ஆர்.சண்முகசுந்தரம்-எம்.வி. வெங்கட்ராம்   
ஞாயிறு கொண்டாட்டம்

என்றும் இருப்பவர்கள்! - 23

நான் படித்துள்ள வரையில் பூரண பொலியுடன் கலையம்சங்கள் கொண்ட சிறந்த ஒரு கிராமிய நாவல் என்று ஆர்.சண்முகசுந்தரத்தின் நாகம்மாளைத்தான் சொல்ல வேண்டும்.

சா.கந்தசாமி

நான் படித்துள்ள வரையில் பூரண பொலியுடன் கலையம்சங்கள் கொண்ட சிறந்த ஒரு கிராமிய நாவல் என்று ஆர்.சண்முகசுந்தரத்தின் நாகம்மாளைத்தான் சொல்ல வேண்டும். கொங்கு நாட்டுக் கிராமத்து வாழ்க்கை அந்த நாவலில் அப்படியே உருவம் பெற்றிருக்கிறது. அந்த வாழ்க்கையைப் போலவே சண்முகசுந்தரத்தின் நடையும், கொங்கு நாட்டு மணத்தை அள்ளி வீசுகிறது

-க.நா.சுப்ரமணியம்


எந்த மொழியிலும் எழுதப்படுவதெல்லாம் இலக்கியம் இல்லை. அது கவிதையாகட்டும், சிறுகதை, நாவலாகட்டும் இலக்கியமாவதற்கு தனித்திறமைகளும், மொழிக்கு உள்ளன. இன்னொரு மொழியும், உளவியலும், உணர்ச்சியும் தேவையாக இருக்கிறது. அது கற்று அறிவதில்லை. கலை மனத்தில் இருந்து அது ஊற்றாக வந்து எழுத்தை கலையாக்கிறது. அது அறியப்பட்டாலும் சரி;  அறியப்படாவிட்டாலும் அது இருக்கவே செய்கிறது.

அதனைச் சிலர் நுட்பமாக அறிந்து கொண்டு எடுத்து சொல்கிறார்கள். அதோடு கவிதைகளைத் தொகுத்து நூலாக்கித் தருகிறார்கள். அது பழைய மரபு என்றாலும் தொடர்ந்து வருகிறது. சிறுகதைகள், நாவல்களைப் பெயர் சொல்லிப் படிக்க வைக்கிறார்கள். அதன் நோக்கம் சிறந்ததொரு படைப்பை எல்லோரும் படிக்க வேண்டும்; இலக்கிய அனுபவம் பெற வேண்டும் என்பதுதான். அதில் முன்னே இருந்தவர் க.நா.சு என்றறியப்படும் க.நா. சுப்ரமணியம். அவர் தன் படிப்பில் இருந்து ரசனையின் வழியாக இவையெல்லாம் தமிழர்கள் படிக்க வேண்டிய நவீன படைப்புகள் என்ற பட்டியல் இட்டு வந்தார்.

அவர் பட்டியலில் கவிதையென்றால் பாரதியார் இடம் பெற்றார். சிறுகதைகளில் புதுமைப்பித்தன், மெüனி தவறாமல் இருந்தார்கள். நாவல் பட்டியலில் ஆர்.சண்முகசுந்தரம் இருந்தார். அவரின் நாவல் 1942-ஆம் ஆண்டில் வெளி வந்த நாகம்மாள். கொங்கு நாட்டு வாழ்க்கையை அவர்களின் பேச்சுத் தொனியிலேயே சொல்லும் நாவல். அது பத்திரிகை எதிலும் பிரசுரமானதில்லை. புத்தகமாகவே வெளிவந்தது. அது எடுத்துச் சொல்லப்பட்டதால் இலக்கிய அங்கீகாரம் பெற்றது என்பது இல்லை. அது இலக்கியத்தரமாகவே எழுதப்பட்ட நாவல். படித்தவர்கள் அறிந்து கொண்டார்கள். நாகம்மாள் நாவலை படிக்க விமர்சகர் என்ற முறையில் க.நா.சுப்ரமணியம் சிபாரிசு மட்டும் செய்தார். தன் முதல் நாவலிலேயே அவர் இலக்கிய அங்கீகாரம் பெற்றுவிட்டார்.

