காத்திருக்கக் கூடுமா
அலைகள் ஓய்ந்தபின் கடல்நீரில் குளிக்கவே
எண்ணும் மனிதர்கள் இந்நாட்டில் கோடியே
கங்கையில் வெள்ளம் பொங்கினால் கரைகள் போடணும்
கரைகள் போடத் தவறினால் கலங்கிவாடணும்
காலம் எவர்க்குமிங்கே காத்திருக்கக் கூடுமா''

இப்படிச் சரணங்கள் வரும். பி. மாதவன் டைரக்ட் செய்த படம் இது. இதில் எல்லாப் பாடல்களையும் நான் தான் எழுதினேன்.

இன்றைய ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.முக. அரசு தனது ஆட்சிக் காலத்திலேயே தமிழ்நாட்டின் உரிமைகளை தில்லியிடம் போராடிப் பெற வேண்டும். இல்லையென்றால் எதிர்காலம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை தோன்றும்.

இதை இப்போது எழுதும்போது பல்லாண்டுகளுக்கு முன்பு சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் நடந்த ஒரு கவியரங்கில் கவிஞர் ஜீவபாரதி பாடிய கவிதைதான் நினைவுக்கு வந்தது. கவியரங்கத் தலைப்பு காலம் நம் கைக்குள்ளே" ஆனால் ஜீவபாரதி அதற்கு நேர்மாறாகப் பாடினார்.

""காலையிலே எழுந்திருக்கணும்
கஞ்சித்தண்ணியைக் குடிச்சு வைக்கணும்
ஆடுமாடு போட்ட சாணி
அத்தனையும் அள்ளிப் போடணும்
களையெடுக்கணும் கதிரறுக்கணும்
களத்து மேட்டுலே காத்திருக்கணும்
விளைஞ்சதெல்லாம் முதலாளியின்
வீட்டுக்குள்ளே பதுக்கி வைக்கணும்
அவரளந்த தானியத்தில்
ஆறுபேரு உயிரிருக்கணும்
காலம் எங்கள் கைகளிலா சொல்லுங்க - சும்மா
கவிதையிலே புலம்புவது ஏனுங்க''

என்று பாட்டாளியின் பரிதவிப்புக் குரலைக் கவிதையிலே வெளிப்படுத்தினார். இவர் சிறந்த எழுத்தாளர் பேச்சாளர். பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்தவர். நிறையப் புத்தகங்கள் எழுதியவர். இவரைப் போன்றவர்கள் சொல்லுகின்ற காலங்கள் முதலாளிகளின் கைகளிலே இருப்பது போல்தான் வரும். அந்த முதலாளிகளும் காலத்தின் கைகளிலே இருப்பவர்கள்தாம்.

காலத்தை வென்று நிற்பவர்கள் எவரோ அவர்கள் கடவுளைப் போன்றவர்கள். அழியாத புகழ் படைத்தவர்கள் அவர்கள் தாம் காவியங்களில் வாழக் கூடியவர்கள். காலத்தை வென்றவன் நீ காவியம் ஆனவன் நீ" என்று அப்படிப்பட்டவர்களைத் தான் பாடுவார்கள். அப்படிப்பட்ட காலம் பல கவிஞர்களை வாழவிடாமல் களவாடிச் சென்றும் இருக்கிறது. அதில் ஒரு கவிஞர் மாயவநாதன். இவர் சத்தி உபாசகராகவும் இருந்தவர். சக்திதேவியைப் பற்றி இரட்டை ஆசிரிய விருத்தத்தில் பல கவிதைகள் எழுதி எல்லாவற்றையும் ஒரு நாள் கிழித்துப் போட்டுவிட்டார். அந்தக் கவிதைகளை என்னிடமும் காட்டினார்.

இவர் "படித்தால் மட்டும் போதுமா' என்ற படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார். இவரை அறிமுகப்படுத்தியவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விசுவநாதன். தொடக்கக் காலத்தில் பூலாங்குளம் மாயவநாதன் என்றுதான் இவர் பெயரைத் திரையில் போடுவார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பூலாங்குளம் என்பது இவர் சொந்த ஊர்.

""தண்ணிலவு தேனிறைக்க தாழைமரம் நீர்தெளிக்கக்
கன்னிமகள் நடைபயின்றே சென்றாள் - இளம்
காதலனைக் கண்டுநாணி நின்றாள்''
இதுதான் இவர் எழுதிய முதல் திரைப்பாடல்.
இரவு விடுதியில் ஆடுகின்ற ஒரு பெண் பாடுவதுபோல
""பூவுக்கு நிறத்தை நான் காட்டுவேன்
பொன்னுக்கு மெருகை நான் ஊட்டுவேன்''
என்று ஒரு படத்திலே எழுதியிருப்பார்.
""சித்திரப் பூவிழி வாசலிலே வந்து
யார் நின்றவரோ 
யார் நின்றவரோ அவர்
தான் என்னவரோ'' 

என்ற பாடலும் இவர் எழுதிய பாடல்தான். மெல்லிசை மன்னர்கள் விசுவநாதன் ராமமூர்த்தி இசையில் இதயத்தில் நீ" என்ற படத்தில் இந்தப் பாடல் இடம் பெற்றது. இதில் இவர் பாடல் எழுதுவதற்கும் எம்.எஸ்.வி. தான் காரணம். இதே படத்தில் தான் விசுவநாதன். ராமமூர்த்தி இசையில் முதன் முதல் வாலியும் எழுதினார். இதை ஏற்கெனவே வாலியைப் பற்றி எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.

