முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கார் நிக்கோபார் நாடோடி கதை: காருண்ய கடல் மீன்கள்!

முன்னொரு காலத்தில் ஒருநாள் காலை இரண்டு பெண்கள் அவர்கள் வசித்த தீவில் கடற்கரைக்குச் சென்றார்கள்.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 11:55 AM
பகிர்:

முன்னொரு காலத்தில் ஒருநாள் காலை இரண்டு பெண்கள் அவர்கள் வசித்த தீவில் கடற்கரைக்குச் சென்றார்கள். சில்லென்ற அலைகள் கால்களை வருட நின்ற பொழுது அவர்களில் ஒருத்தியின் கையிலிருந்த கத்தி ஒன்று நழுவி கடலில் விழுந்துவிட்டது. அதைப் பார்த்துவிட்ட ஒரு பெரிய மீன் அதை விழுங்கிவிட்டது. மிக அகண்ட வாயும் அடர்ந்த செதில்களும் கொண்ட மீன் அது.
 "அடடே! நான் உடனே குதித்து கத்தியைக் கண்டுபிடிக்க வேண்டும்'' என்று சொல்லியவாறு கத்தியை இழந்த பெண் கடலில் குதித்து கத்தியைத் தேடியபோது ஒரு பெரிய மீனின் வாய்க்குள் நுழைந்து அதன் வயிற்றுக்குள் இறங்கிவிட்டாள்.
 அவள் தோழியோ கிளிஞ்சல்களைப் பொறுக்கி வைத்துக் கொண்டு கரையில் விளையாடிக் கொண்டிருந்தவள், "இத்தனை நேரம் இவள் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறாள் நீருக்குள்?'' என்று வியந்தாள். தன் தோழியைக் கண்டுபிடிக்க இப்போது அவளும் கடலில் குதித்தாள். அவ்வளவுதான். அவளும் அவள் தோழி மாதிரியே அந்த மீனின் வாய்க்குள் நழுவி அதன் வயிற்றுக்குள்மாட்டிக் கொண்டாள்.
 அந்த மீனோ இப்போது வேகமாக நீந்தி நடுகடலுக்கு வந்து சேர்ந்தது. அதன் வயிற்றுக்குள் இரண்டு பெண்களும் சந்தித்தார்கள். அதோடு கடலில் விழுந்த கத்தியும் அந்த வயிற்றுக்குள் இருந்ததைக் கண்டார்கள்.
 கொஞ்ச நேரத்தில் அவர்களில் ஒருத்திக்கு நல்ல பசி எடுத்தது.
 "ஐயோ! எனக்கு ரொம்ப பசிக்கிறது'' என்றாள் அவள். அதைக் கேட்ட அந்த மீன் "என்னது பசியா? என் ஈரலில் கொஞ்சம் வெட்டியெடுத்துச் சாப்பிடலாமே'' என்றது இரக்கத்துடன். அந்தப் பெண்களும் அப்படியே மீனின் ஈரலில் பெரிய துண்டாக ஒரு பகுதியை வெட்டியெடுத்து உண்டனர்.
 " என்னது, நீங்கள் சாப்பிடுவதற்கு அளவே இல்லையா?'' என்றது மீன்.
 " இல்லை, இல்லை'' என்பதே பெண்களின் பதில்
 அந்த மீன் பிறகு கடலில் பயணித்து வேறிடத்திற்கு வந்திருந்தது.
 மறுநாள் காலை பொழுது விடிந்தது. அந்தப் பெண்களுக்கு பசியெடுத்தது.
 அந்த மீனோ மீண்டும் அவர்களுக்கு உதவ முன் வந்தது. "பரவாயில்லை. இன்னும் கொஞ்சம் ஈரலை வெட்டியெடுத்து பசியாறுங்கள்'' என்றது அது.
 அந்தப் பெண்களும் அவ்வாறே செய்தனர்.
 " ஓ ... இது மிகவும் அளவு மீறிய காரியம்'' என்று வலியில் துடித்த மீன் கதறியே விட்டது.
 அப்படி ஈரலை வெட்டிச் சாப்பிடும் செயல் தொடர்ந்து பலமுறை நிகழ்ந்தது. அதன் விளைவாக அந்த மீன் மிகவும் மெலிந்து, பலமிழந்து சுருங்கிப் போயிற்று. எனினும் கொஞ்சநேரம் கழித்து கடலில் இருந்த ஒரு பாறையை நோக்கிப் போய் அதன்மேல் வாந்தி எடுத்தது அந்த மீன். உள்ளே இருந்த இரண்டு பெண்களும் பாறையின் மேல் துப்பப்பட்டு விழுந்தனர். மீன் அங்கிருந்து நீந்திச்சென்று மறைந்து விட்டது.
 சிறிது நேரத்தில் ஒரு சுறா மீன் அந்தப் பெண்களை நோக்கி வருவது தெரிந்தது. பெண்கள் அச்சத்தில் நடுங்கினர். அருகில் வந்த சுறாவோ, " பயப்படாதீர்கள் பெண்களே! சில நாட்களாகவே உங்களைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். வாருங்கள். என் முதுகின்மேல் ஏறிக்கொள்ளுங்கள். உங்களைக் கரை சேர்த்துவிடுகிறேன்'' என்று மிகவும் கனிவோடு கூறிற்று.
 அந்தப் பெண்களும் அதன் முதுகின்மேல் ஏற முயற்சித்தார்கள். ஆனால் அதன் முதுகோ மிகவும் வழு வழுப்பாக இருந்ததால் அவர்கள் வழுக்கி வழுக்கி நீரில் விழுந்தார்கள். இப்போது சுறா மீன் சொல்லிற்று:
 "என் முதுகைக் கொஞ்சம் தேய்த்துவிடுங்கள். பிறகு ஏறி உட்காருங்கள்''
 பெண்களும் அதன் முதுகைத் தேய்த்துவிட்டு பிறகு அதன்மேல் ஏறி உட்கார்ந்தார்கள். கருணை உள்ள அந்தச் சுறாவும் அவர்களைச் சுமந்து நீந்தி, அவர்கள் கடற்கரையில் இருந்த அதே இடத்திற்கு அவர்களைக் கொண்டுவந்து சேர்த்தது.
 அவர்கள் இருவரும் மகிழ்ச்சியோடு வீடு திரும்ப, அந்தச் சுறாவும் தன்னிடத்திற்குத்
 திரும்பிற்று.
 - கன்யாமித்ரன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.