ஆர்.சண்முகசுந்தரம் தன் நாவல்கள் வழியாக எனக்கு நன்கு அறிமுகமாகி இருந்தார். நாகம்மாள் நாவலின் வசீகரத்தால் கவரப்பட்டு, "பூவும் பிஞ்சும்' "அறுவடை', "இதயதாகம்' நாவல்களையும், அவர், இந்தி வழியாக மொழி பெயர்த்த சரத் சந்திரர் நாவல்களையும், தாரா சங்கர் பானர்ஜி எழுதிய "நிலத்தின் கீதம்', பஞ்சாபி கவியும், சிறுகதை எழுத்தாளருமான அம்ருதா பிரீதம் எழுதிய "பாடகி' குறுநாவலையும் படித்திருந்தேன்.

இலக்கிய நண்பரும், "கசடதபறவின் ஆசிரியருமான நா.கிருஷ்ணமூர்த்தி மயிலாப்பூர் கல்லுக்காரன் தெருவில் வசித்து வந்தார். பழங்காலத்து நாட்டு ஒடு வேய்ந்த திண்ணை வைத்த வீடு. நான் ஒரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நா.கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்கச் சென்றேன். திண்ணையில் அமர்ந்து கொண்டு என் நண்பரும் ஆர். சண்முகசுந்தரமும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

கிருஷ்ணமூர்த்தி, அவருக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். எனக்கொரு ஐயம், அவர் மொழி பெயர்ப்பு பற்றி இருந்தது. சரத் சந்திரர்  "அசலா' உட்பட பல பெரிய சிறந்த நாவல்களை அவர் மொழி பெயர்த்து இருக்கிறார். த.நா.குமாரசாமியும் மொழி பெயர்த்து உள்ளார். அது வங்க மொழியில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டது என்று புத்தகத்தில் போட்டிருந்தார்கள். ஆனால், சண்முகசுந்தரம் மொழி பெயர்ப்பில் மூலமொழி பற்றி ஒன்றுமில்லை.

அது பற்றி விசாரித்ததும், "நான் இந்தி வழியாகத் தான் இத்தனை நாவல்களையும் மொழி பெயர்த்தேன். "கலைமகள்' உட்பட பல பத்திரிகைகள் மொழி பெயர்ப்பை வெளியிட்டன. ஆனால், என் நாவல்களை வெளியிடவில்லை. சொந்தப் பதிப்பகம் ஆரம்பித்து நாவல்களை வெளியிட்டோம்' என்றார்.

""க.நா.சுப்ரமணியம் நாகம்மாள் நாவலை வியந்து கொண்டாடி வருகிறாரே நீங்கள் எழுதும் போதே நாவல் வெற்றி பெறும் என்று  கருதினீர்களா?''

""க.நா.சுப்ரமணியம், "நாகம்மாள்' பிரமாதமான நாவல், அப்படி இப்படி என்று எழுதியதைப் படித்து நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். இவ்வளவு சொல்ல நாவலில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. நாவலில் எம் மக்கள் இருக்கிறார்கள். ஆண்கள் போல பெண்களும் இருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள். பழக்கப்பட்ட மொழியில் பேசுகிறார்கள். அதைதான் நான் என் அறிவிற்கு எட்டிய வரையில் எழுதினேன். இத்தனைப் பாராட்டு பெறும் என்று கருதவில்லை'' என்றார்.

கிருஷ்ணமூர்த்தி தாயார் காபி கொண்டு வந்து கொடுத்தார். மூவரும் காபி அருந்தி விட்டு மேலும் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அதன் பின்னர் தியாகராயநகரில் "கலைஞன்' பதிப்பகத்தில் அவரைச் சந்தித்து வந்தேன். மாலை நேரமென்றால்  கீதா ஒட்டலுக்கு அழைத்துச் சென்று போண்டா, காபி வாங்கி கொடுப்பார். புத்தகங்கள் வெளிவரவும், அதன் மூலம் வருமானம் பெறவும் "கலைஞன்' மாசிலாமணி உதவி செய்து வந்தார் என்பதைப் பின்னால் அறிந்து கொண்டேன்.

1966-ஆம் ஆண்டில் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி வாசகர் வட்டம் "மாயத்தாகம்' என்ற புதிய நாவலை வெளியிட்டது. அதற்கு சிறிய அளவில் ஒரு வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. சண்முகசுந்தரம் பேச மறுத்துவிட்டார். அவர் எப்பொழுதும் கதர் வெள்ளை வேட்டி, அரைக்கை, கதர் சட்டைப் போட்டுக் கொண்டு கையில் வெற்றிலைப் பெட்டி வைத்துக் கொண்டிருந்தார்.