நடிகை சந்திரகாந்தாவுக்காகப் "பொன்னியின் செல்வி' என்றொரு நாட்டிய நாடகம் எழுதினார் மாயவநாதன். பாடல்கள் அருமையாக அமைந்திருந்தன. நாட்டியப் பேரொளி பத்மினிக்காக கவிஞர் கு.மா. பாலசுப்பிரமணியம் சகுந்தலை" என்ற நாட்டிய நாடகத்தை எழுதினார். அதுவும் சிறப்பாக இருந்தது என்றாலும் மாயவநாதன் எழுதிய பாடல்கள்தாம் என் நெஞ்சைத் தொட்டன. 

""எல்லாம் தெரியும் எனக்கு - கதையில்
இன்றுமொருதிருப்பம் இருக்கு''

என்ற இரண்டு வரி இன்னும் என் இதயத்தில் இருக்கிறது. இரண்டு நாட்டிய நாடகங்களும் தேனாம்பேட்டை எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரிக் கலையரங்கத்தில் தான் அரங்கேற்றம் செய்யப்பட்டன. இரண்டு நாடகங்களையும் அங்கே பார்த்திருக்கிறேன். அதனால்தான் எது சிறந்தது என்று என்னால் சொல்ல முடிகிறது.

மாயவநாதன் கலைஞருக்கு மிகவும் பிடித்தமான கவிஞர். மேகலா பிக்சர்ஸ் தயாரித்த "பூம்புகார்' திரைப்படத்தில் இவர் எழுதிய,

""தப்பித்து வந்தானம்மா - பாவம்
தனியாக நின்றானம்மா - காலம்
கற்பித்த பாடத்தின் அடிதாங்க முடியாமல்
தப்பித்து வந்தானம்மா''
என்ற பாடல் நம் நெஞ்சில் நிற்கும் பாடல். இதில் சரணத்தில் வருகிற
""பொய்நெல்லைக் குத்தியே பொங்க நினைத்தவள்
கைநெல்லும் விட்டானம்மா' ' 
என்ற வரியை யாரும் மறக்க முடியாது.
அதே படத்தில் கலைஞர் எழுதிய
""வாழ்க்கையென்னும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
வாலிபரின் மனதினிலே மறக்க வொண்ணாவேதம்''
என்ற பாடலும் நம்மால் மறக்க முடியாத பாடல்தான்.
தத்துவப் பாடல்களை எழுதிவதில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தைப் போன்றவர் மாயவநாதன். "என்னதான் முடிவு' என்ற படத்தில் ஆர். சுதர்சனம் இசையில் இவர் எழுதிய ஓர் பாடல்,
""பாவியென்னை மறுபடியும் பிறக்கவைக்காதே - செய்த
பாவமெல்லாம் தீருமுன்னே இறக்கவைக்காதே
பாவத்திற்கும் கூலிதன்னை நிறுத்தி வைக்காதே - எனைப்போல்
பாவிகளை இனியேனும் படைத்து வைக்காதே''
இது பல்லவி.
""வஞ்சகனின் உடலெல்லாம் வாதம்வர வேண்டாமோ
வாய்நிறைந்த பொய்யனுக்கு சூலம்வர வேண்டாமோ
காலழுகிக் கையழுகிக் காடுசெல்ல வேண்டாமோ
காதகனைக் கண்டு மக்கள் காறித் துப்ப வேண்டாமோ
உச்சிமரக் கிளையில் நின்று உயிர்வேரை அறுத்தவன் நான்
பச்சை இளங்கொழுந்தைக் கிள்ளி பாழ்நெருப்பில் எறிந்தவன்நான்
இப்பிறவி முடிவதற்குள் என் கணக்கை முடித்திடம்மா''
என்று இறுதிச் சரணத்தில் சில வரிகள் வரும். கே.எஸ். கோபாலகிருஷ்ணன் டைரக்ட் செய்த படம்.
இப்படிப்பட்ட வார்த்தைகளை அறச் சொற்கள் என்று பல டைரக்டர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். கே.எஸ். கோபாலகிருஷ்ணன் பாடலாசிரியராகவும் இருந்தவர் என்பதால் ஏற்றுக் கொண்டார்.

(இன்னும் தவழும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT