இதழியல் ஆலவிருட்சம்
எண்ணத்துக்கும் எழுத்துக்கும் களம் அமைத்துத் தந்து செயலுக்கு ஊக்கம் அளித்து ஆக்கம் சேர்க்கும் இதழியல் இயக்கம் தினமணி; வாழையடி வாழையென வாரிசுகளைத் தமக்கெனப் பெற்று வளர்கிற இதழியல் ஆல
எண்ணத்துக்கும் எழுத்துக்கும் களம் அமைத்துத் தந்து செயலுக்கு ஊக்கம் அளித்து ஆக்கம் சேர்க்கும் இதழியல் இயக்கம் தினமணி; வாழையடி வாழையென வாரிசுகளைத் தமக்கெனப் பெற்று வளர்கிற இதழியல் ஆல விருட்சம். அதன் விழுதுகளின் விழுதுகளாக வளர்ந்து வரும் லட்சக்கணக்கான வாசகர்களுள் எளியேனும் ஒருவன்.
நாளிதழ் பக்கங்களிலும் கூடுதலான நன்மதிப்புக்குரியவை, தினமணியின் இணைப்பிதழ்கள். பல அரிய பெரிய தகவல்களின் வரலாற்றுப் பேழைகள். ஜெயகாந்தன், லா.ச.ரா, பிரபஞ்சன் என்று நட்சத்திர எழுத்தாளர்களின் முத்திரை பெற்ற படைப்புகள், பாரதி ஆய்வாளர்கள் ரா.அ.பத்மநாபன், சீனி.விசுவநாதன், பெ.சு.மணி உள்ளிட்டோரின் ஆய்வுப் பதிவுகள், ஐராவதம் மகாதேவன் போன்றோரது வரலாற்றுப் பதிவுகள் எல்லாம் தினமணி சுடரில், கதிரில் பெற்றுக்கொள்ள இயலும். பத்திரப்படுத்தி வைத்திருக்கும் பழுப்பேறிய அத்தாள்களிலிருந்து ரத்தினங்கள் ஒத்த குறிப்புகளை, ஆய்வுக்காகப் பெற்ற அனுபவங்கள் பலருக்கும் உண்டு.
பயிலும் காலத்திலேயே என்னையும் ஓர் படைப்பாளனாக அறிமுகப்படுத்திய இதழ்களில் தினமணிக்குச் சிறப்பிடம் உண்டு. கல்லூரிப் பருவத்துக்கு முன்னர் வரை சென்னைப் பட்டணத்தை, வெள்ளித்திரைகளில் மட்டுமே கண்டிருந்த குக்கிராமவாசிகளுள் நானும் ஒருவன். இலக்கியப் போட்டிகளுக்காக, சென்னைக் கம்பன் கழகத்துக்கு வந்து பங்கேற்றுப் பரிசுகளை வென்றது பலமுறை. என்றாலும் முதன்முறை, அக்கழகத்துச் சுழற்கோப்பைகளை வென்ற தருணத்தை நிரந்தரமாக்கிப் பெருமைப்படுத்தியது தினமணிதான். தொடர்ந்து, எழுதவும் இயங்கவும் வாசகஞானத்தை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்பளிக்கும் தாய்மடி, "தினமணி'.
Advertisement
வல்லமை மிக்க நல்லாசிரியர்கள் இருந்து வளர்த்த இவ்விதழின் தலைமைப் பொறுப்பினை கி.வைத்தியநாதன் ஏற்ற காலத்தில் இருந்து, தினமணி எடுத்துவைத்த அடிச்சுவடுகள், இந்திய- தமிழ் இதழியலின் வரலாற்றுச் சுவடுகள். அவர்தம் தலையங்கமும், அதற்குத் தேர்வாகும் "திருக்குறளும்' தினமணியின் முத்திரைப் பகுதிகள்.
நடுப்பக்கக் கட்டுரைகள், சமகாலச் சிக்கல்களை, இதழியல் அரங்கில் எடுத்து விவாதிக்கும் சிந்தனைத் தொடர் ஓட்டங்கள். வாசகர்களைப் பார்வையாளர்
களாக ஆக்கி ஓரத்தில் நிறுத்திவிடாமல் நடுவுநிலைபேண, நடுப்பக்க விவாதத்தில் பங்கேற்க வைத்து எழுத வைக்கும், "விவாதமேடை"க்கான தலைப்பையும் வாசகரே தருவது சிறப்பு.
எழுத்துக்கும் வாசிப்புக்கும் இடையில் "சொல்லுக்கும்' முக்கியத்துவம் கொடுத்து, தினமணி நடத்திய இலக்கியத் திருவிழாக்கள் இதழியல் வரலாற்றின் இன்றியமையாத பக்கங்கள்.
அனைத்துத் தமிழ் அமைப்புகளையும் இந்தியத் தலைநகரில் "கூட்டி ஒன்றெனச் செய்த' மாட்சியும், பல்வேறு பொருண்மைகளில், ஒரு மாநாடு போலத் தமிழகத் தலைநகரில் "இலக்கியத் திருவிழா' எடுத்த காட்சியும் நிலைபேறுடையவை.கோவையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நிகழத் தூண்டியதோடு அதனை ஒட்டிச் சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டும், மாநாட்டுச் சிறப்பு இணைப்பிதழ்களைத் தந்தும் வரலாறு படைத்திருக்கிறது. அண்ணா நூற்றாண்டு மலர், ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் சிறப்பு மலர் என. ஆளுமைகள் குறித்தும் மலர்கள் தந்திருப்பது இதன் தனிச்சிறப்பு.
பாரதியார் கனக. சுப்புரத்தினத்தைத் தனது கவிதாமண்டலத்தில் இருத்தி, "எழுக புலவன் நீ' என்று காட்டியதுபோல், ஓவியப் புலவரான நாமக்கல் கவிஞரை, "காவியப் புலவராக மெச்சியதைப்போல், வாரம் ஒரு கவிஞரைத் தேடி, மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நற்பணியைச் செய்கிறார் கலாரசிகன்.
தமிழ் இதழியல் இயக்கத்தின் தேசியத்தந்தையாகிய மகாகவி பாரதியின், "நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்' என்ற கவிமுழக்கத்தைக் கொள்கை முழக்கமாகக் கொண்டு நாளும் வெற்றி நடைபோடும், "தினமணி' இன்னும் பல அரிய சாதனைகளை நிகழ்த்தி நூற்றாண்டு காணப்போகும் நன்னிமித்தத்தின் அடையாளமாகவும் அடித்தளமாகவும் விளங்க இருக்கிறது. என்றென்றும் நிலைத்துநிற்கும் அற்புதச் சிந்தனைகளை நற்செயல்கள் புரியத் தூண்டும் வல்லமையை, ஒளிவளரும் தமிழ்வாணி, தினமணிக்கு அருள் புரிவாளாகுக.பேராசிரியர் கிருங்கை சேதுபதி, தமிழ்த்துறை தலைவர்,பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, புதுச்சேரி.