நாகம்மாள்  கிராமத்து விவசாயிகளின் குடும்பத்து கதை. ஓரு குடும்பத்தை வைத்துக்கொண்டு பல குடும்பங்களில் விதவைப் பெண்களின் ஆசாபாசங்கள் பற்றி சொல்கிறார். பிரச்னைகள் சொத்து, குடும்பம் பற்றி ஏற்படும் போது பஞ்சாயத்து வருகிறது. பேசி தீர்க்க முயற்சி செய்கிறார்கள். வார்த்தை முற்றிப் போக தடியைப் பயன்படுத்துகிறார் நாகம்மாள் மைத்துனர். அது ஓர் உயிரைப் பறித்து விடுகிறது. நாவல் முடிவுக்கு வந்துவிடுகிறது.

நாகம்மாள் நாவலுக்குக் கொலை அவசியமா என்ற கேள்வியை இலக்கிய விமர்சனங்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள் கேட்டுக்கொண்டே வருகிறார்கள். அந்தக் கேள்வி எழுத்தாளர் சுந்தர ராமசாமிக்கு வந்தது. அது பற்றி, நாகம்மாளின் அபிலாஷை கொலையில் முடிந்தது. சண்முகசுந்தரத்தை நாகம்மாள் நேரில் சந்திக்கக்கூடுமென்றால், "ஏனுங்கோ இப்படி ஆச்சு' என்று கேட்கக்கூடும். சண்முகசுந்தரத்தின் பதில் "ஒண்ணும் தெரியலீங்கோ' என்றே இருக்கும் என்று எழுதியிருக்கிறார்.

சண்முகசுந்தரம் தனக்குப் பழக்கமான கிராமத்தையும், மக்களையும், அவர்களின் அகபுற வாழ்க்கையில் கொண்டிருக்கும் ஈடுபாடுகள் பற்றியும், உளவியல் ரீதியில் எழுதியிருக்கிறார். கிராம மக்கள் அவர்கள் பேச்சு மொழி எழுத உகந்தது என்று தமிழில் முதன்முதலாக எழுதி நிலை நாட்டியவரும் அவரே. அவர் நாகம்மாளைத் தொடர்ந்து சொந்தமாக இருபதுக்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியிருக்கிறார்.

அவர் எழுதி பிழைத்த எழுத்தாளர். எனவே நிறைய எழுதினார். மொழி பெயர்ப்புகள் பலவும் செய்தார். அவர் மொழி பெயர்ப்புகளில் ஒன்று சத்தியஜித்ரே படமாக எடுத்த "பதேர்பாஞ்சாலி'. அது விபூதிபூஷண் பந்தோபாத்தியாயா என்பவரால் வங்க மொழியில் எழுதப்பட்ட நாவல். அது இந்தி வழியாக மொழி பெயர்க்கப்பட்டது. "பதேர் பாஞ்சாலி' சினிமா படமாக வெற்றி பெற்ற அளவிற்கு அது வங்காள மொழியிலோ; இந்தி மொழியிலோ; தமிழ் மொழி பெயர்ப்பிலேயோ வெற்றி பெறவில்லை.

சண்முகசுந்தரம் போலவே எழுத்தை நம்பி வாழ்ந்த எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம். கும்பகோணத்துக்காரர். செüராஷ்டிரா. சுகவாசி. பதினாறு,  பதினெழு வயதில் தமிழில் சிறுகதைகள் எழுதியவர். கு.ப,ராஜகோபாலன், மெüனி, க.நா.சுப்ரமணியம், பி.எஸ்.ராமையா, சி.சு.செல்லப்பா, தி.ஜானகிராமன் என்று பலரோடு நண்பராக இருந்தவர்.

மெüனிக்குத் தமிழே எழுதத் தெரியாது என்று பகிரங்கமாக அறிவித்தவர், சொந்தமாக "தேனீ' பத்திரிகை நடத்தியவர். தி.ஜானகிராமனுக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர். ஜானகிராமன் மனந்திறந்து பாராட்டிய எழுத்தாளர் என்றால் அது வெங்கட்ராம்தான்.

கும்பகோணத்தில் பெருவாழ்வு வாழ்ந்தார். குடும்பத் தொழிலாக ஜரிகை வியாபாரம் இருந்தது. இலக்கியம், பத்திரிகை, எழுத்தாளர் உளவு என்பதில் மூழ்கிப் போனார். தொழில் கைவிட்டு போய் விட்டது. எழுத்தை இறுகப் பற்றிக்
கொண்டார். 

