முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தேர்வா? பயம் வேண்டாம்!

கல்வியாண்டில் இறுதியில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டவுடனேயே மாணவர்களுக்கு மட்டுமின்றி, பெற்றோருக்கும் தேர்வு அழுத்தம் வந்துவிடும்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:35 PM
பகிர்:

கல்வியாண்டில் இறுதியில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டவுடனேயே மாணவர்களுக்கு மட்டுமின்றி, பெற்றோருக்கும் தேர்வு அழுத்தம் வந்துவிடும். மாணவர்களுக்கோ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டுமென்று கவலை. பெற்றோருக்கோ தங்களுடைய பிள்ளைகள் தேர்வில் வெற்றி பெறவேண்டுமென்ற கவலை. இந்த கவலையே வேண்டாம். படித்ததை நினைவில் வைக்கவும், நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளவும் சில டிப்ஸ்:

தினசரி உடற்பயிற்சி

படிப்பில் சிறந்து விளங்க தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். பிரிட்டனில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வின்படி தினமும் உடற்பயிற்சி செய்வது படிப்பதையும் கேட்பதையும் மூளையில் பதிய வைக்க உதவும் என தெரிய வந்துள்ளது. 

நினைவாற்றலுக்கும், யோசிப்பதற்கும் தேவையான ஆக்ஸிஜனை அதிகப்படுத்தி மூளைக்கு அனுப்ப உடற்பயிற்சி உதவுவதோடு மன அழுத்தத்தையும் குறைத்து மூளை ஒரே சீராக இயங்கவும் உதவுகிறது.

ஆரோக்கியமான உணவு

உணவை பொறுத்தவரை எப்போதும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது நல்லது. தேர்வு நேரங்களில் பல்வேறு காரணங்களுக்காக முறையாக சாப்பிடாமல் உணவைத் தவிர்ப்பது நல்லதல்ல. இது சோர்வை அதிகரிக்கும். சத்தான காய்கறிகள், பழங்கள், தானிய உணவுகள், மீன் போன்றவற்றை உணவாக உட்கொள்ளலாம். இவை தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதோடு திடநம்பிக்கை, நினைவாற்றலை தருவதோடு, மூளையும் சிறப்பாக இயங்கும்.

தினசரி உணவுடன் மூலிகைகள்

ஆயுர்வேத தகவல் மற்றும் நவீன ஆய்வுகளின்படி பிரம்மி, வல்லாரை போன்ற மூலிகைகள் உங்கள் திறமை, நினைவாற்றல், விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்வதாகத் தெரிய வந்துள்ளது. இவற்றை டானிக், மாத்திரைகளாக உட்கொள்வது மனதை ஒருமைப்படுத்துவதோடு தெளிவையும் வளர்க்கும். ஆற்றலையும் வளர்க்கும். தொடர்ந்து மூலிகைகளை பயன்படுத்துவதால் மூளையில் உள்ள திசுக்கள் அதிகரித்து மாணவர்கள் எதிர்பார்க்கும் வெற்றியைத் தரும்.

நல்ல தூக்கம்

தேர்வுக்கான முயற்சிகளில் ஈடுபடும்போது மாணவர்கள் தங்கள் உடலுக்குத் தேவையான உறக்கத்தை புறக்கணிப்பதுண்டு. தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் ஒவ்வொரு இரவும் குறைந்தது 7-8 மணி நேரம் உறங்குவது நல்லது. இது உடல் ஆரோக்கியமாக இருக்கவும், மனதை ஒருநிலைப்படுத்தவும் உதவும். தூக்கத்திற்கும் நினைவாற்றலுக்கும் இடையே வலுவான தொடர்பு உள்ளதாக ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.