அவர் பெரிய கலா ரசிகராக இருந்தார்கள். எனவே திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணத்தில் இருந்த கவிஞர்கள், எழுத்தாளர்கள் அவர் வீட்டில் கூடினார்கள். அவர்களில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியவர்கள் கரிச்சான் குஞ்சு, திருலோக சீதாராம், தி.சா.ராஜீ, தஞ்சை பிரகாஷ். அவர் எழுத்தாளர்களில் வயது வித்தியாசம் பார்த்தது இல்லை. எழுதுவதற்கு வயது இல்லை என்ற கொள்கையாளர் போலவே நடந்து கொண்டார்.

அவருக்கு பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டன. குடும்பத் தொழிலான ஜரிகை வணிகம் கைவிட்டுப் போனதாக இருந்தது. தன் தொழில் எழுதுவது தான் என்று சென்னைக்கு வந்தார். தியாகராய நகரில் இருந்த கலைஞன் பதிப்பகத்திலும் குயிலன் பதிப்பதிக்கத்திலும் தங்கிக் கொண்டு கீதா ஒட்டலில் சாப்பிட்டுக் கொண்டு இரவு பகல் என்று பார்க்காமல் சிறுவர்கள், பெரியவர்கள் என்று பலருக்கும் தேவைப்படும் புத்தகங்கள் எழுதினார். அவர், சரித்திர நாயகர்கள் வாழ்க்கை வரலாற்று நூல்களை வெகு சுருக்கமாக எழுதினார்.

"ஒரு நாளைக்கு இரண்டு புத்தகங்கள் கூட எழுதியிருக்கிறேன்' என்று ஒரு முறை குறிப்பிட்டார். ஆனால் வெகு குறைவாகப் பணம் பெற்றது பற்றி அவர் குறிப்பிட்டதே இல்லை. 

மனித மனத்திற்கும் உடம்புக்கும் சம்பந்தமில்லை. அதாவது உடம்புக்குள் தான் மனம் இருக்கிறது. ஆனால் இரண்டும் வேறு வேறு. மனம் உடலால் பாதிக்கப்படுவதில்லை என்று பல கவிஞர்கள் எழுத்தாளர்கள் மகத்தான படைப்புகளை எழுதியே நிலை நாட்டி வந்திருக்கிறார்கள்.

வெங்கட்ராமுக்கு இருபதாண்டுகளுக்கு மேலாக காதுக்குள் குடைச்சல் இருந்து வந்தது. அவர் எவ்வளவோ வைத்தியம் செய்து கொண்டார். ஆனால் காதின் உள்ளே எழும் சப்தமும், இரைச்சலும் அடங்கவே இல்லை. முதலில் வருத்தப்பட்டார். பின்னால் அதனையே ஒரு வரமாக எடுத்துக் கொண்டார்கள். காது வழியாக மனத்தில் ஏற்பட்ட ஒலி வகைகளைப் பிரித்தும், பகுத்தும் "காதுகள்' என்று நாவல் எழுதினார்.

1993-ஆம் ஆண்டில் காதுகள் நாவலுக்காக வெங்கட்ராமுக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. அவர் பெரு மகிழ்வடைந்தார். அப்பொழுது அவருக்கு எழுபத்து மூன்று வயதாகி இருந்தது. இரண்டாண்டுகள் கழித்து அவரை ஓர் இலக்கியக் கருத்தரங்கில் சந்தித்தேன்.

என் கைகளைப் பிடித்துக் கொண்டு ""சென்ற ஆண்டு சாகித்ய அகாதெமி பரிசுக்கு நீதிபதியாகச் சென்றேன். உன் புத்தகங்கள் இருக்கிறதா என்று பார்த்தேன். கண்களில் படவில்லை'' என்றார்.

""அதற்கென்ன நீங்கள் பரிசு கொடுக்க நினைத்ததே பாக்கியம்'' என்றேன்
""உனக்கு விரைவில் சாகித்ய அகாதெமி பரிசு கொடுக்கும்''  என்று கைகளைப் பிடித்துக் குலுக்கினார்.

(அடுத்த இதழில்..

லா.ச.ராமாமிருதம், கவி.கா.மு.ஷெரீப்)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அபார வெற்றி - புகைப்படங்கள்

டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா சாதனை!

எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க ரூ. 82 கோடி தேவையா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT